Tuesday, August 12, 2025

ஒரு நிமிடத்தில்...


தி ஷங்கர் டச் ரொம்ப விசேஷமானது. ஒவ்வொரு காட்சியிலும் மைண்ட் தொடும். ரியாலிடிக்கு எத்தனை க்ளோஸாகப் போக முடியுமோ அத்தனை க்ளோஸ் ஆகப் போவார், ஆனால் ‘ட்ராமாடிக்’ ஆக! ஒவ்வொரு சீனும் ‘டிக்’ ஆகி விடுவது இப்படித்தான். கதையிலும் சரியான இடத்தை டச் பண்ணி அதை கோல்டன் டச் ஆக்கிவிடுவார். இந்தப் படத்தில்….
இந்தியன் 2 .. மிகவும் ரசித்தேன். (Spoiler Alert)
படத்தின் ஒன்லைனை முதல் ஒரு நிமிட காட்சியிலேயே சொல்லி விடுகிறார். நிற்கும் இடத்தை அசுத்தப்படுத்திக் கொண்டே சுத்தமான நாட்டை எதிர்பார்க்கும், அடுத்தவனை ‘பார்த்துப் போகச் சொல்லும்' அந்த ஆளைக் காட்டும் போதே விளங்கி விடுகிறது.
அப்பா லஞ்சத்தில் பணத்தை அள்ளுகிறார். ஒரு பெண் இறப்பதற்கும் காரணமாக இருக்கிறார். மகனே அவரைக் காட்டிக் கொடுக்க, கைதாகிறார். மனைவி அதனால் இறந்து விடுகிறாள். அவள் முகத்தை பார்த்துவிடத் துடிக்கிறான் மகன்.. உறவினர்களும் பக்கத்து வீட்டு பெண்களும் அவனை உள்ளே விடாமல் துரத்துகிறார்கள்..
‘COMEBACKINDIAN’ சொன்னவர்களே ‘GOBACKINDIAN’ சொல்லும் நாள் வருவது கவிதை திருப்பம்! அதற்கான காரணம் கதையின் எதார்த்தம்!
சதைப் பிடிப்பான ஒரு கதை வைத்திருக்கிறார். அதற்குள் வருவதற்குள்…
ரசிகர்களின் ஏமாற்றம் புரிகிறது. இந்தியன் தாத்தா வந்தால் என்ன பண்ணுவார்? இப்ப இதைப் பண்ணுவார், இப்ப இப்படி அடிப்பார், இப்ப இப்படி நடக்கும்.. இப்படி தெரிஞ்சுக்கிட்டே இருந்தா எப்படி ரசிக்க முடியும்? ஆக குற்றவாளிகளுக்கு அவர் கொடுக்கும் பனிஷ்மென்ட் காட்சிகள் எல்லாம் ஒரு ரீ ரன் மாதிரி அலுத்து விடுகிறது. அதை புதுவிதத்தில் காட்ட முயலும் டைரக்டருடைய சின்ஸியாரிடி வேஸ்ட் ஆகுது. அதே பிரசினைக்காக சேனாபதி திரும்ப வராமல்..வேறு எத்தனையோ விஷயம் இருக்கே, அதுல ஒண்ணுக்காக அவர் திரும்ப வந்திருந்தால் ஆட்டம் புதுசாக இருந்திருக்கும். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும்!
கிரேவ்யார்டு காட்சியில் கமலின் அந்த restrained act … ஏமாற்றம், வருத்தம், அதிர்ச்சியை விழுங்கிக் கொள்வது…எந்த அதிரடியான முக பாவங்களையும் கொடுக்காமலேயே அவர் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்று நமக்கு தெரிகிறது. கூர்ந்து கவனிக்கிற மாணவர்களுக்கு அங்கே ஒரு ஆக்டிங் கிளாஸ் நடக்கிறது.
கிரிஸ்ப் ஜோக்குகளுக்கு பஞ்சமே இருக்காது ஷங்கர் படத்தில்.. ‘நக்கலா?’ ‘நிக்கல்!’ ஒன்று போதும். காட்சி ஒவ்வொன்றிலும் கடைசி ஷாட் வசீகரமாக இருக்கும். உதாரணம் ‘தாத்தா டாய்பேயிலே என்னடா பண்ணிட்டு இருக்காரு?’ என்று சித்தார்த் கேட்பது. வில்லன் உடலில் தவழும் ஆமையின் அடி வயிற்றில் வாசகம்…
விமான நிலையத்தில் அத்தனை பேருக்கிடையே சேனாபதியைக் கண்டுபிடித்தது எப்படி என்று சிம்ஹா சொல்லுவது இன்டெலிஜென்ஸீன்.
‘அஞ்சே நிமிஷத்தில முடிச்சிடறேன்’னு விரலைக் காட்டி கமலுக்கு எண்ட்ரி ஷாட் கொடுப்பதாகட்டும், ‘மை ஐ.டி.’ என்று விரல்களைச் சொடுக்கும் விதமாகட்டும்… எலிகண்ட்! அதே நிதானத்தில் படம் நெடுக…
“எல்லாத்தையுமே காசாக்கிற அரசியல் வாதிகள்! எல்லாத்திலேயுமே காசு வாங்கற அதிகாரிகள்!”
“இந்த நாட்டில வேலை இல்லாதவனைவிட வேலை நேரத்தில வேலை செய்யாதவன் தான் ஜாஸ்தி.”
“இங்கே எல்லாரும் குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பாங்க ஆனால் யாரும் குடும்பத்தை விட்டுக் கொடுக்க மாட்டாங்க!” வசனங்கள் செம க்யூட்!
புதுமைக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. ஜீரோ டாலரன்ஸ் என்று கிளம்பும் இவர் ஜீரோ கிரேவிடியில் செவ்வாயில் சஞ்சரிக்க பிராக்டிஸ் செய்யும் தொழிலதிபரை அந்தரத்தில் அந்தரங்கமாக சந்திப்பது… இறுதி சேஸ் காட்சிகளில் கமலின் சைக்கிள் வீல் வேகத்தில் எடிட்டிங்கும் பாய்கிறது.
‘பால்வெளி பாதை மேலே.. மேகமாய் உலாவலாமே..’ பாடலில் “வெண்ணிலா வேர்வை கொஞ்சம்.. மின்மினி முத்தங்கள் கொஞ்சம்.. கடவுளின் சிரிப்புகள் கொஞ்சம்.. நாம் காணவே..” என்று வரிகள் வசீகரிக்கின்றன... மற்ற படங்களைப் போல் இல்லாமல் அனிருத் அடக்கி வாசித்து இருக்கிறார் பின்னணி இசையை. படத்தின் mood-க்கு பொருத்தமாக. கடைசிக் காட்சியில் அந்த மனம் பிசைகிற வயலின் இசை..
உண்மைத் தாம்பாளத்தில் ஃபேண்டஸி கலர்ப் பொடி தூவி அழகு காட்டுவார். ‘பிரம்மாண்டம் ஐம்பது பர்சண்ட், ஃபேமிலி டிராமா ஐம்பது,’ தான் ஷங்கர் ஃபார்முலா. இதிலும்! பிந்தைய பாதிதான் மனம் கவருகிறது.
“தப்பு பண்றவன் எல்லாம் வேறெங்கேயோ இல்ல, நம்ம தெருவிலேயோ பக்கத்து வீட்டிலேயோதான் இருக்கிறான். ஏன் நம்ம வீட்டிலேயே…” என்று திரைக்கதையின் மையத்தை சுட்டிக்காட்டும் அந்த கமலின் live talk ஆழமாகவும் நேர்த்தியாகவும்! ஆனால்…
பிக் பட்ஜெட் படம் என்றாலே தப்பித் தவறிக்கூட அதில் யதார்த்தம் இருந்து விடக்கூடாது, fantasy தான் ஜாஸ்தியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேரூன்றி விட்டது இங்கே. “வெறும் கை முஷ்டியாலேயே நூறு பேரை வீழ்த்தும் நம்ம ஹீரோவிடம், அது என்ன மர்மம் என்று ஒரு நாளாவது கேட்டிருப்போமா? அப்புறம் எதுக்கு வர்மம், அது எப்படி பாதிக்குதுங்கிற விவரம்? நான் கேட்டேனா?” என்கிறார் நம்ம ஆளு.
இன்றைய நாட்டு நடப்பையும் மக்கள் மனநிலையையும் அழுத்தமாக ஒரு கதையாக ஆக்கியிருக்கிறார் ஷங்கர். ரசித்துப் பாருங்கள் என்றும் சொல்வதோடு யோசித்து, பாருங்கள் என்றும் சொல்கிறார்கள்.
திமிங்கலமே தான்! நெடுமுடி வேணு ஒரு இடத்தில் சொல்கிற மாதிரி.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!