Tuesday, September 13, 2011

மோதிரக் கை


''என்ன டைரக்டர் சார், உங்க குருநாதர் டைரக்டர் மாசிலாமணி இப்படி கமென்ட் அடிச்சிருக்கார் உங்க லேட்டஸ்ட் படத்தை?'' ஓடி வந்தான் அசிஸ்டன்ட் டைரக்டர் பழநி.
''என்ன, என்ன சொல்லியிருக்கார் என் மூணாவது படத்தை?'' ஆவல் பொங்கிற்று டைரக்டர் சுகந்தனுக்கு.
''காட்சிகளை  இன்னும் விறுவிறுப்பாய் இப்படி இப்படி அமைத்திருக்க வேண்டும்னு எழுதி ஒரு குட்டு வெச்சிருக்கார் பாருங்க.''
''அப்படியா, சபாஷ்!'' துள்ளிக் குதித்தார் சுகந்தன்.
இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''என்னங்க இது, உங்க முதல் படத்துக்கு கமென்ட் சொல்றப்போ பளிச்சென்று நல்லாயிருக்குன்னு ஒரே வார்த்தையில் சொன்னார். ஆனா நீங்களோ அவ்வளவுதான் சொன்னாரான்னு குறைப்பட்டுக்கிட்டீங்க.''
''எஸ்!''
''ரெண்டாவது படத்துக்கும் அதையே தான் சொன்னார். அப்பவும் நீங்க மூஞ்சியைத் தூக்கி வெச்சிட்டு அவ்வளவுதான் சொன்னாரான்னு கேட்டீங்க.''
''ஞாபகமிருக்கு.''
''இப்ப இந்தப் படத்தை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்னு கமென்ட் கொடுத்திருக்கார். இதுக்குப் போய் துள்ளிக் குதிக்கிறீங்களே?''
''ஆமா, ரொம்ப சந்தோஷப்படறேன்.  உடனே போன் போட்டு அவருக்கு சொல்லணும்,'' என்றார் முகம் மலர.
இன்னமும் விளங்காமல் விழித்துக் கொண்டிருந்த பழநிக்கு விளக்கினார், ''மடையா, என் குருநாதர் சொல்லுவார், எந்த நல்ல படமுமே நூறு பெர்சன்ட் சரியா வராது. அதிலும் இம்ப்ரூவ் பண்ண வழியிருக்கும்பாரு. ஸோ அப்படி என் படத்தை  அவர் சொன்னால் நல்லா வந்திருக்குன்னு தானே அர்த்தம்? எந்த சஜெஷனும் கொடுக்கலேன்னா வெத்துப் படம்னு அர்த்தம்.  அதான் எனக்கு இப்ப சந்தோஷமாயிருக்கு, புரியுதா?"                 


Wednesday, August 24, 2011

நம்பிக்கை




''கண்ணன், மாதவன் ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் நான் இந்த ப்ராஜெக்ட் லீடர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கணும், '' என்ற எம்.டி. பரசுராம் தன் மேனேஜரின் முகத்தைப் பார்த்தார்.
''ஒ.கே.''
''உங்க அபிப்பிராயம் என்ன, முதல்ல கண்ணனைப் பத்திச் சொல்லுங்க.''
''நல்ல திறமைசாலி. எம்.பி.ஏ. பிளஸ் எம்.எஸ்.  ஐம்பதுக்கு மேல  பிராஜக்டில  அனுபவம் .
''குட்.''
''அது  மட்டுமில்லே. இது வரை எந்த ஐடியா கேட்டும் என்கிட்டே வந்ததில்லே. என்னப்பா உனக்கு சந்தேகமே வராதான்னு நானே அசந்து போய்க் கேட்டேன். நெவர்னு சிரிச்சுக்கிட்டே சொல்வான்...''
''ஒ.கே. மாதவன் எப்படி?''
''திறமை சாலி தான் அவரும்.  எம்.பி. ஏ. பிளஸ் எம்.எஸ். ஐம்பது சொச்சம் பிராஜக்ட்ஸ்...''
''கோ ஆன்.''
''ஆனால் ஒரு விஷயம். ஏதாவது சின்ன சின்ன தவறு பண்ணிட்டு வந்து ஆலோசனை கேட்பார்.''
கண்ணனையே தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால் பரசுராமோ, ''ஒ.கே, மாதவனையே போட்டுருங்க,'' என்றார்.
''சார்?''
''பாருங்க, பிராஜெக்ட் லீடர் வேலையில் இருக்கிறவங்க திறமையானவர்களாக இருக்கிறது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நம்பகமானவர்களாக இருப்பதும். தானே செயல் படுகிறவர்களை விட தவறு செய்தாலும் நம்மகிட்டே யோசனை கேட்டு செய்யறவங்க தான் நம்பகமானவங்க.''
''உண்மைதான் சார்,'' என்றார் அவரின் நுண்ணறிவை வியந்தபடி. 

Tuesday, August 16, 2011

எனினும்..



னினும் மீதமிருக்கிறது தன்னம்பிக்கை
அது எழ வைக்கிறது.


எனினும் ஆழ் மனதில்  அன்பிருக்கிறது
அது மறக்க  வைக்கிறது.
 

எனினும் அனுபவ அறிவிருக்கிறது
அது  துவளாதிருக்க செய்கிறது.
 

எனினும் சில நேரம் மழை பெய்கிறது
அது மனதைக் குளிர வைக்கிறது.
 

எனினும் அலைகடல் இசையிருக்கிறது.
அது மகிழ்ச்சி அளிக்கிறது.


'எனினும்' - அந்த வார்த்தையில் என் 
உலகிருக்கிறது!