ஆனிவர்ஸரியும் அதுவுமாக மனைவி கேதிக்கு கிஃப்ட் வாங்க அவன் போனபோது கூடவே உள் நுழைந்த நாய் ஒன்று கண்ணாடியை உடைத்து விட, கையில் இருந்ததை டேமேஜுக்கு அழுதுவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்புகிறான் டேனி. தொடர்கிறது நாய். வாயில் இவன் பரிசில் செருக எழுதிய சீட்டு. பார்த்துவிட்டு ஆஹா, அழகிய பரிசு! என்று அவள் தழுவிக் கொள்கிறாள் நாயை! பிறகு நாயகனையும்! மாமியார் முன் கேவலப்பட வேண்டாமேன்னு மூடிக் கொள்கிறான் வாயை.
திருப்பம் என்னான்னா... நாயோ ஒரு கடத்தல் கூட்டத்தினுடையது. பண்ட மாற்று செய்ய பயன் படுத்துவது. அதைக் காணாமல் அவங்க தலையைப் பிய்த்துக் கொள்கிறாய்ங்க, அதாவது ஒருத்தர் தலையை அடுத்தவன்! அவர்கள் ஒவ்வொருவராகப் போட்ட, நாய் காணோம் விளம்பரத்தை ஆவலோடு பார்த்து (பின்னே? பெட் ரூமுக்கே வந்துவிட்ட நாயை அவளுக்குத் தெரியாமல் அப்புறப்படுத்த வேறு வழி?) அங்கே போனால் அவன்களுக்குள் வரிசையாய் கொலை விழ, அங்கே போனதால் போலீஸ் இவனைத் தூக்க .. வீட்டில் அமளி.
நாயை வாக் அழைத்துப் போகிறாள் கேதி. வழக்கப்படி வந்த கடத்தல்காரன் ஒருவன் அவள் பையைப் பிடுங்கிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகிறான். அவன், பையைப் பிரித்தால் எலும்புத் துண்டுகள். இவள் பையைப் பிரித்து மகிழ்ந்தால், அத்தனையும் கள்ள நோட்டு.
தம்பதி அதை ஸ்டேஷனில் ஒப்படைக்கையில், பெண்டாட்டி முன்னாடி உண்மையை, அவளுக்கு பரிசு வாங்காத உண்மையைச் சொல்லவேண்டி வருகிறது. அடுத்து, வீட்டுக்கே மீதி கோஷ்டி தேடிவர போலீஸ் சுற்றி வளைக்கிறது. அவளுக்கு நாயும், அவனுக்கு அதை பெட் ரூமுக்கு வெளியே தள்ளும் தைரியமும் கிடைத்து விடுகிறது!
1951 -இல் வந்த ‘Behave Yourself’ படத்தில் கேதியாக நடித்தவர் Shelly Winters. இன்று பிறந்த நாள்.
நிறைய பேர் மறைவதாலோ என்னவோ படம் முடியும்போது நடிகர்கள் பேரை in the order of disappearance என்று தமாஷாக போடுவார்கள்.
Shelly Winters... 50 களின் கவர்ச்சிக் கன்னியரில் ஒருவர்.. அழகாய் நடிக்கும் டிப்ஸை மர்லின் மன்றோவுக்கே வழங்கியவர்.
‘A Place in the Sun’ -இல் எலிசபெத் டெய்லருடன் நடித்தபோது அவருக்கல்ல, இவருக்கு ஆஸ்கார் நாமினேஷன் வந்தது. அவார்டை பின்னால் ரெண்டு முறை வாங்கிவிட்டார். (‘The Diary of Anne Frank’, ‘A Patch of Blue.’)
‘எல்லா கல்யாணங்களுமே சந்தோஷ சமாசாரம்தான் ஹாலிவுட்டில். அப்புறம் சேர்ந்து வாழ நினைக்கிறதுதான் எல்லா பிரசினையும் கொண்டுவருது,’ என்பவர் சொன்ன ஒன்று, “ஆஸ்காரை வாங்கிக் கொண்டு நான் வீட்டுக்குள் நுழைந்தபோது என் கணவர் அதைப் பார்த்த ஒரே பார்வையில் எனக்குத் தெரிஞ்சு போச்சு என் மணவாழ்க்கை முடிஞ்சதுன்னு.”
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!