Saturday, April 25, 2020

நெஞ்சில் குடியிருக்கும் இசை...


“நெஞ்சில் குடியிருக்கும், அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?”
இந்த ‘இரும்புத் திரை’ சூப்பர் ஹிட்டுக்கு இசையமைத்தவர் யாரென்று தெரியுமா?
எஸ் வி வெங்கட்ராமன். இன்று பிறந்தநாள்!
1948 -இல் சிட்டாடலின்  ‘ஞானசௌந்தரி’ வெளியானபோது அந்தப் படத்தின் பாடல் ஒன்று தமிழ்நாட்டையே கலக்கியது நினைவிருக்கும்: “அருள் தாரும் தேவமாதாவே! ஆதியே, இன்ப ஜோதியே!” இவர் இசையே.
பி யு சின்னப்பா, தண்டபாணி தேசிகர், டி ஆர் மகாலிங்கம், எம் எஸ் சுப்புலஷ்மி, எம் எல் வசந்தகுமாரி, பட்டம்மாள்… இவர் இசையில் பாடாத சங்கீத பிரபலம் இல்லை. 
புகழ் சேர்த்த படம், ‘மீரா.’ 11000 அடியில் 20 பாடல். அனைத்தும் எம்.எஸ். பாடினார். அதிலொன்று கல்கி எழுதிய ‘காற்றினிலே வரும் கீதம்..’ ‘Toot Gayi Man Bina..’ என்ற இந்திப் பாடலிசையின் இன்ஸ்பிரேஷனில் அமைத்த பிரசித்தி பெற்ற சிந்து பைரவி  ராக பாடல். கேட்டாலே உருகும் ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ..?’
வாராய் என் தோழி வருவதற்கு முன் கல்யாணங்களில் தவறாது ஒலித்த ‘புருஷன் வீட்டில் வாழப் போற பெண்ணே, தங்கச்சி கண்ணே..’ இவரது ‘பண்’ணே!  அந்த ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’யின் மற்றொரு பாடல் ‘சோலைக்குள்ளே குயிலு குஞ்சு..சும்மா சும்மா கூவுது!’
‘சிங்காரப் பைங்கிளியே பேசு!’ என்றொரு பாடல் ஏ எம் ராஜாவின் தேன் குரலில் ஒலிக்குமே, ‘மனோகரா’வில்? அது...
ஸ்ரீதர் வசனம் எழுதிய ஜெமினி நடித்த ‘மாமன் மகள்’ படத்தில் ‘ஆசை நிலா சென்றதே.. அபலைக் கண்ணீரில் நீந்தியே!’ விக்கித்துப் போன நாயகி சோகம் ஜிக்கியின் குரலில். (கால் நிமிடத்துக்கு ஷெனாயுடன் தொடங்கும் அந்தப் பாடலின் orchestration ஒரு ட்ரெண்ட் செட்டர்!) அது நினைவுக்கு வராவிட்டாலும் அதே படத்தில் சந்திரபாபு பாடிய ‘கோவா மாம்பழமே, மல்கோவா மாம்பழமே!’ மறக்காது.
அந்தக் கால சிவாஜி பாடல்களின் எந்த லிஸ்டிலும் தவறாது தலை நீட்டும் ‘பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா?’(‘மருத நாட்டு வீரன்)   ‘அறிவாளி’ படத்தில்  ‘ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்..’
சோழவந்தானில் பிறந்தவர்  நாற்பதுகளில் இசை ஆளவந்தார். மாஸ்டர் என்று அழைக்கப்படும் வெகு சிலர் இசையமைப்பாளர்களில் ஒருவர். 
ஐந்து வயதிலேயே அழகாக பாடுவார் தியாகராஜ கீர்த்தனைகளை. சங்கீத ஆசையில் சென்னை வந்தார்.  நாடக மேடையில் இசையமைத்ததோடு நாலைந்து படங்களிலும் நடித்தார்.  ஏற்பட்ட விபத்தில் படுக்கை வாய்ப்பட்டு நொந்தவருக்கு ‘நந்த குமார்’ படத்துக்கு இசை வாய்ப்பை இசைவாய்த் தந்தது ஏவிஎம். 

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்கள் சிறப்பு. நீங்கள் சொன்ன பாடல்கள் கேட்டு ரசித்திருக்கிறேன். நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!