Showing posts with label ரசித்தவை. Show all posts
Showing posts with label ரசித்தவை. Show all posts

Monday, November 6, 2023

இட்ட அடி நோவ..

'தெரியுமா அரசே உங்களுக்கு? ரொம்ப நல்லப் பாடுகிறான் கம்பர் மகன், காதலை,' என்று வம்பிழுக்கிறார் ஒட்டக்கூத்தர்  (நம்பியார்)...

அரசரும் கம்பரும் அம்பிகாபதி(சிவாஜி)யும் அமர்ந்திருக்கையில்!
அப்போது இளவரசி அமராவதி (பானுமதி) மெல்லப் படியிறங்கி வருகிறாள் அடியெடுத்து.
"இட்ட அடி நோவ.. எடுத்த அடி கொப்புளிக்க… வட்டில் சுமந்து மருங்கசைய.." தன்னை மறந்து பாடி விடுகிறான் அம்பிகாபதி!
அரசர் கோபமுற நோக்க, கம்பர் தொடர்ந்து ஒரு வரி பாடி சமாளிக்கிறார். “கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று… கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்.” வெளியே கொட்டிக் கிழங்கு விற்கும் முதியவளின் பாதங்கள், கொளுத்தும் வெயிலில் நோவதைத்தான் சொல்கிறான் தன் மகன் என்று.
‘யாரங்கே? அழைத்து வா அந்த முதியவளை!' ஆணையிடுகிறார் அரசர்.
இருந்தால்தானே வருவதற்கு என நம்பியார் குதூகலிக்க, கம்பர் பதறி மனதில் கலைமகளைக் கும்பிட…
நுழைகிறாள் அந்தப் பாட்டி, 'அப்பா என்னா வெய்யில்,' என்கிறாள், தலையிலிருந்து கொட்டிக் கிழங்குப் பொட்டியை இறக்கியபடி.
காப்பாற்றி விடுகிறாள் சரஸ்வதி!
நம்பும் மன்னர். வெம்பும் நம்பியார்.
'அம்பிகாபதி' படத்தின் அற்புதமான காட்சி.
(ப. நீலகண்டனின் ஷாட் அமைப்பைக் கவனியுங்கள். மிகக் குறைந்த ஷாட்களில் அத்தனை எக்ஸ்ப்ரஷன்களையும் அழகாகக் கேப்ச்சர் செய்திருக்கும் நுணுக்கம்!)
---------

Tuesday, June 4, 2019

உற்சாகத்துக்கு ஒரு பாடல்!


'பாலூற்றி உழவு செய்வார்...' என்று ஆரம்பிக்கிறது அந்தப் பாடல்.
தென்பாண்டி சீமையின் வளத்தை எத்தனை அழகாக...

அடுத்த வரிதான் அற்புதம்!
'பனிபோல் விதை நடுவார்..' என்னவொரு கற்பனை! இதைவிட சிறப்பா சொல்லமுடியுமா?


முதல் தடவை கேட்கிறப்ப ஒரு உற்சாகம் பிறக்கும். ரெண்டாம் முறை ஆஹான்னு.. மூணாவது எழுந்து ஆடத் தோணும்.. அப்படி ஒரு இசை!


படம்: பாகப் பிரிவினை
பாடல்: "தேரோடும் வைகை.. சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும்.. ஒயிலாட்டம்!"


முன்னே சிவாஜியும் சரோஜா தேவியும்..
பின்னே பீம்சிங்கும்விஸ்வநாதன் ராமமூர்த்தியும் மருதகாசியும்!

பீம்சிங் படம் என்றால் தவறாமல் அதில் ஒரு கோஷ்டி நடனம் இடம் பெறும். (தீர்க்கதரிசி. இப்ப அது இடம் பெறாத படமே இல்லை.)

எந்த ஷாட்டை எடுத்துப் பார்த்தாலும் சிவாஜியின் நடன அசைவுகள் படு கச்சிதமாக பாத்திரத்தின்  இயலாமையுடன் பொருந்திப்போகும்.

தேரோடும் ... எனும்போது பின்னால் சீறிப்பாயும் அந்த இசை!


சரணத்தில் வெள்ளந்தியாக எழுப்பும் வினாவும் சுள்ளென்று வந்து விழும் விடையும்…
'சித்திரை மாதம் முத்துக்கள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்தில சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா..'
என்று அவன் கேட்க,
'வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரித்த வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா...'
என்று அவள் பதில் சொல்ல..


இந்தப் பாடலின் பாணியில் வந்த ‘Jis Desh Mein Ganga Behti Hai’ படப் பாடலில் ('Hum bhi hain Tum bhi ho..) சங்கர் ஜெய்கிஷன், அவர்கள் ஸ்டைலில் பிச்சி உதறியிருப்பாங்க.

><><

Wednesday, March 6, 2013

கவிதையின் பாடம்...


அந்தக் காலத்து டூயட் பாடல்கள் என்றாலே, தன் காதலியையும்,  தான் அவள்மீது கொண்ட மையலையும், இயற்கையின் கடைந்தெடுத்த அற்புதங்களுக்கு ஒப்பிட்டு  காதலன் வர்ணிப்பதும் அவள் அதைக் கேட்டு புளகாங்கிதம் அடைவதும்தாம் திகட்டிப் போகிற அளவுக்கு திரைப் பாடல்களில்.திரும்பத் திரும்ப இருக்கும் என்று நினைத்திருந்தேன்.  அதெல்லாம் இப்போது ரசிக்கப்படுமா என்றால் சந்தேகம்தான் என்றும்...
ஆனால் அப்படி கண் காணும் காட்சிகளை காதலுக்கு உவமை சொல்லி வசீகரமான வார்த்தைகளில் பாடும் கதாநாயகனைப் பார்த்து அட போங்க, இதெல்லாம் இயற்கையின் அன்றாட சாதாரண நிகழ்வுகளே என்று அறிவுறுத்தும் கதாநாயகி அன்றே இருந்திருக்கிறாள் என்று எனக்கு சட்டென்று சொல்லிச் சென்ற இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு சரணத்திலும் அவள் அவனுக்கு என்ன அழகாய்ப் பதிலிறுக்கிறாள்!

படம்: ‘இவன் அவனேதான்.’ இசை: எம். ரங்கராவ்.
வில்லிப்புத்தூரான் எழுதிய பாடலைப் பாடுபவர்கள் ஜானகி, திருச்சி லோகநாதன். 

பல்லவி:
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்...

சரணம் 1:                         
1. அவன்: மாமலை வானை தேன் முத்தம் ஈந்து
        மாசிலா காதல் பேசுதே சேர்ந்து..
  அவள்: மாமலை தேடும் வான் வெகு தூரம்
        நாமதைக் காண ஏது ஆதாரம்? 

2. அவன் :பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி
         புதுமையைப் பார் இது காதல் அத்தாட்சி!
  அவள்: கிளைக் கனத்தாலே நீரலை மேலே
        வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே!.

3. அவன்: காதலின் தாகம் தணித்திட வேண்டி
        கரைதனில் தாவி வரும் அலை பாராய்!
  அவள்: தென் திசைக் காற்றின் வேகத்தினாலே
        திரை நதி மோதும்  அது கரை மேலே!

4. அவன்: பொன் வண்டு பூவை தாவியே ஓடி
         புதுக் காதல் கீதம்  பாடுதே நாடி...
  அவள்: தேனுண்ணும் வண்டு தான் பசி கொண்டு
         பூ மலர் கண்டு கத்துது மண்டு! 



பாடலின் இனிமையான இசை மனதை அள்ளிக் கொண்டு போகும்! 
(படம்- நன்றி: கூகிள்; காணொளி- நன்றி: youtube.)

(அந்தக் கால ஆனந்த விகடனின் அட்டைப் பட ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது.
கணவன்: கல்யாணத்துக்கு முந்தி நான் உனக்கு எழுதின காதல் கடிதங்களை இப்ப படிச்சுப் பார்த்தா அசட்டுத்தனமா இருக்கு!
மனைவி: எனக்கு அப்பவே அப்படித்தான் இருந்தது! ) 
<<<>>>

Monday, April 4, 2011

பாடாத பாடல்கள் - 2






பாடல் காட்சி வெறும் பாடல் காட்சியாக மட்டுமில்லாது திரைக் கதையின் ஓர் அங்கமாக இருந்தால் எத்தனை ருசிகரமாக இருக்கும்! இதோ இப்ப பாட்டு வரும்னு சொல்றமாதிரி இல்லாமல் off beat ஆக, பொருத்தமாகவும் புதுமையாகவும் வந்த பாடல்கள் சிலவற்றை பதிவிட்டிருந்தேன். இதோ அதன் தொடர்ச்சி.
7 . சொல்ல வேண்டியதே இல்லை. அற்புதமாகத்தானே இருக்கும் அந்தக் காட்சி? 'நூறு பாடல் தொடர்ந்து பாட வேண்டும் அம்பிகாபதி. ஆனால் ஒரு முறை கூட எதிரில் மாடத்திலிருக்கும் தன் காதலி அமராவதி(பானுமதி)யின் முகத்தைப் பார்க்கக் கூடாது..' இந்த நிபந்தனைக்கு உட்பட்டு சிவாஜி பாடுவார். எங்கே அவர் தோற்று விடுவரோ என்ற பதைபதைப்புடன் நம்மைப் பார்த்து ரசிக்க வைக்கும் அந்தப் பாடல் ''சிந்தனை செய் மனமே..'' மறைந்த மேதை ஜி. ராமநாதன் இசையில் அமைந்த மறையாத பாடல் அம்பிகாபதி படத்தில் வருவது. கடைசியில் அவர் தோற்று விடுவதால் தான் கதை நாட்டில் காவியமானது, பாடல் நம் மனதில் ஓவியமானது.
8. 'பட்டணம் தான் போகப் போறேண்டி பொம்பளே..பணம் காசு பார்க்கப் போறேண்டி, நல்ல கட்டாணி முத்தே நீயும் வாடி பெண்டாட்டி தாயே...' என்று கணவன் அழைக்க 'டவுனு பக்கம் போகாதீங்க.. மாமா டவுனாகிப் போயிடுவீங்க,' என்று அவள் தடுக்க அந்தத் தெருக் கூத்து பாடல் 'காலம் மாறிப் போச்சு' (1957)படத்தில் வரும். பட்டணத்தில் என்னென்ன சொகுசான சௌகரியங்கள் என்று அவன் அடுக்க அதில் என்னென்ன இக்கட்டும் இடரும் என்று அவள் சொடுக்க பாட்டிலேயே அவன் திருந்தும் சுவையான பாடல்.
9.உலவும் தென்றல் காற்றினிலே... ராஜ குமாரியை குறி வைத்து ஏமாந்து மந்திரி குமாரியை மணந்த வில்லன் அவளை ஓடத்தில் உலா அழைத்துப் போகும் பாடல். ஒவ்வொரு வரியும் அர்த்தம் உள்ளதாக இருக்கும் இந்தப் பாடலில். 'தெளிந்த நீரைப் போலத் தூய காதல் கொண்டோம் நாம்...' என்றவள் தொடங்க, 'களங்கம் அதிலும் காணுவாய், கவனம் வைத்தே பார்.'. என்று அவன் கோடி காட்ட அந்த அப்பாவி மடந்தை அதையும் அவன் குறும்பாக எடுத்துக் கொண்டு 'குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?' என்று பாடுவாள். ஜி. ராமனாதனின் மிக மனம் தொடும் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு நிகர் இதுவரை வரவில்லை.
10. ஆயுதம் இழந்து நிற்கும் ராவணனைப் பார்த்து ராமன் 'இன்று போய் நாளை வாராய்...' என்று சொல்வான் அல்லவா? சம்பூர்ண ராமாயணம் படத்தில் அந்தக் காட்சியைத் தொடர்ந்து வரும் காட்சி இருக்கிறதே இப்போது நினைத்தாலும் மனதில் உருக்கம் இழையோடும். ஆம், அரண்மனைக்கு வந்ததும் ராவணன் அந்த தன் அவல நிலையை நினைத்து வீணை இசைத்து மனம் வாடிப் பாடும் பாடல் கே. வி. மகாதேவன் இசையில் மிளிரும். ''இன்று போய் நாளை வாராய்.. என எனை ஒரு மனிதனும் புகலுவதோ...மண் மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை ஏன் கொடுத்தாய் இறைவா...''
11. 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்.. அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்...' இந்தப் பக்கம் சிவாஜி குனிந்து தரையில் அமர்ந்து தன் காதலியின் அப்பா முன் மரியாதையாக பாட அந்தப் பக்கம் சோபாவில் அமர்ந்திருக்கும் எம். ஆர். ராதா உற்சாகமாகி உடன் ஸ்வரம் பாட, 'மாமா!' 'மாப்ளே!' என்று ஒருவரை ஒருவர் நெருங்க ஏற்கெனவே சிவாஜியைக் கொலை செய்ய வந்த வில்லனின் முகமும் வருங்கால மாமாவின் முகமும் ஒன்று போலிருக்கும் என்பதறிந்த நாம் அவர்கள் முகம் பார்த்து பதறப் போகும் வினாடியை எதிர்பார்த்து விலா நோக சிரித்து ரசிக்கும் அந்த சுவையான கர்நாடக சங்கீத காமெடிப் பாடல்...
12. மேற்கொண்டு ஒரு வார்த்தை சொல்ல வேண்டாம். சிவாஜி நடித்த முதல் மரியாதை. என்றாலே போதும், அந்த அற்புதமான காட்சிப் பாடல், இளைய ராஜாவின் 'பூங்காற்று' எல்லார் மனதிலும் திரும்பும்!

Thursday, January 13, 2011

பாடாத பாடல்கள்! - 1


ஒரு திரைப் படத்தின் கதையுடன், பாத்திரங்களுடன் ஒன்றியிருப்போம், அப்போது பார்த்து ஒரு டூயட் சாங், அல்லது கனவுப் பாடல் வரும். பார்ப்பது சினிமா என்று ஞாபகப்படுத்தி விடும். இப்படி விலகியிராமல் அதாவது பாடல் காட்சி பாடல் காட்சியாக இல்லாமல் எப்பவாவது சில முறைதாம் திரைக்கதையின் ஒரு காட்சியாக அமையும். சிறந்த திரைக் கதாசிரியரும் இயக்குனரும் அதற்குத்தான் படாத (பாடாத) பாடுபடுவார்கள். இதோ இப்ப பாட்டு வரும்னு சொல்றமாதிரி இல்லாம off beat ஆக, பொருத்தமாகவும் புதுமையான காட்சிகளை அமைத்தும் அவர்கள் தந்த பாடல்கள் சிலவற்றை நான் போற்றி மனதில் பத்திரப் படுத்திக் கொள்வதுண்டு. அந்தப் பொங்கலில் கொஞ்சத்தை இந்தப் பொங்கலின்போது உங்கள் பார்வைக்கு , ஸாரி, கேள்விக்கு வைக்கிறேன்.
1. 'அடுத்த வீட்டுப் பெண்' படத்தில் அஞ்சலி தேவியை காதலிக்கும் அப்பாவி டி.ஆர். ராமச்சந்திரனுக்குப் பாட வராது. அஞ்சலிக்கோ பாட்டுன்னா உயிரு. அடுத்தடுத்த வீடு. பால்கனியில போய் நின்னுக்கற டி.ஆர்.ஆர், பாடறது மாதிரி வாயசைக்கிறார். ''கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே...காதாலே கேட்டுக் கேட்டு செல்லாதே...'' உள்ளே இருந்து கொண்டு அவர் நண்பர் தங்கவேலு பாடுவார். (தங்கவேலுவுக்கே பின்னணி பி.பி.ஸ்ரீனிவாஸ் என்பது இன்னும் ரசமான விஷயம்.) குரலில் மயங்கி அஞ்சலி அவருடன் காதல் கொள்ள, இப்படியாக இந்தப் பாடல் படக் கதையோடு ஒன்றியிருக்கும்.

2. 'வானம்பாடி' என்றொரு பாடம். இதுவும் அ.வீ.பெண் போல வங்காளப் படத் தழுவல்தான். கவிப் போட்டி ஒன்று நடை பெறும். தேவிகா ஒரு பக்கம். எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறு பக்கம். ''பெண்கவியை வெல்ல வந்த ஆண்கவியே வருக, உங்கள் பெட்டகத்தைத் திறந்து வைத்து பொருளை அள்ளித் தருக...'' என்று தொடங்கி இவர் கேள்விகளைப் பாடலாய் வடிக்க, அவர் பதில் சொல்ல, கடைசியில் அவர் பதில் தெரியாமல் விழிக்க...என்று விறு விறுப்பான காட்சி விறு விறு பாடல் ரெண்டும் ஒருங்கே...
3. எந்த சங்கீத வித்வானிடம் தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, தன் வாழ்க்கை சிதைந்ததால் முடியாமல் போனதோ அவரிடம் தன் பத்து வயது மகனை அனுப்பி படிக்க வைக்கிறாள் கதா நாயகி. அவனும் படித்துத் தேறி விடுகிறான். அடுத்து அந்தக் காட்சி. வயதாகிவிட்ட அவர் மேடையில் பாடுகையில் இருமலில் முடியாமல் பாதிப் பாட்டில் திணற, மீதிப் பாடலைத் தொடர்ந்தபடியே கீழே இருந்து மேடையில் ஏறி வருகிறான் அந்தப் பையன். ஊகித்திருப்பீங்க. 'சங்கராபரணம்' கிளைமாக்ஸ் பாடல்! தொரகுணா இசி வந்தி சேவா...

4. ''நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை, நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை.. ''என்று தம்பிக்காக அண்ணனும் அண்ணனுக்காக தம்பியும் பெண் பார்த்து விட்டு வந்து நீச்சல் குளத்தில் நீந்தியவாறே பாடும் 'படித்தால் மட்டும் போதுமா'வில் வரும் ''பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை..'' என்ற மறக்க முடியாத சிவாஜி -- பாலாஜி பாடல் காட்சி.
5 சிறுமி டெய்சி இரானிக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் டீச்சர் நந்தா ''மிட்டி மிட்டி பாத் ஸே...'' என்ற அந்தப் பாடலைப் பாட ஒவ்வொரு சரணத்தின் இறுதியிலும் அதற்குப் பதில் சொல்கிற மாதிரி சிறுமி இரண்டு வரி பாடுவாள். சபாஷ் என்பார் நந்தா. கிளைமாக்சில் சிறுமி வில்லனால் கடத்தப்பட்டு ஒரு கட்டடத்தில் அடைக்கப் பட்டிருக்கையில் ஏரியாவை மட்டும் ஊகித்து அறிந்த கதாநாயகன் அந்தத் தெரு முனையில் நின்று டீச்சர் நந்தாவை அதே பாடலைப் பாடவைக்கிறான். மூன்றாவது சரணத்தின் போது... காவலுக்கு நின்ற ஆளை பரிதாபமாய் சிறுமி பார்க்க அவன் தலையசைக்க, அவள் பாடுகிறாள். ''சபாஷ்!'' என்ற வரி பிறக்கிறது இங்கே! ஓடிச்சென்று காப்பாற்றுகிறார்கள். 'கைதி நம்பர் 911' என்ற இந்திப் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி இது. தமிழிலும் 'கைதி கண்ணாயிரம்' என்று இந்தப் படம் வந்தது. ''கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்...'' என்ற பாடல். கேட்டிருப்பீர்களே? பின்நாட்களில் வந்த, அதான் சார், குடும்பம் சேர்ந்து ஒரு
பாட்டைப் பாடறதும் அப்புறம் ஆளுக்கொரு திசையில பிரிஞ்சு போனபின் கடைசியில் அந்தப் பாட்டு(!) அவங்களை ஒன்று சேர்க்கிறதும் என்று ஒரு 'என்ன கொடுமை சார் இது?' அதுக்கெல்லாம் தாத்தா இந்தப் பாடல் தான்.
6. துரத்தும் போலீசிடமிருந்து தப்ப பிரதீப் குமாரும் ஷேக் முக்தாரும் அந்த நாடகக் கொட்டகை மேடைக்குள் நுழைந்து விடுகிறார்கள். அங்கே கவாலிப் பாடல் பாடும் ஷகீலா பானுவுக்குப் போட்டிப் பாடல் பாட வேண்டிய திடீர் நிலை. சமாளித்து பாடுகிறார்கள். ''மில்னே கி நஜர் தும்சே...'' என்ற விளாசலும் பதில் விளாசலுமாக கலக்கும் பாடல் 'வஸ்தாதோம் கி வஸ்தாத்' இந்திப் படத்தின் அசத்தல் காட்சி. ''பாரடி கண்ணே கொஞ்சம், பைத்தியமானது நெஞ்சம்... '' (சாவித்திரி, அசோகன், மனோகர்.) என்று தமிழ் 'வல்லவனுக்கு வல்லவன்' படத்திலும் ரசித்தோம் இதை.

(தொடரும்...நீங்கள் ரசித்தால்!)