காற்றில் மிதந்து வருகின்ற அந்த வரிகள்… சொக்கிப் போகும் ஜிக்கியின் குரலினிமையில்.
அதே குரல் “சாதுர்யம் பேசாதேடி! என் சலங்கைக்கு பதில் சொல்லடி!” என்று கம்பீரமாகவும் ஒலிக்கிறது ‘வஞ்சிக்கோட்டை வாலிபனி’ல்.
நடிப்புதான் ஆரம்பம். சிறுமியாக சில வேடங்கள்.. இரண்டொரு படங்களில் நடித்ததைத் தொடர்ந்து சிட்டாடலின் ‘ஞானசௌந்தரி’யில் மாஸ்டர் எஸ் வி வெங்கட்ராமன் மற்றொரு சிறுமிக்கு இவரைப் பாடவைத்தார். பாட்டு என்றால் அப்படி ஒரு பாட்டு! “அருள் தாரும் தேவ மாதாவே.. ஆதியே இன்ப ஜோதி..!” சில வரிகள் இவர் பாட மீதியை பி.ஏ.பெரியநாயகி பாடினார். பெரிய பாடகியானார். மீதியை நாடறியும்.
இப்படி ‘சின்னப் பெண்ணான போதிலே’ நடிக்க வந்தவர்தான் பாடகியாகி அந்த சூபர் ஹிட் “சின்னப் பெண்ணான போதிலே…” யையும் நமக்குத் தந்தார். (‘ஆரவல்லி')
“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ…” இசை ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் ஜிக்கி பாடல் அதுதான்! அதில் ‘பாடும் தென்றல் தாலாட்டுதே..’ என்று அவரே பாடியது போல்... பாடும் தென்றல் போன்றதே அவர் குரலினிமை.
எந்த நடிகைக்கும் பொருத்தமாய், பாந்தமாய் அமையும் குரல். அஞ்சலி தேவிக்கு அவர் பாடிய பாடலை கேட்டால் “உள்ளம் கொள்ளை போகுதே…!” அதே ‘நீலமலைத் திருடனி'ல் “கொஞ்சும் மொழி பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேணுமடி…” ஒரு அட்டகாச மெலடி!
பத்மினிக்கு பாடும்போது பாடல் நம் பக்கம் வந்து ஆடும்.: “பச்சைக்கிளி பாடுது.. பக்கம் வந்தே ஆடுது..”(அமர தீபம்). கூவாது அசந்து பார்க்கும் குயில், இவரது “பூவா மலரும் பூத்ததே பொன்னும் மணியும் விளைந்ததே..” கேட்கையில். (‘நான் பெற்ற செல்வம்’) அதே ஜி.வரலட்சுமிக்கு பாடிய மற்றொன்று ‘குலேபகாவலி’யில் “கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே…” எம்.என். ராஜத்துக்காக ‘பாக்தாத் திருடனி'ல் பாடிய “சிரிச்சா போதும் சின்னஞ் சிறு பொண்ணு… திண்டாடச் செய்திடும் மைகூட்டும் கண்ணு..” கேட்டால் போதும், மற்றொரு ஹிட் “யௌவன ராணிதான் இசைபாடும் வாணி நான்…” நினைவுக்கு வரும்.
அவர் திறமையை பற்றி இப்படி ஒரு நிகழ்வு சொல்லப்படுவதுண்டு. சங்கர் - ஜெய்கிஷன், ராஜ் கபூர் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறார்கள் ரிகார்டிங்கில். இந்தியிலும் (‘Aah’) தமிழ் டப்பிங்கிலும் (‘அவன்') தயாராகிறது அந்த படம். “Raja Ki Aayegi...” என்ற அந்தப் பாடல் எத்தனை இனிமையானதோ அத்தனை கஷ்டமானது பாடுவதற்கு. முதலில் இந்திப் பாடல் பதிவாகும். ஆனால் அவங்க முதலில் பாடட்டுமே என்றதும் சற்றும் தயங்காமல் அந்த மெட்டைப் பாடுகிறார் ஜிக்கி. “கல்யாண ஊர்வலம் வரும்.. உல்லாசமே தரும்.. மகிழ்ந்து நான் ஆடிடுவேன்... “அசந்து ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள் அனைவருமே. அகமகிழ்ந்து பாராட்டுகிறார் லதா.
“மதனா எழில் ராஜா நீ வா.. “ மறந்திருக்க மாட்டீர்கள் அந்தப் பாடலை. ‘செல்லப் பிள்ளை’ (1955) யில் வருவது. சுதர்சனம் தந்த சுவையான டியூன்.. ரிவால்வரை நீட்டி கே ஆர் ராமசாமி பாடு பாடு என்று சாவித்திரியை விரட்ட, அவர் நிமிடத்துக்கு நிமிடம் பாடும் வேகத்தை அதிகரித்துக் கொண்டே போக வேண்டிய சவாலான பாடல் அது. சற்றும் இனிமை குன்றாமல், பதற்றத்தையும் காட்டத் தவறாமல்… அற்புதம் என்ற பதம் பத்தாது அதைப் பாராட்ட.
அதே படத்தில் வரும் “ஆனந்தம் இங்கே இருக்குது பாருங்க..” என்ற அபூர்வ பாடலையும் இசையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து பாடியிருப்பார். பாடலின் இடையிடையே அப்படி ஆடு, இப்படி ஆடு என்று சொல்லும் இரண்டொரு வரிகளை மட்டும் சங்கதிகளுடன் உற்சாகமாகவும் அட்டகாசமாகவும் பாடியிருப்பார் ஒரு பிரபல பிரபல பாடகர். யார்? நம்ம டி.எம்.எஸ். தான்!
அதுபோல் ஒரு ஜோடியைக் 'கேட்டதில்லை' என்று எல்லோரும் கொண்டாடினார்கள். அத்தனை இனிய டூயட்களை அள்ளி வழங்கினார்கள் இவரும் ஏ.எம்.ராஜாவும். பெரும்பாலும் ஜெமினி சாவித்திரிக்கு.. “வாசமிகும் மலர் சோலையிலே…”(‘யார் பையன்') “ஆசை பொங்கும் அழகு ரூபம்... (‘ஆசை’) “மனமே நிறைந்த தெய்வம்..” (‘மகேஸ்வரி') சிவாஜி ஜமுனாவுக்கு பாடிய “அன்பே.. நீ அங்கே.. நான் இங்கே..“ (‘பொம்மை கல்யாணம்’) சிவாஜி பத்மினிக்கு “இன்று நமதுள்ளமே…”(தங்கப்பதுமை)
தமிழ் சினிமாவின் தலை சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்றான ஜி.ராமநாதனின் “உலவும் தென்றல் காற்றினிலே... ஓடமிதே.. நாமதிலே...” (மந்திரி குமாரி) இவர் பாடியதைப் போல யார் பாடமுடியும்?
சொல்லணுமா தனியே அந்தப் பாடலைப் பற்றி? “யாரடி நீ மோகினி..” (உத்தமபுத்திரன்) “மன்மதா நீ ஓடிவா!” அந்த வரிகள் மிதந்து வரும்போதே ஜிக்கியின் வரவைச் சொல்லிவிடுகிறது.
‘சுகம் எங்கே?’ என்றால் இதைக் கேட்பதுதான்: கே ஆர் ராமசாமியின் கணீர் குரலுக்கு பன்னீர் தெளித்தது போல் இவர் பாடும் “தென்றல் அடிக்குது என்னை மயக்குது தேனமுதே இந்த வேளையிலே..” (விஸ்வநாதன் ராமமூர்த்தி - ‘சுகம் எங்கே?’)
கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே டியூன் என்றாலும் ரெண்டுமே செம பாடல்கள்.. ‘மதுரை வீரனி’ல் “சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்.. சோம்பல் வளர்த்தா ஏற்படும் கஷ்டம்..” & ‘காலம் மாறிப்போச்சு’வில் “ஏரு பூட்டிப் போவாயே அண்ணே சின்னண்ணே!” ரெண்டையுமே லாவகமாக பாடியிருந்தார்.
சோகப்பாட்டு என்றாலே ஜிக்கிதான் என்று ஒரு காலம் இருந்தது. “என் சிந்தை நோயும் தீருமா..” (‘காவேரி’) துன்பம் சூழும் நேரம்.. (‘அமர தீபம்’) என்று வரிசையாக… "ஆசை நிலா சென்றதே அபலை கண்ணீரில் நீந்தியே.." (‘மாமன் மகள்’) பாடலும் அபலையின் குரலில் அவரின் உருக்கமாகப் பாடும் திறமைக்கு ஓர் எ.கா.
எந்தப் பாடலுக்கும் வளைந்தும் (“கண்களால் காதல் காவியம்..” சாரங்கதரா) நிமிர்ந்தும் ("காதல் வியாதி பொல்லாதது…" தாய்க்கு பின் தாரம்) முறுக்கியும் (“என்னைப் பாராய் என் கண்ணைப் பாராய்..”) கொடுக்கும் வாள் போன்ற குரல்...
இசை அரசிகள் கீதா தத்தும் ஆஷா பான்ஸ்லேயும் பாடிய ஓ.பி.நய்யாரின் அந்தப் பாடல்! அதன் தமிழ் தழுவலில் (“கண்ணா கண்ணா வாராய்…”) ஜிக்கி நம்மை இசைப் படகில் அழைத்துச் செல்வது ஓர் இனிய அனுபவம்.
சி எஸ் ஜெயராமனுடன் “உள்ளம் ரெண்டும் ஒன்று.. நம் உருவம் தான் இரண்டு…” (புதுமைப் பித்தன்) பாடும் போதும் சரி, திருச்சி லோகநாதனுடன் “வாராய் நீ வாராய்..” (‘மந்திரி குமாரி')... டி.எம்.எஸ் உடன் “ஏன் இந்த இரவு? ஏன் அந்த நிலவு?” (‘புதிய பாதை’) சீர்காழியுடன் “மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி..” (‘கோமதியின் காதலன்')... கண்டசாலாவுடன் “கனிந்த அன்போடு...“(‘அனார்கலி’) பாடும்போதும் சரி எடுப்பான குரலில் ஈடுகொடுத்து பாடுவார்.
ரொம்பச் சொல்லவேண்டிய பாட்டு ஏ.எம்.ராஜாவின் ஆக்ரோஷமான ஆர்கெஸ்ட்ரேஷனில் இவர் பாடிய அந்த மாபெரும் சோகப்பாடல்.. நம்பிக் காதலிக்கும் நம்பியார் நல்லவரல்ல என்று தெரியாத அப்பாவிப் பெண் வசந்தி அவர் அழைத்துச் செல்லும் படகில்.. நடக்கப் போகும் ஆபத்தை அறியாமல்…நம்பிக்கையையும் திகிலையும் ஒருசேர குரலில்…பாடுகிறார். “ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன் - அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தை கண்டேன்..” ஒவ்வொரு சரணத்திலும் படிப்படியாக ஸ்தாயியை ஏற்றுக்கொண்டேபோய் கடைசி வரியில் ‘மறைவதென்று நீங்கள் சொன்னால் மறைய சம்மதம்…’ என்று முடிக்கும்வரை வயலின்களுக்கும் ஜிக்கிக்கும் நடக்கும் இசைப் போராட்டம்! அந்தப் படகை போலவே பாடலை இழுத்துச்செல்லும் அழகு!
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் பாடிய பாடல்கள்! எல்லாமே இனிமை என்றாலும் அவருக்காகவே காத்திருந்த மாதிரி திகைக்க வைத்த இனிமை தந்தன இவ்விரு பாடல்கள். சங்கர் கணேஷ் இசையில் “நான் உன்னை நினைச்சேன்.. நீ என்ன நினைச்சே?” ('கண்ணில் தெரியும் கதைகள்') அதில் அந்த வரி, “நம்மை யாரு பிரிச்சா.. ஒரு கோடு கிழிச்சா...” ரொம்பவே உணர்வு கொப்பளிக்கும். இளையராஜா இசையில் “நினைத்தது யாரோ..” (பாட்டுக்கு ஒருதலைவன்) ஒரு மாஸ்டர்பீஸ்!

No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!