Thursday, August 21, 2025

உச்சகட்ட ஸ்டைல்...


சிவாஜி நடித்ததிலேயே உச்சகட்ட ஸ்டைலாக இந்தக் காட்சியை கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.
"மந்த மாருதம் தவழும்..
சந்த்ரன் வானிலே திகழும்..
இந்த வேளையே இன்பமே,
ஏகாந்தமான இந்த வேளையே இன்பமே!"
(படம்: நானே ராஜா (1956)- ஶ்ரீரஞ்சனியைப் பார்த்து சிவாஜி போதையில் பாடும் seducing பாட்டு.) Link கீழே.
மெள்ள வலது பக்கம் திரும்பி காமிரா பேன் செய்ய அவர் போதையில் தள்ளாடியபடி 'லல்ல லாலலா..' என்று பாடியபடி வந்து நின்று 'ஹக்!' என்ற விக்கலுடன் தலையைச் சொடுக்கும் ஸ்டைல்! (அதையும் ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதத்தில்!)
நின்ற இடத்திலேயே கால்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்க, உடல் ஒய்யாரமாக வளைந்து ஒவ்வொரு திசையிலும் அரை அடி சாய்ந்து திரும்ப, ஒயினில் உடல் தள்ளாடுவதையும் ஒய்யாரமாக தனி பாணியில் செய்திருப்பார்.
உயர வேண்டிய நேரம் சரியான மில்லிமீட்டருக்கு உயரும் புருவங்கள்! அசைய வேண்டிய நேரம் அங்குல சுத்தமாக அசையும் கரங்கள்! படியிறங்கி வரும் paragon பாங்கு போனஸ்.
குடித்து விட்டு நாயகியை வளைத்துப் பாடுவதை எத்தனையோ ஹீரோக்கள், வில்லன்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் இப்படியொரு தத்ரூபம் (50%) + ஸ்டைல் (30%) + அழகு (20%) என்று ரைட் மிக்ஸில் கலந்த 'archive scene' நடிப்பை யாரும் கொடுத்ததில்லை என்பது பளிச்!
இனி பாடல்... மெல்லிய ஷெனாய் இசைத் துவக்கமே நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது. தபேலாவை அந்த உருட்டு உருட்டுகிறார் அதன் டாப் ரேஞ்சுக்கு! 'கருத்தைக் கொள்ளை கொண்டாய் வாழ்விலே..' என்ற இடத்தில் ரெண்டு செகண்ட் நிறுத்தி பேஸ் கிதாரை மென்மையாக அதிர விட்டு.. அடடா, யார் அந்த டி ஆர் ராம்நாத்? அற்புத இசை! என்னவொரு மெலடி! எல்லாவற்றுக்கும் மேலாக டி.எம்.எஸ்.சின் தெளிவான உச்சரிப்பும் தேனான குரலும்!
மெட்டுக்குப் பாட்டு எழுதுபவர் கவனத்துக்கு இந்த வரி! என்னவொரு match!:"பழுத்தமாம்ப...ழத்தைக்கண்டும்...பசித்தவன்காத்...திருப்பதில்லை..." மற்றொன்று: "கண் படைத்த பயனை நான் கண்டுகொண்டேன் உன்னால் தானே.."
நடிப்புக்கு ஒரு சிவாஜி என்றால் அவர் ஸ்டைலுக்கு ஒரு காட்சி இது!
><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!