Friday, August 29, 2025

ஒரு புல்லாங்குழல்...


தொடங்கும்போது ஒரு புல்லாங்குழல் ஒலிக்கிறது என்று நினைத்தால் அது ஜானகி அவர்களின் குரல்!
மனதில் காதலை வைத்து மறுகும் இளம்பெண்ணின் எண்ணங்களின் அலைபாய்தலை அப்படியே இசையில் கொண்டு வந்து…
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்...நதி
தீரத்தில் தேன் கொண்ட என் மனம்!"
இன்றைய பாடலை அன்றே தந்துவிட்டார் இளைய ராஜா. படம் ’நிழல்கள்.’ படத்தில் இடம் பெறவில்லை, ஆனால் மனதில் என்றும்!
முதல் இடையிசையில் எங்கிருந்தோ ஒலிக்கும் சிங்கிள் வயலின் உருக்கமாய்த் தொடங்க, மிகப் பக்கத்தில் எழும் கூட்ட வயலின்கள் அதற்கு பதில் சொல்ல அந்த இசை மோதலை அடுத்து ஆ ஆ... என்று எழும் உருக்கமான கோரஸ் குரல்... அதன் பின்னணியில் மெல்ல ஒலிக்கும் சிதார், கோரஸ் நின்றதும் தனனன தனனா என்று விரைவாகப் பொழிய, அதை மெல்லிய புல்லாங் குழல் வழி நடத்த இப்போது இன்னும் ஆழமாக ஒரு கோரஸ், எல்லாம் ஒரு 40 வினாடிக்குள்! ஒரு அற்புத இசைக் கோர்வை!
இரண்டாவது இடையிசையில் வயலினுக்கும் சிதாருக்கும் மாறி மாறி நடக்கும் பரபரப்பான போட்டி. முடிவில் மீண்டும் சிங்கிள் வயலின் மிக உருக்கமாக தன்னை இரண்டாவது சரணத்தில் ஒப்படைக்க, இம்முறை நீண்டதொரு சரணம் இன்னும் இன்னும் என உயரச் செல்ல, ‘...உருகும் ஒரு பேதையான மீரா!” என்று அவர் நிறுத்த, ’மீரா.. மீரா...’ என்று ஒலிக்கும் கோரஸ்... இப்படி மேலே மேலே செல்ல ஒரு கட்டத்தில் ‘வானமும் மேகமும் போலவே..’ என்று மீண்டும் ஜானகி தொடங்குவாரே அப்போது நமக்கு உண்டாகும் பரவச உணர்வு!
அன்றைக்கும் இன்றைக்கும் என் ஃபேவரிட் பாடல்களிலொன்று.

 

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!