Saturday, September 13, 2025

திரைக்கதைக்கு பாடம்...

 "வாழ்க்கையில ரசனை ரொம்ப முக்கியம். ரசிக்கத் தெரிஞ்சவங்கதான் உலகத்தினுடைய அழகை பூரணமா அனுபவிக்க முடியும். நல்லா இருக்குன்னு சொல்றோம் பார்த்தீங்களா அந்த வார்த்தையே ரசனையிலேர்ந்துதான் உற்பத்தி ஆகுது," என்கிறார் சிவாஜி கப்பலில் அறிமுகமான பெண்ணிடம். அவள் ரசித்துக் கொண்டிருப்பது தன் வாழ்க்கையை என்பது அறியாமல்...

‘புதிய பறவை’.... இன்று பிறந்தநாள்! Technical Brilliance- க்கு ஒரு படம்! An 'ever-new' movie!
மனைவியை இழந்த கோபால் மறுபடி முகிழ்த்த காதலில் மனம் தேறி, லதாவை வாழ்வில் இணைக்க நிச்சயதார்த்தம் நடக்கையில் 'அத்தான்!' என்று அவன் முன் வந்து நிற்கிறாள் முதல் மனைவி. இடைவேளை! The best ever interval block!
Shot by shot, scene by scene நுணுக்கங்களை அடுக்கி, திரைக்கதைக்கு பாடம் சொல்லும் படங்களில் ஒன்று. டைடில் சீனிலிருந்தே சுறுசுறுப்பாக அதிகரிக்கும் விறுவிறுப்பு சூபர் க்ளைமாக்ஸில் முடியும்! Breathtaking suspense என்பார்களே, அது!
ஒவ்வொரு காட்சியையும் சிற்பமாகச் செதுக்கி எடுத்திருப்பார்கள். எந்த ஒரு வசனமும் படத்தின் கதையோடு இம்மி பிசகாமல் ஒன்றியிருப்பது இறுதியில் விளங்கும்போது ஏற்படும் வியப்பு!
விஸ்வநாதன் ராமமூர்த்தி தங்கள் பி. ஜி. எம்.மில் சிகரம் தொட்ட படம் இதுதான் என்பேன். scintillating! சிவாஜியின் ஊட்டி பங்களாவுக்குள் கார் நுழையும் அந்த சீனில் ஒன்றேகால் நிமிடத்துக்கு வரும் ஒய்யார பிஜிஎம் இல் இருந்து... ரயில்வே கேட் மூடிவிடும்போது சுழன்று சுழன்றொலிக்கும் வயலின் பின்னல்.... முதல் இரவில் குடித்துவிட்டு வரும் சௌகாரைக் கண்டு சிவாஜி மனம் குமையும் போது ஒலிக்கும் ஹாண்டிங் பின்னணி இசை.... ‘நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது’ன்னு சரோஜா தேவி ஊடல் செய்யும்போது ஒலிக்கும் மிக மிக மெல்லிய பிஜிஎம் வரை காட்சியின் உணர்வை காதுக்கு ஊட்டும் அவர்களின் மேதைமை! இன்றைக்குக் கவனித்தாலும் அசந்து விடும் அட்டகாச பங்களிப்பு!
சிவாஜியின் நடிப்புக்கு சவால்விட்டதில் சிகரம் இந்தக் கதை! வென்றது, வழக்கம்போல், அவரே.


No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!