Monday, October 7, 2013

நேராத நேர விரயங்கள்....


 
அன்புடன் ஒரு நிமிடம் - 46 
 
வீட்டுக்குள் நுழையும்போதே கௌதம் கடுகடு முகத்தில் இருந்தார்.
 
“போன விஷயம் எல்லாம் நல்லபடியா நடந்திச்சா?”
 
“ஓ முடிச்சிட்டேன் ஒரு வழியா.”
 
“அப்படியே கையலம்பிட்டு வா, சாப்பிடலாம்,” என்ற சாத்வீகனிடம், “பசிக்கலேப்பா, கொஞ்ச நேரம் போகட்டுமே.” டி.வியில் உட்கார்ந்தார். ஏதோ ஒரு பழைய படம் ஓடிக்கொண்டிருக்க, “கொஞ்சம் பார்க்கலாம் இதை!”
 
சாப்பிடும்போது தான் கடுகடுவின் காரணம் சொன்னார். “வள்ளிசா ஒண்ணரை மணி நேரம் வேஸ்ட் இன்னிக்கு!”
 
“அடடே என்னாச்சு, எங்கே போச்சு அந்த தொண்ணூறு மணித்துளிகள்?”
 
“நம்ம பாலு இருக்கானே?”
 
“உன்னோட பால்ய நண்பன்?”
 
“அவன்தான். வழியில திடீர்னு பார்த்தேன். அட்மிஷனாம். மகனுக்கு. நீயும் வந்தா உதவியா இருக்கும்னு இழுத்துட்டு போயிட்டான். போய்ப் பேசிட்டு வந்ததில...”
 
“நேரம் காலியாயிட்டுது போல. த்சொ! த்சொ!” என்று வருத்தம் காட்டினார், “ஆருக்கும் தெரியறதில்லை நேரத்தோட அருமை.”
 
“அதான்!”
 
“இதை விளக்க உன்னை சில கேள்வி கேக்கறேன்.”
 
கௌதம் உற்சாகமானார். அப்பா எதையும் அவர் பாணியில் அசத்தலாக சொல்வார்.
 
“உன் சட்டையில இருக்கிற அஞ்சு பட்டனைப் போட எத்தனை நேரம் ஆகும்?”
 
“என்ன ஒரு அரை நிமிஷம்...”
 
“உன் ஷூவைப் போட?”
 
“ரெண்டு நிமிஷம்...”
 
“சுருக்கமா, வெளியே புறப்படறதானால்...?”
 
“ஒரு இருபது நிமிஷம்போல ஆயிடும்.”
 
“டிராஃபிக்கில் சில சமயம் சிக்னலுக்காக நிக்கிறப்ப?’
 
“அது ஆகும்... ஒரு சிக்னலுக்கு முப்பது செகண்டுன்னு பார்த்தால்கூட ஒரு நாளில் அரை மணி அதில் மட்டும்...”
 
“காண்டீனில் காபிக்காக காத்திருப்பதில்...?”
 
“டோக்கன், காபி என்று தடவைக்கு கால் மணி.”
 
“இப்படி இந்த நேரம் எல்லாம் வேஸ்ட் ஆவதைத் தடுக்க வழியில்லையா?”
 
கௌதம் சிரிப்பை அடக்கிக்கொண்டார். “எப்படிப்பா முடியும்? இதெல்லாம் தவிர்க்க முடியாத கால விரயங்கள்.”
 
“அப்படீன்னா அதெல்லாம் நினைச்சு வருத்தப் படறதில...”
 
“அர்த்தமில்லைன்னு உங்களுக்கே தெரியாதா?”
 
“தெரியும். நல்லாவே தெரியும். இப்படி அனிச்சை செயல்களிலிருந்து ஆங்காங்கே அற்ப காரணங்களுக்காக நேருவது வரையில் அஞ்சும் பத்துமாக தினம் வேஸ்ட் ஆகிற அறுபது எழுபது நிமிஷங்களுக்காக நாம அலட்டறதில அர்த்தம் இல்லேன்னு நமக்கு நல்லாவே தெரியும்தானே?”
 
“அப்புறம் எதுக்கு அந்த விவரம் எல்லாம் கணக்குப் போட்டுக்கொண்டு?”
 
“இன்னும் உன்னை ஒரு கேள்வி கேட்கத்தான்!”
 
“ஓ?”
 
“இப்படி தினம் ஒண்ணு,ரெண்டு மணி நேரம் கண்டபடி செலவாகிறதிலேயே நாம வருத்தப்படாதபோது ஒரு பையனின் படிப்புக்கு உதவி செய்யற விஷயத்துக்கு முக்கால் மணி நேரத்தை செலவிட்டதை வீண் என்று சொல்லலாமா?”
 
யோசித்த கௌதம் சொன்னார், “இதை விளக்க நீங்க எடுத்துக்கொண்ட நேரம் வீணில்லை அப்பா!”
 
('அமுதம்' ஜூன் 2013 இதழில் வெளியானது.)
<<<>>>
படம் - நன்றி: கூகிள் )
 

Friday, October 4, 2013

கண்ணாடி அரண்





அவசரமாக பைக்கில் விரைந்து கொண்டிருந்த நான் ‘டம் டமா... டம் டமா...’ என்ற உடுக்கைச் சத்தம் கேட்டுத் திரும்பினேன்.

ரோட்டோரமாக இரு புறமும் பலர் கூடி நின்று பார்த்துக் கொண்டிருக்க... அந்தரத்தில் கயிற்றின் மீது ஒரு சிறுமி. அஞ்சு வயசு கூட இருக்காது. கையில் ஒரு கழியை வைத்துக் கொண்டு லாகவமாக அடி மேல் அடி வைத்து அந்த ஒற்றைக் கயிற்றின் மேல் நடந்து கொண்டிருந்த காட்சி என்னை உலுக்கியது.

பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினேன்.

சாலையோரமாக தரையில் முளையடித்துக் கட்டிய கயிற்றை ரெண்டு பக்கமும் பெருக்கலாக நிறுத்திய மூங்கில்களின் மேலாகக் கொண்டு போயிருந்தார்கள். அதன்மேல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தாள் சிறுமி.

இறங்கப் போகிறாள் என்று நினைத்தால், குனிந்தவள் தலையில் ஒரு சின்னச் சொம்பை வைத்தான் அந்தச் சிறுமியின் தகப்பன். அதையும் வைத்துக் கொண்டு நிமிர்ந்தவள் சொம்பு கீழே விழுந்து விடாமல் மீண்டும் கயிற்றில் அடிகளை எடுத்து வைத்துத் திரும்பி நடந்தாள்.

எங்கே தலை குப்புற விழுந்து விடப் போகிறாளோ என்று எனக்குப் படபடப்பாக இருந்தது.

மூன்றாவது முறையாக அவன் ஓர் அலுமினியத் தட்டைக் கயிற்றின் மீது வைக்க அதை ஒரு காலால் அழுத்திக் கயிற்றின் மேல் நகர்த்தியபடி மறு முனை வரை நடந்து சென்றாள் அந்தச் சிறுமி.

இதோடு இது முடிந்து அந்தப் பெண் குழந்தை கீழே இறங்கிவிடக் கூடாதா என்று நினைத்தேன். கீழே அமர்ந்திருந்த அந்தச் சிறுமியின் தாய் ஒரு தட்டை எடுத்துக் கொண்டு காசு வாங்கக் கிளம்பினாள். அப்பாடா, இதுதான் கடைசி ரவுண்ட்!

உலகம் புரியாத வயதில் அந்தச் சிறுமி உயிரைப் பணயம் வைத்து நிகழ்த்திய சாகசத்தில் உருகிப் போயிருந்தேன் நான்.

அவரவர் ஐம்பது காசு, ஒரு ரூபாய், அதிக பட்சம் ஐந்து ரூபாய் வரை தட்டில் போட, நான் முழு ஐம்பது ரூபாய் நோட்டைப் போட்டுவிட்டு, அந்தத் தாய் எவ்வளவு சந்தோஷப் படுகிறாள் என்று ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தேன். நிமிர்ந்து என்னைப் பார்த்த அவள், சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.

ரொம்பச் சின்னதாக ஒரு விசும்பல் கேட்ட மாதிரி இருந்தது. தட்டில் ஒரு கண்ணீர்த் துளி விழுந்து தெறித்தது. இடுப்பிலிருந்த கைக்குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே சட்டென்று நகர்ந்துவிட்டாள்.

அவள் செயல் எனக்குப் புரியவில்லை. ஏன், எதற்காக அவள் அழ வேண்டும்?

வீடு வந்து மனைவியிடம் நடந்ததைச் சொல்லி விளக்கம் கேட்டேன்.

''இதில் புரிய என்னங்க இருக்கு? பார்த்திட்டிருந்த யாரோ ஒருத்தராகிய உங்களுக்கே அந்தச் சிறுமி செய்த சாகசம் அவ்வளவு வருத்தத்தை உண்டாக்கியிருந்ததுன்னா, பெத்த தாயான அவளுக்குத் தினம் தினம் அந்தக் குழந்தையை அப்படி ஒரு காரியத்தைச் செய்ய வைக்கிறது எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? கல்லாலானதுன்னு அவள் மனசுக்குப் போட்டிருந்த அரண், வெறும் கண்ணாடிதான்கிறது எப்பவாவது உங்களை மாதிரி சில பேர் இப்படி அதீதக் கருணைங்கிற கோலியை எறியும்போதுதானே அவளால் தெரிஞ்சுக்க முடியுது?''

என்ன தெளிவாகச் சொல்லிவிட்டாள் என் மனைவி! ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க?
<><><>
(விகடனில் 2002 -ஆம் ஆண்டு பவழவிழா பரிசு பெற்ற குட்டிக் கதை.)
<<>>

(படம்- நன்றி: விகடன்)

Tuesday, October 1, 2013

நல்லதா நாலு வார்த்தை... 18

 
 
'தோல்வியிலிருந்து தோல்விக்கு, 
உற்சாகம் 
தொலையாமல் தாவுவதே வெற்றி.'
-Winston Churchill
('Success is stumbling from failure to
failure with no loss of enthusiasm.')
<<>>
'சொல்லவோ
சொல்லாமலிருக்கவோ 
இயலாததை, 
சொல்லுவது இசை.'
- VictorHugo 
('Music expresses that which cannot be said and on
which it is impossible to be silent.')
<<>>
'மிக நிச்சயமாய் இந்த 
மகா பிரபஞ்சத்தில் நாம் 
முன்னேற்ற முடியுமென்கிற 
ஒரே இடம்
நம்மிடம் தான்' 
-Aldous Huxley
('There is only one corner of the universe you
can be certain of improving and that is your own self.') 
<<>>
'தொட்டிடாததொரு 
அழகிய மலர் மணம், 
தோட்டத்தையே ஆனந்த
இடமாக்குவது போன்றது 
அன்பு.'
-Helen Keller
('Love is like a beautiful flower which I may not
touch, but whose fragrance makes the garden
a place of delight just the same.')
<<>>
'வாழ்க்கையை நேசிக்கிறோம் 
வாழப் பழகி விட்டதால் அல்ல,
நேசிக்கப் பழகி விட்டதால்!'
-Friedrich Nietzche
('We love life not because we are used to
living but because we are used to loving.')

<<>>
'ஒளி பரப்பிட
வழி இரண்டு: 
மெழுகுவர்த்தியாயிருப்பது 
அல்லது 
அதைப் பிரதிபலிக்கும் 
ஆடியாயிருப்பது.'
-Edith Wharton
('There are two ways of spreading light to
be the candle or the mirror that reflects it.')
<<>>
'உவப்பென்பது 
உரியவர்களாக இருப்பது 
உடையவர்களாக இருப்பதல்ல.'
- Elizabeth Harvey
('Happiness is belonging, not belongings.')
 
*******
(படம்- நன்றி : கூகிள்)