Monday, September 1, 2025

மனதின் கதவை...

 



மனதின் கதவைத் தட்டாமலேயே உள்ளே நுழைந்து விடுகிறது ‘கதவைத் தட்டு’ (‘Dastak’)என்கிற அந்தப் படம். மும்பையில் தங்கள் கனவுகளுடன் வந்திறங்கும் ஜோடி. வீடு தேடி அலைகிறவர்கள் முன்கதைச் சுருக்கம் தெரியாமல் அந்த வீட்டில் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள். ஒரு மாதிரியான ஏரியா அது. இதற்கு முன்பு அங்கு தங்கியிருந்த பெண்ணும்! ராத்திரியானால் கதவைத் தட்டுகிறார்கள் கஸ்டமர்கள். அவனுக்கு விரட்டித் தாங்கவில்லை.


அப்பாவிடம் சங்கீதம் பயின்ற அவளால் இங்கே தன் தம்புராவைத் தொடமுடியவில்லை. கிராமத்தில் ஆடிப்பாடி திரிந்தவள் இங்கே கூண்டுப் பறவையாக... தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அவனுடைய ஆத்திரமும்! அவளுடைய பரிதவிப்பும்! அப்புறம் அற்புதமான அந்த கிளைமாக்ஸ் சீன்.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை என்று மூன்று நேஷனல் அவார்ட் அள்ளிய படம். படத்தின் இயக்குநர் ராஜேந்திர சிங் பேடி.
Rajinder Singh Bedi... இன்று பிறந்த நாள்.
மி. சி. படங்கள் பார்க்க விரும்புபவர்கள் பா. வே. படம். சஞ்சீவ் குமார், ரேஹானா சுல்தான் நடிப்புடன் போட்டி போட்டது மதன் மோகனின் இசை.
“கடைத்தெருவின் விற்பனைப் பொருளாக...
காணுகிறார்கள் அவர்கள் என்னை...”
அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் எல்லாம் அத்துமீறி வெளிப்பட, அவள் பாடும் அந்த வரிகள்...
சாகித்ய அகாடமி விருது பெற்ற உருது எழுத்தாளர். மிகச் சிறந்த வசனகர்த்தா. ஐம்பதுகளின் ‘தேவதாஸ்’ ‘மதுமதி’யிலிருந்து அறுபதுகளின் ‘அபிமான்’ ‘அனுபமா’ ‘சத்யகாம்’ (தமிழில் ‘புன்னகை’யாக வந்த படம்) வரை.
மகன் நரேந்தர் பேடியும் இயக்குநர். இயக்கிய படங்களில் ஒன்று கமல் நடித்த ‘Sanam Teri Kasam’ (ஆர். டி. பர்மனுக்கு முதல் Filmfare அவார்ட்!)
><><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!