‘மாயாபஜார்’ படத்தில் கடோத்கஜ ரங்கராவ் லட்டு விழுங்கும் காட்சி நினைவிருக்கிறதா? எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி எடுத்தார் என்று எல்லாரையும் புருவம் உயர்த்த வைத்தார் அவர்.
ஒளிப்பதிவாளர் மார்கஸ் பார்ட்லி... இன்று பிறந்தநாள்!
“ஆஹா இன்ப நிலாவினிலே..” பாடலில், இந்திய சினிமாவிலேயே முதல் முதலாக, முற்பகலில் படமாக்கிய காட்சிக்கு தன் லைட்டிங்கால் மூன் லைட் எஃபெக்ட் கொண்டு வந்திருப்பார்! அதில் ஸ்பெஷலிஸ்ட்.
கதையை கேட்டுத் தெரிந்து கொண்டு கதைக்கேற்ற ஒளிக் கலவையை அளிப்பவர். பர்ஃபெக்ஷன் இவர் மூச்சு. ரிசல்ட் வேண்டுமானால் இவர்தான் என்று தேடிவந்தார்கள்.
பானுமதியின் முதல் படமான ‘சுவர்க்க சீமா’தான் இவர் தடம் பதித்த முதல் படம். திறமையால் ‘விஜயா வாஹினி'யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகி மிஸ்ஸியம்மா, குணசுந்தரி, பாதாள பைரவி, மாயா பஜார் என்று ‘படம் பதித்தார்’.
Cannes International Film Festival -இல் பிரபல ‘செம்மீன்’ படத்துக்காக பெஸ்ட் ஃபோட்டோகிராபியின் தங்கப் பதக்கம் வாங்கி பெருமை சேர்த்தார். ஜெமினியில் பணி புரிந்து கொண்டிருந்த இவரை ‘செம்மீனு'க்காக டைரக்டர் ராமு காரியாட் விரும்பிக் கேட்டு அழைத்துச் சென்றார். கடற்கரைக் காட்சிகள் கண்ணில் ஒத்திக் கொள்கிறாற்போல இருக்கும். மணலில் நண்டு ஊருவதிலிருந்து மறையும் சூரியனின் கிரண வண்னம் வரை.. ‘Ryan’s Daughter’ -இன் அட்லாண்டிக் போல செம்மீனில் அரபிக் கடலின் இரண்டு மைலுக்கு 60 அடி உயர்ந்த்தெழும் அலகளைப் படம் பிடிக்க விரும்பினாராம், நடக்கவில்லை.
நாம் இவரது ட்ரீட்டை மிஸ் பண்ணினது ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில். அப்போது இவர் ஒளிப்பதிவு பற்றி படிக்க வெளிநாட்டுக்குப் போய் இருந்தராம். ஆனால் இந்திப் பதிப்பான ‘ராம் அவுர் ஷியாம்’ இவர்தான் பண்ணியிருப்பார். ஸ்ரீதர் இந்தியில் ‘பாலும் பழமும்’ (‘Saathi’) இயக்கியபோது கேமராவை இயக்க அழைத்தது இவரை.
மறக்க முடியாத மற்றொன்று ‘சாந்தி நிலையம்.’ இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடல் இறுதியில் காமிரா மேலே மேலே மேலே சென்று முடிவது ரம்மியமாக இருக்கும். ‘வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன்..’ வரியில் வட்ட மரத்தைச் சுற்றி காமிரா வளைந்திறங்கும் அழகு ஒன்று போதும், எப்படியெல்லாம் படப்பிடிப்பில் நூதனம் சேர்க்கலாம் என்பதைக் கற்றுக் கொடுக்க. அந்த ராட்சத பலூன் காட்சிகளை யாரால் மறக்க முடியும்? பலரும் எதிர்பார்த்த மாதிரி நேஷனல் அவார்ட், ஸ்டேட் அவார்ட் இரண்டும் கிடைத்தது அந்தப் படத்துக்கு. 1989 இல் கிடைத்தது தமிழக அரசின் ராஜா சாண்டோ அவார்ட்.
ஒற்றை நெகடிவில் ஏழு மாஸ்கிங் எடுத்தவர். ஸாஃப்ட் லைட்டிங்கின் முன்னோடியாக இவரைக் கருதுகிறார் பி ஶ்ரீ ஶ்ரீராம். “கலரும் டெக்ஸ்சரும் சரியாகவும் அழகாகவும் இருக்கும்!”
காமிரா தானிருப்பது தெரியாமல் காட்சியையும் கதையையும் வலுப்படுத்த வேண்டும் என்பார் மார்கஸ் பார்ட்லி. “ஆஹா, நல்ல ஷாட் என்றால் போச்சு என்று அர்த்தம்!”
ஒரு வரியில் சொன்னால் ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவாளர்!
1 comment:
சிறப்பான தகவல். பிரமிக்க வைக்கும் நபர்.
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!