“ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்தி"ருக்கும் யேசுதாஸ் குரலுக்கு “மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து..” என்று எசப்பாட்டு கொடுக்க இவர் குரல் தான் பொருத்தம். வீணைத் தந்தியின் மென்மையுடன் போட்டியிடும் அளவுக்கு ஒடுங்கியெழும் குரலில் ‘நான் மாமரத்தின் கீழிருந்து..’வை அவர் பாடும் நேர்த்தி! அந்த “உன்னாலே தூக்கம் போயாச்சு, உள்ளார ஏதேதோ ஆயாச்சு!” போயாச்சு -வை அவர் இழுக்கிற இழுப்பில் நம் கவலையெல்லாம் போயாச்சு! “மாமன் நினைப்பில் சின்னத் தா...யிதான்,” என்று இழுத்துப் பாடிவிட்டு “மாசக் கணக்கில் கொண்ட நோ...யிதான்” பாடும்போது நானோ மீட்டர் குறையாது.
ஸ்வர்ணலதா! இன்று பிறந்தநாள்.
இசைக் குடும்பம். இசை பயின்றவர். 3 வயதில் பாட ஆரம்பித்தவர். note உணர்ந்து noteworthy ஆகப் பாடக் கேட்கணுமா?
இவர் பாடல்களில் போவோமா ஒரு ஊர்கோலம்? “போவோமா ஊர்கோலம்.. பூலோகம்ம்ம்ம்ம்ம்…” எத்தனை ம்முக்கு நீண்டாலும் குறையாத மென்மை, உம் போட்டு கேட்க வைக்கும்.
எந்தப் பாட்டு? ‘காட்டு குயில் பாட்டு’ச் சொல்லவா? ‘கானக்கருங்குயிலை கச்சேரிக்கு வரச்’ சொல்லவா? ‘அக்கடா’ன்னு இவர் தொடங்கினால் ‘துக்கடா’ன்னு நாம விட முடியாம கட்டிப் போட்டு விடும் பாடல்கள்!
மாஸ்டர்பீஸ் “என்னுள்ளே..!" ஒரு பூ விரிவதைப் போல அந்த குரல் மெல்ல எழுகிறது. “என்னுள்ளே.. என்னுள்ளே..” என்று ராகத்தின் ஜீவனுக்குள் இட்டுச்செல்லும் குரல்! “கூடு விட்டு கூடு.. ஜீவன் பாயும் போது..” இந்த வரி! குரலின் சிலிர்ப்பில் தனிமையின் தவிப்பை உணர வைக்க முடியுமா? முடிகிறது. அடுத்த வரியில் அவரே பாடுவது போல ‘ஒரு வார்த்தை இல்லை கூற!’
“மாலையில் யாரோ..”வில் “நெஞ்சமே பாட்டெழுது, அதில் நாயகன் பேரெழுது..” என்று உச்ச ஸ்தாயியில் பாடும்போது எந்த உயரத்துக்கு எடுத்துச் செல்லணுமோ அதுவரை எடுத்துச் சென்று நிறுத்துகிறார். அதற்கு ஒரு அங்குலம் கூட மேலெழாமல்… மூன்று முறையும்… awesome! அந்த மாபெரும் இசைக் கோலத்துக்கு முழு நியாயமும் வழங்கியிருப்பார் தான் பாடிய விதத்தால்.
அந்த அசத்தல் பாட்டு! “ஆட்டமா தேரோட்டமா?” ஆடறேன், வலை போடறேன் என்று வார்த்தைகளை இசைவாக, இசையால் முடிச்சுப் போடும் ஸ்டைல்! இவருக்காகவே இசையமைத்ததோ என்று திகைக்க வைக்கும் பாடல் அது. அந்த ஓங்கி ஒலிக்கும் ‘ராக்கம்மா’வில் “அட, ராசாவே பந்தல் கட்டு, புது ரோசாப்பூ மாலை கட்டு…” வை எப்படித்தான் சற்றும் டோன் குறையாமல் கிசு கிசுப்பாகப் பாட முடிகிறதோ?
சொல்ல வேண்டியதில்லை. “போறாளே பொன்னுத்தாயி...” பற்றி. நேஷனல் அவார்டே கிடைத்துவிட்டது. ஜானகிக்கு ஒரு ‘தூரத்தில் நான் கண்ட இதயம்..’ என்றால் இவருக்கு ஒரு ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்.’
மாசி மாசம் பாடலில் ‘ஆகா பிரமாதம்’ சொல்ல வைக்கும் அந்த "ஆசை ஆகா ப்ரமாதம் ... மோக கவிதா ப்ரவாகம் !" அடுத்து “உலகம் உறங்குது, மயங்குது, ஆஹாஹா…” என்று இழுப்பது, ஆஹாஹா! அருண்மொழியுடன் ‘சக்தி வேலி'ல் 'மல்லிகை மொட்டு மனதைத் தொட்டு…'விட்ட பாடல்!
எஸ் பி பியுடன் போட்டி போட்டு இனிமையை வீசுவார் “என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன்” பாடலில். கார்த்திக்குடன் “ஒன்னப்புதட்டு புல்லாக்கு..” பாடலில் (சின்ன ஜமீன்) “பொழுதன்னிக்கும் குழந்தையைப்போல் இருந்திட்டயே..” வரியில் அப்படியே எம் எஸ் ராஜேஸ்வரியின் குழைவு கொஞ்சும்.
ராவை அவர் உச்சரிக்கும் ரகங்களில் “ர்ர்ராஜாவைப் போல் ஐயராத்துப் பிள்ளை” தனி ரகம். “மாசி மாசத்"தில் “நாளை எண்ணி நான் காத்திருந்தேன், மாமன் உனக்குத்தானே!”வில் உனக்குத்தானேவை அவர் ஒலிக்கும் பாங்கு தனி... “சந்திரரே வாரும்..” பாடும் அழகைக் கண்டு ‘அந்தி வானம் தந்தனத்தோ பாடும்’. வளமான “விடலைப் புள்ளை நேசத்துக்கு..” ராகத்துக்கு இவர் குரல் தனி சோபை தரும். ரஹ்மானின் “முகாப்லா..” பாடலின் வித்தியாச ராகம் இவரிடமிருந்து ஒரு வித்தியாச குரலை கொண்டு வந்திருக்கும்.
அப்புறம் இவருக்காகவே பிறந்த பாடல் ஒன்று உண்டு. “ஆத்தோரம் தோப்புக்குள்ளே..” ('பாஞ்சாலங்குறிச்சி') இந்தப் பாட்டை யாராலும் ஒரு முறை கேட்க முடியாது, ஆமாம், நிறுத்த முடியாது நூறு முறை கேட்கிற வரை. பிழிந்து விடும் இதயத்தை. கழுகு கவ்வும் இரையாக கொண்டு போகப்பட்டு விடுகிறோம் பாட்டோடு.
“மேகாத்து மூலையில மேகம் கருக்கையில சுக்குத் தண்ணி வெச்சுத் தர ஆசைப் பட்டேன்..” இப்படி நாயகியின் ஒவ்வொரு ஆசையையும் அவர் பாட, வரிக்கு வரி நம் உணர்வு பிசையப்பட, "அத்தனையும் பொய்யாச்சு ராசா.."ன்னு சொல்லும்போது குரலின் சோகம் உலுக்கும். “ஒத்தயிலே நிற்குதிந்த ரோசா..”ன்னு முடிக்கும்போது அப்படியே நிற்கிறோம் அவரை இழந்து விட்டோமே என்று...
“மேகாத்து மூலையில மேகம் கருக்கையில சுக்குத் தண்ணி வெச்சுத் தர ஆசைப் பட்டேன்..” இப்படி நாயகியின் ஒவ்வொரு ஆசையையும் அவர் பாட, வரிக்கு வரி நம் உணர்வு பிசையப்பட, "அத்தனையும் பொய்யாச்சு ராசா.."ன்னு சொல்லும்போது குரலின் சோகம் உலுக்கும். “ஒத்தயிலே நிற்குதிந்த ரோசா..”ன்னு முடிக்கும்போது அப்படியே நிற்கிறோம் அவரை இழந்து விட்டோமே என்று...
1 comment:
இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர்.... இவர் தனது சபையில் மட்டுமே பாட வேண்டும் என இறைவன் சீக்கிரம் அழைத்துக் கொண்டு விட்டாரோ...
நல்லதொரு பகிர்வு.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!