Friday, August 22, 2025

சித்திரம் பேசுதடி...


“அமுதைப் பொழியும் நிலவே..
நீ அருகில் வராததேனோ?”
‘தங்கமலை ரகசியம்' படத்தின் சாகாவரம் பெற்ற பாட்டு! இளவரசி ஜமுனாவின் பாட்டைக் கேட்டு மொழியே தெரியாத டார்ஜான் சிவாஜி மயங்கி ஓடிவந்து நிற்கும் காட்சி.. ‘தங்கமலை ரகசியம்' படத்தின் சாகாவரம் பெற்ற பாட்டு!
சொடுக்கி இழுக்கும் catchy melody... 'தனனா.. தனனா.. தனனா..' மூன்று 'தனனா'வையும் மூன்று விதமாக அடுக்கி ஒரு பிரில்லியண்ட் ட்யூன்!
இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா... இன்று பிறந்த நாள்!
அடுத்த வருடமே எல்லார் சிந்தையையும் மயங்க வைத்தார்.
“சித்திரம் பேசுதடி...
என் சிந்தை மயங்குதடி…” (‘சபாஷ் மீனா’)
சபாஷ் சொல்ல வைத்த அதன் மற்றொரு கானா: “காணா இன்பம் கனிந்ததேனோ..”
காலாகாலத்துக்கும் ரசிகர்கள் மனதில் நிற்கும் இவரது பாடல் ஒன்று உண்டு.
“என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே,
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?..”.
‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ படத்தில் இந்த எல்லாரும் முணுமுணுக்கும் பாடல்.
சி.ஆர்.சுப்பராமன், சுதர்சனம் போன்ற இசை மேதைகளிடம் உதவியாளராக பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்... எல்லா இசைக் கருவிகளை வாசிப்பதிலும் விற்பன்னரான இவருக்கு ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன் இசைக்கு கிடார் வாசித்த அனுபவமும்...
பி.ஆர்.பந்துலுவுக்கு முன் டி. ஆர் மகாலிங்கம் தன் படங்களில் இவரை பயன்படுத்தினார். கேட்டிருக்கிறீர்களா? “பாட்டு வேணுமா... உனக்கொரு பாட்டு வேணுமா?” என்று மகாலிங்கம் கேட்பாரே?
“தென்றல் உறங்கிடக் கூடுமடி, எந்தன் சிந்தை உறங்காது…” என்று அழகாக பி.லீலா ரெண்டு சரணம் வரை பாட, “துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள்..” என்று டி.எம்.எஸ். தொடரும் இனிமைப் படகு தபேலா ஆற்றில் உலா வருமே, அது ’சங்கிலி தேவன்' ஹிட்!
சீர்காழியின் மணியான பாடல்களில் ஒன்றான “கோட்டையிலே... ஒரு ஆலமரம்…” மறக்க முடியாதது. ‘முரடன் முத்து’ வுக்கான இவர் அமைத்தது.
டி.ஜி. லிங்கப்பாவின் டி.ஜே. அந்த இரண்டு காமெடி பாட்டுக்களும்:
‘முதல் தேதி’யில் கலைவாணர் என்.எஸ்.கே. பாடும் “ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்..கொண்டாட்டம்! இருபத்தொண்ணுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்… திண்டாட்டம்!”
மற்றொன்று ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’யில் சிவாஜி கலக்கும் “ஜாலி லைஃப்.. ஜாலி லைஃப்.. தம்பதியானா ஜாலி லைஃப்…” பாடல். சிவாஜிக்குக் குரல் கொடுத்தவர் யார் என்கிறீர்கள்? ஜே. பி. சந்திரபாபு!

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!