Friday, August 1, 2025

யதார்த்த நடிகர்...


சில நடிகர்கள் நமக்கு நடைமுறைக்கு அப்பாற்பட்ட அன்னியர்களாகவே காட்சியளிப்பார்கள். ஆனால் சிலரோ, அட நம்ம பக்கத்து வீட்டு கோபாலசாமி, நேத்து பார்த்த சீனு, மளிகைக்கடை முருகேசன் அப்படின்னு சட்டுனு மனசுக்கு நெருங்கிடுவாங்க. அப்புறம் அவங்க என்ன நடிக்கிறது? நாம என்ன பார்க்கிறது? அவங்களோட கைகோர்த்து காட்சிக்குள்ளே போயிடுவோம்.
சொன்னதுமே ஞாபகம் வருமே? ஆமா, அவருதான். நம்ம டெல்லி கணேஷ்! இன்று பிறந்தநாள்!
'பட்டினப் பிரவேசத்'தில் பிரவேசம். அதில் தொடங்கி தமிழ் திரையுலகத்திற்கு ஒரு தவிர்க்க முடியாத நடிகர். இயல்பான ஆனால் சுவையான நடிப்பு! சகஜமான பேச்சு, ஆனால் பிசிறில்லாத வீச்சு!
'அதிசய ராகம்' (1979) படத்தில் நான் எழுதிய வசனங்களை அவருக்கேயான அந்தப் பிரத்தியேக மாடுலேஷனில் பேசி அசத்திவிட்டதை மறக்க முடியாது. குறிப்பாக அந்த வரி.. நண்பனை அறிமுகப்படுத்தும் போது சொல்லுவது: "ஒரே இலையில சாப்பிட்டிருக்கோம்னு சொன்னா, அது ரொம்பப் பழைய்ய்ய உவமை!"
இருதலைக் கொள்ளி எறும்பு ரோல்கள் இவருக்குக் கரும்பு. ‘இரும்புத்திரை’ உதாரணம். புரட்டு உலகத்துக்கு இடையேயும் புதல்வனுக்கு இடையேயும் மாட்டிக்கொண்டு படும் அப்பாவி அப்பாவின் அவதியை.. அடடா, இந்த ஆள் எப்படியாவது இதிலிருந்து மீண்டு வந்திடணுமேன்னு வேண்ட வைத்துவிடுவார் நம்மை..
திறமை அறிந்து இவர் நடிப்புக்கு தீனி இடுபவர் கமல். 'மைக்கேல் மதன..' ஒன்றே போதும். 'ஐ மீன்' அந்த சமையல் காட்சி...
'பசி' பற்றி நான் தனியே சொல்ல என்ன இருக்கிறது? புசியோ புசி என்று புசித்து விட்டார்கள் எல்லாரும் அந்த நடிப்பை!... நடிப்பு அவருக்குத் தண்ணி பட்ட (அல்லது படாத) பாடு என்பதை நாம் பார்த்தது 'தண்ணீர் தண்ணீரி'ல்.
அகம்பாவமும் பொறாமையும் ஆக்கிரமிக்கும் மனதில் அசூயையும் வெறுப்பும் படிப்படியாக மேலோங்குவதை, தி. ஜானகிராமன் எழுத்தில் வடித்ததை அப்படியே முகத்தில் வடித்திருப்பார் 'பாயாசம்' வெப் சிரீஸில். அவர் மனதில் ஓடும் எண்ணத்தை முகத்தில் அனாயாசமாக படிக்கிறோம் புத்தகம் போல.
முதல் இரண்டு காட்சியில் இப்படியாகப்பட்ட கேரக்டர் இவர் என்று, அடுத்த இரண்டில் இப்படியாகப்பட்டநிலைமை இவருக்கு என்று, அடுத்த இரண்டில் இப்படியாகப்பட்ட மனக்குமைச்சல் இவருக்கு என்று தன்னுடன் பயணிக்க வைத்து... கடைசியில் பொங்கி எழும் வெறுப்பை உமிழ அவர் தவிக்கும் தவிப்பு! என்ன செய்யப் போகிறார் என்ற பதை பதைப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறதே, அதுதான் அவரது வெற்றி.
‘என்னால அந்த கல்யாணத்தில் கலந்துக்க முடியாது.’ என்று அவர் ஆரம்பிக்கும் அந்த ஷாட். இல்லாத மனைவியிடம், 'இருந்தாலும் உனக்கு அநியாயத்துக்கு நியாய புத்தி!' என்று அங்கலாய்ப்பதும், 'நீ இருந்தவரைக்கும் என்னை மனுசனா வச்சு பார்த்துட்டிருந்தே,' அப்படீன்னு கண் கலங்குவதும் தற்போதைய நிலை உணர்ந்து முகம் கவிழ்ந்து விம்முவதும்… உறுதி தளர்ந்து அவள் பார்வையை சந்திக்க முடியாமல் தவிப்பதும், தூரத்து மேளச் சத்தம் கேட்க சரி, நடக்கட்டும், என்று மெல்ல எழுவதும், காய்ந்த வேட்டியை எடுத்துக் கொண்டு கல்யாணத்துக்குக் கிளம்புவதும்... யதார்த்தம் யதார்த்தம் என்று கூவும். கமெர்ஸியல் படங்களில் கலக்கும் ஒரு நடிகரை அங்கே காண முடியவில்லை.
அந்த கடைசிக் காட்சி... மற்றவர்களை வெற்றிகரமாக சமாளித்து விட்டு நிமிரும்போது மகளின் பார்வையின் வெப்பம் தாங்காமல் தடுமாறும் போது துளி மிகை இருக்க வேண்டுமே? தன் வக்கிரத்தை அவள் மோப்பம் பிடித்து விட்டதன் அதிர்ச்சி முகத்தில் வெளிப்பட்டு விடாமல் சமாளிப்பது என்ன? தன்னை சேகரித்துக் கொண்டு எல்லாருக்கும் சொன்ன பதிலையே அவளுக்கும் சொல்லியபடியே கடப்பது என்ன? நடிப்பதாக நடிக்கும் நடிப்பில் நடிக்காமலேயே நடித்தது என்ன?
><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!