Monday, September 1, 2025

இந்தா, இந்தா ...


இந்தா, இந்தா என்று அவர் கொடுத்த ‘நந்தா’ பாடல்கள்!
மெலடியும் புதுமையும் பின்னிப் பிணைந்து சோகமும் காதலும் சுகமாக இணைந்து.. அந்த ஆறு பாடல்களுமே ஒரு இசைக்கொத்து! அதிலும் அந்த “முன் பனியா…” ரொம்பவே தனியா என் கூடவே இன்னிக்கும் சுத்திக்கிட்டிருக்கு!
அப்புறம் எத்தனையோ பாடல்கள்! கேட்டதுமே ஆடுகிற மாதிரி.. மனசு துள்ளுகிற மாதிரி… அவருடைய தனி முத்திரை தெரிகிற மாதிரி…
‘தீனா’வில் அந்த “நீ இல்லை என்றால்….” ஆரம்பிக்கிற வேகமும் ஸ்தம்பித்தலாக முடிவதும்.. என்னவொரு சங்கீத அமர்க்களம்!
கேட்க ஆரம்பித்தால் மறுபடி, மறுபடி கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றொரு பாடல்..
“காதல் எந்தன் காதல்… என்ன ஆகும் நெஞ்சமே!
கானல் நீரில் மீன்கள் துள்ளி வந்தால் இன்பமே..”
எங்கோ ஒரு உலகுக்கு அழைத்துச் செல்லும் பாடலல்லவா அது?
ஒரு மோர்சிங்கையும் நாகஸ்வரத்தையும் வைத்து விளையாடியிருப்பார் நம் நெஞ்சங்களில்! எனக்குத் தெரிந்து morsing ஐ இத்தனை tantalizing ஆக திரைப்பாடலில் யாருமே உபயோகித்ததில்லை.
(‘மூன்று பேர் மூன்று காதல்’)
தவிர என் நெஞ்சோடு கலந்துவிட்ட அந்தப் பாடல்..
நிறுத்தி நிறுத்தி இசையின் எட்டுத் திக்குக்கும் நம்மை இட்டுச் செல்லும் லாவகம்! உயர உயர தூக்கிச் செல்லும் சரணமும் அங்கிருந்து நம்மை மெதுவாக இறக்கிக் கொண்டு வரும் இசையும்!
“நெஞ்சோடு கலந்திடு உறவாலே…காயங்கள் மறந்திடு அன்பே..” (‘காதல் கொண்டேன்')
சரணம் முடிந்ததும் ஷெனாயா, கிளாரினெட்டா, ரெண்டுமா, தெரியாது. நெஞ்சைத் துளைத்துச் செல்லும்…
யுவன் ஷங்கர் ராஜா… இசைச் செடியின் ஒரு ரோஜா.
இன்று பிறந்தநாள்…

எவராலுமே...


சர்பட்டா பார்த்து ஏற்பட்ட பாக்ஸிங் உற்சாகம் தீர்வதற்குள் இவரைப் பற்றி சொல்லி விடுகிறேன். எவராலுமே தோற்கடிக்கப்படாதவராக ஒரு பாக்ஸிங் ஹிஸ்டரியை வைத்துக்கொண்டிருந்தவர் இவர்.

Rocky Marciano... இன்று பிறந்தநாள்.
ஐம்பதுகளில் உலக ஹெவி வெய்ட் சாம்பியனாக தொடர்ந்து நான்கு வருடங்கள் இருந்தவர். ஹெவி வெயிட் போட்டிகளில் உலகின் மிக அதிகமான நாக்அவுட் சதவீதமும் இவருடையதுதான். 49 க்கு 43 மேட்சில்.
24 வயதில் களத்தில் குதித்தவர் தொடர்ந்து 17 பேரை நாக்-அவுட்டில் தோற்கடித்தார்.
1956இல் Archie Moore -ஐ ஒன்பதாவது ரவுண்டில் வீழ்த்தியவர் சில மாதங்களில் தன் ரிட்டயர்மென்ட்டை அறிவித்தார். உச்சத்தில் இருக்கும்போதே ஒதுங்கியவர் மிச்சத்தை நடுவராக, வர்ணனையாளராக கழித்தார். டி.வி ஷோவும் நடத்தினார்.
எந்த அளவுக்கு பாப்புலர் என்றால் பிற்பாடு 1969இல் பிரபல முகமது அலியும் இவரும் மோதுகிறாற்போல ஒரு கற்பனைப் படம் எடுத்தார்கள். (‘The Superfight’) யாரை ஜெயித்ததாக காட்டுவது? இரண்டு பேரையும் தான். ஒவ்வொரு வர்ஷனில் ஒருவர்.
மேடையில் சோடை போகாதவர் மரித்தது ஒரு விமான விபத்தில். மறுநாள் அவரது 46 வது பிறந்த தினம். சோகம் என்னன்னா ரொம்ப ஈஸியா தவிர்த்திருக்கலாமாம் அந்த விபத்தை. அத்தனை மோசமாக இருந்திருக்கிறது வெதர்.
இவர் கதை டெலிவிஷன் படமாக வந்தது 1999இல்.

மனதின் கதவை...

 



மனதின் கதவைத் தட்டாமலேயே உள்ளே நுழைந்து விடுகிறது ‘கதவைத் தட்டு’ (‘Dastak’)என்கிற அந்தப் படம். மும்பையில் தங்கள் கனவுகளுடன் வந்திறங்கும் ஜோடி. வீடு தேடி அலைகிறவர்கள் முன்கதைச் சுருக்கம் தெரியாமல் அந்த வீட்டில் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள். ஒரு மாதிரியான ஏரியா அது. இதற்கு முன்பு அங்கு தங்கியிருந்த பெண்ணும்! ராத்திரியானால் கதவைத் தட்டுகிறார்கள் கஸ்டமர்கள். அவனுக்கு விரட்டித் தாங்கவில்லை.


அப்பாவிடம் சங்கீதம் பயின்ற அவளால் இங்கே தன் தம்புராவைத் தொடமுடியவில்லை. கிராமத்தில் ஆடிப்பாடி திரிந்தவள் இங்கே கூண்டுப் பறவையாக... தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அவனுடைய ஆத்திரமும்! அவளுடைய பரிதவிப்பும்! அப்புறம் அற்புதமான அந்த கிளைமாக்ஸ் சீன்.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை என்று மூன்று நேஷனல் அவார்ட் அள்ளிய படம். படத்தின் இயக்குநர் ராஜேந்திர சிங் பேடி.
Rajinder Singh Bedi... இன்று பிறந்த நாள்.
மி. சி. படங்கள் பார்க்க விரும்புபவர்கள் பா. வே. படம். சஞ்சீவ் குமார், ரேஹானா சுல்தான் நடிப்புடன் போட்டி போட்டது மதன் மோகனின் இசை.
“கடைத்தெருவின் விற்பனைப் பொருளாக...
காணுகிறார்கள் அவர்கள் என்னை...”
அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் எல்லாம் அத்துமீறி வெளிப்பட, அவள் பாடும் அந்த வரிகள்...
சாகித்ய அகாடமி விருது பெற்ற உருது எழுத்தாளர். மிகச் சிறந்த வசனகர்த்தா. ஐம்பதுகளின் ‘தேவதாஸ்’ ‘மதுமதி’யிலிருந்து அறுபதுகளின் ‘அபிமான்’ ‘அனுபமா’ ‘சத்யகாம்’ (தமிழில் ‘புன்னகை’யாக வந்த படம்) வரை.
மகன் நரேந்தர் பேடியும் இயக்குநர். இயக்கிய படங்களில் ஒன்று கமல் நடித்த ‘Sanam Teri Kasam’ (ஆர். டி. பர்மனுக்கு முதல் Filmfare அவார்ட்!)
><><><