Sunday, November 2, 2025

ரசிகர்களின் மன ராஜ்யத்தை...


ஹோட்டல் பார்ட்டியில் மனம் லயிக்காத ரம்யா கிருஷ்ணன் பால்கனியில் எட்டிப் பார்க்கிறார் . தெருவோரமாக காதில் ஒரு கையும் ஆர்மோனியத்தில் ஒரு கையுமாக பாடிக்கொண்டிருக்கும் அவன் கண்ணில் விழ, கைகாட்டி உள்ளே வர சொல்லுகிறார். நன்றியும் மகிழ்வும் முகத்திலாட, ஹாலில் நுழையும் அவன் பாட ஆரம்பிக்கிறான்.
"தனிமையில் உள்ளம் தவிக்கையில் அதை என் குரலாக்குவேன்!
மனவலி எல்லை தாண்டும்போது அந்தக் குரலெடுத்து பாடிடுவேன்!"
அடுத்த மூன்று நிமிடத்தில் அவர்கள் எல்லாரையும் தன் பாட்டுக்கு ஆட வைக்கிறான். அவள் நெஞ்சுக்குள் புகுந்து தேடவைக்கிறான்... (படம்: Chahat. லிங்க் கீழே)
அந்த எளிமை.. அந்த innocence.. அந்தத் துள்ளல்! உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது . அந்த நடிப்பில் எல்லார் இதயத்திலும் சம்மணம் இட்டு உட்கார்ந்து விடுகிறார் அவர்! கிங் கான் என்று அழைக்கப்படுவதில் ஆச்சரியமே இல்லை.
ஷாரூக் கான்... இன்று பிறந்த நாள்.. !
ராஜ்கபூர், திலீப்குமாருக்குப் பிறகு ரசிகர்களின் மன ராஜ்யத்தைப் பிடித்துக்கொண்ட பெரிய நட்சத்திரம்!
சேல்ஸ்மேன் ஆகத் தொடங்கியவரின் படங்களின் சேல்ஸ் வானைத் தொடுகிறது.
முறையாக நடிப்பைப் பயின்று கொண்டவர் முதலில் தொடங்கியது டிவி சீரியல்களில். திரையுலகில் நுழையும் போதே சிறந்த புதுமுக நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் அவார்டை பாக்கெட்டில் செருகிக் கொண்டவர் ('Deewana'). அடுத்த வருடமே சிறந்த நடிகராக 'Baazigar' படத்துக்காக, அதே வருடத்தில் சிறந்த வில்லனுக்காக நாமினேஷன் 'Darr' படத்துக்காக என்று அசத்தியவர்.
அப்புறம் DDLJ ('Dilwale Dulhaniya Le Jayenge') வந்ததும் ஷாரூக் நம்ம வீட்டு பையன் ஆனதும் ஊருக்குத் தெரியும். Tom Cruise நடிக்கவிருந்த படம் அது. என்னவொரு வெற்றி! வருடங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தன, படம் தியேட்டரை விட்டு மாறவில்லை.
Kuch Kuch Hota Hai... Devdas... Chak De! India...சொல்லணுமா ஒவ்வொன்றாக?
உலகின் 50 பிரபல மனிதர்களின் ஒருவராக Newsweek தேர்ந்தெடுத்தது. திரையில் முன்னால் இருக்கும் இவர் ஏராளமான நற்பணிக் காரியங்களுக்குப் பின்னால் இருக்கிறார்.
அங்கே ஒரு படத்தில் ('Shakthi') கழுத்தைக் காயப்படுத்திக் கொண்டது, இங்கே ஒரு படத்தில் ('Darr')விலா எலும்பை உடைத்துக் கொண்டது என்று ஒன்றி விடும் நடிப்புக்கான விலையை ஒன்றுவிடாமல் கொடுத்தவர்.
ரொம்பவே மெனக்கெட்டது ‘My Name Is Khan’ படத்துக்குத்தான்! 'Titanic' ஜேம்ஸ் காமெரான் பாராட்டிய நடிப்பு அது. Asperger’s Syndrome இல் பாதித்தவரின் பாத்திரம். காரக்டராகவே வாழ்ந்து, விவரம் படித்துக் குவித்து, பாதித்தவர்களுடன் பழகி..
திலீப் குமார் 1957இல் Filmfare Best Actor Award வாங்கிய அதே தேவதாஸ் பாத்திரத்துக்கு 2003இல் இவர் வாங்கினார். அவர்போல் மிகவும் அதிகமுறை அந்த அவார்டை வாங்கியது இவரென்பதும் ‘ஷா’தனை தான். இதுவரை 8. (25 நாமினேஷன்)
மறுத்ததற்காக வருந்திய படம் '3 Idiots'. What a miss!
"என்னை முதலிடத்தில் வைத்திருக்கும் ரசிகர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்? கடைசிவரை நடித்துக் கொண்டிருப்பதுதான்!"
அமிதாப்! கமல்! நஸிருதீன் ஷா! நானா படேகர்! என்று வியக்கிறார் இவர். "நான் எவ்வளவோ தூரம் போகணும்!" என்னவொரு தன்னடக்கம்!

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!