Tuesday, November 18, 2025

உலவும் தென்றல்...


”உலவும் தென்றல் காற்றினிலே...ஓடமிதே.. நாமதிலே...”
ராஜ குமாரியை குறி வைத்து ஏமாந்து ’மந்திரி குமாரி’யை மணந்த வில்லன் அவளை ஓடத்தில் உலா அழைத்துப் போகும் பாடல்.
ஒவ்வொரு வரியும் கதையோடியைந்த அர்த்தம் உள்ளதாக இருக்கும் இந்தப் பாடலில். அவளைத் தலை முழுகுவதே அவன் எண்ணம். அதை அறியாப் பேதை...
"உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே.." என்றவள் பாட, "இதயம் அந்த மலைக்கு ஏது அன்பைக் காட்டவே?" என்று உண்மையைக் கோடி காட்டுகிறான்.
அவளோ புரியாமல் தொடர்கிறாள்: "தெளிந்த நீரைப் போலத் தூய காதல் கொண்டோம் நாம்..." அப்போதும் அவன் "களங்கம் அதிலும் காணுவாய், கவனம் வைத்தே பார்." என்று மறைமுகமாக...
அந்த அப்பாவி மடந்தை அதையும் அவன் குறும்பாக எடுத்துக் கொண்டு "குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?" என்று பாட, "உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே..." என அவன் முடிப்பான்.
ஜிக்கியும் லோகநாதனும் அசத்தும் அற்புதமான அந்த வரிகளை இயற்றியவர் மருதகாசி.
தமிழ் சினிமா இசையின் தலை சிறந்த 10 பாடல்களில் ஒன்றான இதன் நிகரில்லா இசையை (கேட்கும்போதே ஓடத்தில் சென்றாற்போல..) அமைத்தவர் மேதை ஜி. ராமநாதன்.
ஏற்கெனவே அவர் இசையமைத்த எம் கே தியாகராஜ பாகவதர் பாடலொன்று இதே இசை பாணியில்.. 'அமர கவி' படத்தில் "யானைத் தந்தம் போலே.."
படத்துடன் ஒன்றிய பாடல் காட்சி - 9.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!