Thursday, April 9, 2020

கண் பாடுகிறதா, வாய் பாடுகிறதா?

சுமார் 5 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள் யூ ட்யூபில் அந்தப் பாடல் காட்சியை என்றால் வேறெதுவும் சொல்ல வேண்டாமே? இத்தனைக்கும் 59 வருடம் முந்தைய பாட்டு.
“Tasveer Tere Dil Mein..” (Film: ‘Maya’ 1961)
கையைக் காலை உதறி ஆடாமல், துரத்திக் கொண்டு ஓடாமல், கட்டிக் கொள்ளாமல் காதல் உணர்வை அற்புதமாக ரசிக்கத் தர முடியும் என்று காட்டியிருப்பார்கள் மாலா சின்ஹாவும் தேவ் ஆனந்தும்.
மனம் ஆனந்தம் கொள்ளும்போது எழும் உடலின் உற்சாகத் துள்ளல்களை இயல்பாக ஆடியிருப்பார் மாலா சின்ஹா. She carries away the song like a swan. ஒரு பார்வையை வைத்துக்கொண்டு எத்தனை படாத பாடு படுத்த முடியும்? மாலாவைக் கேளுங்கள்.
அந்த ஆரம்பம்! மெல்ல நடந்து சென்று சுவரோரமாக நிற்கும் மாலா மெள்ளத் திரும்புகிறார், ஒரு மென் சிரிப்பு படர. "மனதில் உன் சித்திரத்தை..." என்று முதல் வரி பாடியபடி சுவரில் சித்திரம் வரையும் விரல்கள். நாணச் சிரிப்புடன் அடுத்த வரி. "எந்த நாளில் வரைந்தேனோ..." மடித்த விரல்களால் உதட்டோரமாக கன்னத்தைத் தாங்கியபடி மூன்றாம் வரி. "அது அள்ளித் தெளித்த வண்ணங்களுடன், கனவுகளின் கூட்டத்தில், அதனுடனேயே வாழ்கிறேன்!" என்று ஒரு வெட்டு! கண் பாடுகிறதா வாய் பாடுகிறதா? கண்டே பிடிக்க முடியாது.
Romantic பாடல்களின் கிங் ஆன தேவ் ஆனந்தையே ஓரம் கட்டி விடுகிறார் மாலா இந்தப் பாட்டில். ஏன்னா தேவ் பாடும் ரெண்டாவது சரணத்தில்கூட மாலாவின் அட்டகாச ரீயாக்‌ஷன்! வாழ்வின் விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கு, அதிலிருந்து மகிழ்ச்சிக்கு மாறும் உணர்வைப் படிப்படியாக, அழகாகச் சித்தரிக்கும் லாவகம்! அந்தக் கணத்தில் அனைத்தையும் மறக்க வைத்து நம்மையும் தொற்றிக் கொள்ளும் அந்த உற்சாகம்! 
இருபதடிக்கு இருபது இருக்குமா அந்த பால்கனி? அதான் ஒரே லொகேஷன். கலர் கூட இல்லை, ப்ளாக் அன் ஒயிட் இரவுக் காட்சியில் ஒளியும் நிழலும் விளையாடும் அழகு! (காமிரா: Rajendra Malone). துணி காயப்போட்டிருக்கும் கொடிக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக காமிராவும் மாலாவும் தாவும் அழகு! 2.19 வினாடியில் முகம்குனிந்து மாலா வீசும் புன்னகை! 
லதா, ரஃபி சில வருடம் சேர்ந்து பாடுவதை நிறுத்துவதற்கு சற்று முன் பாடிய பாடல்களில் ஒன்று. சரணத்தில் வரும் high pitch வரிகளைக் கவனியுங்கள். சிரமமான அதை இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பாட... சலில் சௌத்ரியின் ஆகச் சிறந்த இசை!
பாடல் காணொளி: https://www.youtube.com/watch?v=cBgk0Ho0xkk 

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் இனிமையான பாடல். மீண்டும் ஒரு முறை கேட்டு ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!