கம்ப்யூட்டர்கள் வந்து கணக்குப் போடுவதை ஜுஜுபி ஆக்கி விட்டன. ஆனால் கம்ப்யூட்டரையே ஜுஜுபி ஆக்கிய மனிதர்களும் உண்டு .
Shakuntala Devi... இன்று பிறந்த நாள்!
சர்க்கஸில் வேலைபார்க்கும் அப்பா தன் மேஜிக்கால் மக்களை அசத்தியதுண்டு. ஆனால் வீட்டுக்கு வந்து தன் மூன்று வயதுப் பெண்ணுக்கு சீட்டுக் கட்டு வித்தை கற்றுவித்தபோது அவள் காட்டிய கணித ஞாபக சக்தியில் அசந்து போனார். அந்த அபார திறமை அவளை வைத்தே நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு அவரை உந்தித் தள்ளிற்று.
'எண்'ணிச் சில வருடங்களில் 'எண்'ணிலா புகழ் பெற்றார்..
ஒன்பது இலக்க எண் ஒன்றைச் சொல்லி அதன் மூன்றாம் வர்க்க எண்ணைக் கேட்கிற நேரத்துக்குள் அவர் விடையைச் சொல்லி விடுகிறார்.. அதிசயித்தது நியூயார்க் டைம்ஸ்.
புதிருக்குப் பிரபலம் சகுந்தலா தேவி. ஒன்று முயற்சித்துப் பாருங்களேன்: அந்தக் குடும்பத்தில் ஒவ்வொரு பையனுக்கும் எத்தனை சகோதரிகள் உண்டோ அத்தனை சகோதரர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் எத்தனை சகோதரிகள் உண்டோ அதற்கு இரண்டு மடங்கு சகோதரர்கள். சொல்லுங்க. . எத்தனை சகோதரர்கள்? எத்தனை சகோதரிகள்? (விடை: கீழே)
இரண்டு 13 இலக்க எண்களின் பெருக்குத் தொகை யை 28 செகண்டுகளில் சொல்லியதுதான் இவருடைய கின்னஸ் ரெக்கார்டு .
எழுபதுகளில் அமெரிக்க யூனிவர்சிட்டி ஒன்றில்... 201 இலக்க எண் ஒன்றின் 23 ஆம் வர்க்கமூலம் கேட்டபோது அதைச் சொல்ல தேவி எடுத்துக்கொண்ட நேரம் ஐம்பது வினாடி. அவரது விடையை சரிபார்க்க கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம் செய்ய ஆன நேரம் அதைவிட அதிகம்!
ஹ்யூமன் கம்ப்யூட்டர் என்று அழைப்பார்கள் ஆனால் அவருக்கு பிடித்ததில்லை... கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததே மனிதன் தானே என்பார்.
எழுத்தாளரும் கூட. நாவலும் எழுதியிருக்கிறார், சமையலும் எழுதியிருக்கிறார். ஜோசியத்தையும் விட்டுவைக்கவில்லை. ‘Astrology for You’ என்று ஒரு புத்தகம்!
Google Doodle.. ஒளிர்ந்தது இவருக்கும். 2013-இல். இவர் கதை திரைப்படமாக வந்திருக்கிறது. வித்ய நாயகியாக வித்யா பாலன்.
(விடை: 3 சகோதரி, 4 சகோதரர்)

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!