ஏகாந்தமாக குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கிறாள் அந்த லேடி. குதிரை வழியில் மக்கர் பண்ணுகிறது. ஆளற்ற வனாந்திர பகுதி! என்ன செய்வது? விழிக்கிறாள். அந்த நேரம் அங்கே வரும் இளம் ஷெரீஃப் அதன் காலைப் பார்த்து, அடிபட்ட இந்த குதிரையால் இனி நடக்க முடியாது என்று தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு செல்வதாக சொல்கிறார்.
‘நல்ல வேளை, நீங்கள் தற்செயலாக இங்கே வந்தீர்கள்!’ என்கிறாள் அவள் நன்றியுடன். ‘நான் தற்செயலாக வரவில்லை,’ புன்னகைக்கிறார், ‘தினசரி காலையில் நீங்கள் இப்படி செல்வீர்கள் என்று தெரியும்.’ புரிந்து கொண்டு வெட்கம் அடைகிறாள்.
Burt Lancaster. இன்று பிறந்த நாள்…
ஐரிஷ்காரர்களை சிக்கனத்துக்கு பேர் போனவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த ஐரிஷ் வம்சாவழி நடிகர் தாராளமாக நடிப்பை வாரி வழங்கினார் பல வித்தியாசமான ரோல்களில்.
உதட்டின் கடைவாயில் ஒரு மென் சிரிப்பு ஒளிர்ந்து கொண்டே இருக்கும். தீர்க்கமான உச்சரிப்பும் சரி, அந்த இன்னொசன்ட் சிரிப்பும் சரி ஏகப்பட்ட ரசிகர்களை திரட்டி இருந்தது.
30 வயதுக்கு மேல் திரைக்கு வந்தாலும் முதல் படமே பராசக்தி அவருக்கு. ஆமா, ‘The Killers’ அவரை உயரத்துக்கு ஏற்றி விட்டது. தன் வீரத்தை சர்க்கஸில் காட்டிவிட்டு தீரத்தை ரெண்டாம் உலக யுத்தத்தில் காட்டிவிட்டு திறமையை நடிப்பில் காட்ட வந்தவர். சர்க்கஸ் அனுபவத்தை பிற்பாடு ‘The Trapeze’ இல் சக்சஸ்ஃபுலாக பிரயோஜனப் படுத்தினார்.
‘Rainmaker’ ஒரு அற்புதமான படம். வறட்சி வாட்டும் கிராமத்தில் வாடும் தன் ஆடு மாடுகளுக்காக வருந்துகிறாள் லிஸி. வயதாகியும் கல்யாணம் ஆகவில்லையே என்று வருந்துகிறார்கள் அவள் பெற்றோர். அவள் காதலிக்கும் அந்த ஊர் ஷெரீஃப் உள்பட யாருமே அவளை கண்டுகொள்ளவில்லை. வந்து சேருகிறான் அந்த ஊருக்கு ஒரு செப்புடு வித்தைக்காரன். மழை வரவழைக்கிறேன் பேர்வழி என்று. அவள் அப்பாவும் அவனை நம்பி பணம் கட்டுகிறார். அவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்புகிறார் ஷெரீஃப். ஆனால் அவன்தான் லிஸியைக் கண்டு கொள்கிறான். உற்சாகமாக அவளிடம் பழகுகிறான். தன்னை ஒருவன் விரும்பும்போது ஒரு பெண்ணின் மனம் எத்தனை அழகாக பூக்கிறது! கடைசியில் மழையும் பெய்து விடுகிறது! வித்தைக்காரனாக நடிப்பில் வித்தை காட்டியிருப்பார்.
‘பென்ஹர்’ ஹீரோவாக நடித்திருக்க வேண்டியவர். 10 லட்சம் டாலருடன்வந்த சான்ஸை உதறி விட்டார். ஆனால் இவர் முயற்சித்தும் கிடைக்கவில்லை ‘Godfather’ ரோல்.
அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டியூட் ஐம்பது அமோக நட்சத்திரங்களில் முப்பத்தி ஒன்பதாவது என்றது. எம்பயர் பத்திரிகையும் என்டர்டெய்ன்மென்ட் வீக்லியும் போட்டி போட்டுக்கொண்டு இவரை தங்கள் டாப் லிஸ்ட்களில் ஏற்றிக்கொண்டனர்.
மசாலா படங்களில் நடித்து மௌஸை ஏற்படுத்திக்கொண்டு அதைவைத்து தரமான பாத்திரங்களை நடிக்கத் துடித்தவர் இந்த கென்னடியின் நண்பர். நாலு அகாடமி நாமினேஷனில் ‘Elmer Gantry’ ஆஸ்கார் அவார்டு வாங்கி தந்தது.
டீன் மார்டினுடன் நடித்து அமோக வசூலைக் குவித்த படம் அந்த ‘ஏர்போர்ட்’ (1970). ஆனால் அதெல்லாம் ஒரு படமா என்கிறார்.
கிளார்க் கேபிளுடன் நடித்த ‘Run Silent, Run Deep’ படமாகட்டும்... ஆட்ரி ஹெபர்னுடன் நடித்த ‘The Unforgiven’ ஆகட்டும், தன் முத்திரை தான் பதித்துவிடுவார் அழகாக. பொதுவாக பிரபல நடிகர் பெயரைச் சொன்னதும் அவருடன் நடித்த பிரபல ஹீரோயின் நினைவுக்கு வருவார். ஆனால் இவர் பெயரைச் சொன்னதும் பலர் நினைவுக்கு வருவது Kirk Douglas! ஏழு படங்களில் இவருடன் நடித்த மற்றொரு பிரபல நடிகர். போட்டி போட்டுக்கொண்டு கலக்குவார்கள்.
H G Wells இன் பிரபல நாவல். ‘The Island of Dr. Moreau’ படத்தில் விலங்குகளை அரை மனிதர்களாக மற்றும் விசித்திரமான டாக்டரின் பாத்திரத்தில் இவர். இதே படத்தின் ரீமேக்கில் மார்லன் பிராண்டோ செய்தார் அதை.
‘List of Adrian Messenger’ படத்தில் 12 பிரபல நடிகர்களுடன் இவரும் கேமியோவாக வந்தார். முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
அப்பாவுக்கு மகன் திரைக்கதை எழுதும் சந்தோஷம் எத்தனை பேருக்கு கிடைக்கும்? இவருக்கு கிடைத்தது. படம் ‘The Bad News Bears’ மகன் Bill Lancaster.
Quotes? ரொம்ப அழகாக வாழ்க்கையை சொல்லிவிட்டார், ‘வாழ்க்கை என்பது நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்களோ அதை உங்கள் அறிவின் வட்டத்துக்குள் வாழ வேண்டியது’ என்று.
'கொஞ்ச நாளில் நாம் எல்லோரும் மறக்கப்பட்டு விடுவோம். ஆனால் நம் சிறந்த படங்கள் நிற்கும். அந்த நினைவுச் சின்னங்கள்தான் வேண்டியது.'


No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!