Saturday, March 24, 2018

அவள் - கவிதைகள்

 Image result for free images

471.
தொட்டுக் கொள்ள
உன்னைக் கேட்கிறது
தென்றல்.
><><

472.
ஒரு புறம் அவள்.
மறுபுறமும்
அவளே.
><><

473
அன்புக்கு இன்னொரு வடிவம் உண்டு,
அறிந்துகொண்டேன் உன்னைக் கண்டு.
><><

474
நான் உன்னை சந்தித்ததும்
நாள் ஞாயிற்றுக் கிழமையாகி விடுகிறது.
><><

475
மேகம் ஒதுங்கிக் கொள்ள
மின்னல் கண் சிமிட்டுகிறது
உன்னைப் பார்த்து.
><><

476
தெளிவு தன்னைத்
சரிபார்த்துக் கொள்கிறது
உன்னிடம்.
><><

477
காற்றில் நீந்துகிறேன்,
உன் காதலால்.
><><

478
புறப்பட்டு விட்டன பூக்கள்
புது இடம் தேடி... உன்
புன்னகையைப் பார்த்தபின்.
><><

479
உன்னுடன் நுழையும்போது
வளைந்து வரவேற்கின்றன
என்னையும்
தோட்டத்துச் செடிகள்.
><><

480
எதையும் மறக்க வைத்து விடுகிறாய்
எப்போதும் உன்னை நினைக்க வைத்து!
><><

Thursday, March 22, 2018

வேலைக்கு ஆவது...

அன்புடன் ஒரு நிமிடம் - 123

தியாகுவை அழைத்துக் கொண்டு அந்த இலக்கியக் கருத்தரங்கிற்கு செல்ல வந்திருந்தான் வினோத். 
”இதோ குளிச்சிட்டு வர்றேண்டா.”
”டேக் யுர் டைம். நிறைய நேரம் இருக்கு.”
இருந்தாலும் டைம் கொஞ்சம் நீண்டுதான் போனது. கவனித்தான் வினோத். அப்பவே குளிச்சு முடிச்சிட்ட மாதிரி இருந்ததே அப்புறமும் என்ன பின்கட்டை விட்டு வர இத்தனை நாழி? எட்டிப் பார்த்தான்.
பின்கட்டில் தலைக்கு மேல் உயரத்தில் அமைந்திருந்த நீளப் பலகணியின் கண்ணாடிகளில் ஒன்றைக் கழற்றிக் கொண்டிருந்தான் தியாகு. இவன் பார்த்துக் கொண்டிருக்க அவன் அந்த கண்ணாடியை சோப் தண்ணீர் தெளித்து பிரஷால் கழுவி துணியால் கிளீன் செய்தான். 
பலகணியில் வரிசைக்கு நான்காக பதினாறு இருந்தன. அவன் கழற்றியது ரெண்டாம் வரிசையில் நாலாவது. 
துடைத்து முடிந்ததும் அதை அதனிடத்தில் பொருத்தினான். உபகரணங்களை எடுத்து அதனிடத்தில் வைத்தான்.
கையைத்  துடைத்துக் கொண்டு இவனிடம், ”கிளம்பலாமா?” 
”பாக்கி கிளாஸ் எல்லாம்...?’
”இன்னிக்கு ஒண்ணுதான். நாளைக்கு ஒண்ணு. அப்படி...”
அவனை ஏற இறங்கப் பார்த்தான் வினோத். ”இதென்னடா இது. ஒரே ஒரு கிளாஸை மட்டும் மெனக்கெட்டு உட்கார்ந்து கழுவிக்கொண்டு?  ஒன்றை மட்டும் கழுவ இருபது நிமிஷம் ஆகுதுன்னா அதிலே, சோப், தண்ணி, பிரஷ், துணின்னு அதுக்கான எல்லா தேவைகளையும் எடுத்து வைக்க, கழற்ற, கை கழுவன்னு பத்து நிமிஷம் ஆகாதா? இந்தப் பத்து நிமிஷ நேரம்  தினம் அதிகப்படியா வேஸ்ட் ஆகறதுக்கு. ஒரேயடியா 16 கிளாஸையும் ஒரே நாளில் கிளீன் செய்யறதுன்னா அந்த நேரம் மிச்சம் இல்லையா? அதை யோசிக்கலியா? அப்படிச் செய்ய நினைக்கலியா?”
”அப்படித்தான் இதை செய்ய நினைச்சேன்.  நினைச்சு ஒண்ணரை வருஷம் ஆச்சு.” 
”ஓண்ணரை வருஷமா?”
”ஆமா. சுத்தமா வேலை நடக்கலே. நடக்காது. அதான் நம்ம மனசு. மொத்தமா ஒரு ரெண்டரை மணி நேரம் வேணும்னா அது நமக்கு சுலபமா கிடைக்காது. அதுவே ஒரு எக்ஸ்க்யூஸ் ஆகிடும் மனசுக்கு. மூடும் வராது. ஆக, ஒரு நாளும் அந்த வேலை நடக்காது. தினம் ஆகிற பத்து நிமிஷ வேஸ்டை நினைக்காதபோது... இப்ப பாரு, பாதி வேலை நடந்தாச்சு. எது பெட்டர்?”
“இதுவேதான்...” 
('அமுதம்' செப் 2015 இதழில் வெளியானது)

Wednesday, March 14, 2018

நல்லதா நாலு வார்த்தை.. 87

’எப்படியும் நீ சிந்தித்துத்தான் ஆக வேண்டும்,
ஏன் பெரிதாக சிந்திக்கக்கூடாது?’
- Donald Trump
('You have to think anyway, so why not think big?')' 

’நான் என்பது
நானும் என் சூழ்நிலைகளும்.’
- Jose Ortega y Gasset
('I am I plus my circumstances.') 

'உங்களைப் பற்றி மற்றவர்கள்
கொண்டிருக்கும் அபிப்பிராயம்
அவர்களின் பிரசினை,
உங்களுடையது அல்ல.'
- Elisabeth Kubler - Ross
('The opinion which other people have
of you is their problem, not yours.')
 

’அனைத்து விஷயங்களோடும்
பொறுமை காத்திடுங்கள், ஆனால்
ஆக முதலில் உங்களோடு!.’
- St. Francis de Sales
('Have patience with all things, but first of all with yourself.')
 

‘வாழ்க்கையை பெரிதாக ஏன்
எடுத்துக் கொள்ளவேண்டும்,
ஒருநாளும் அதிலிருந்து
உயிரோடு வெளியேறமுடியாதுதானே?'
- Elbert Hubbard
('Do not take life too seriously.
You will never get out of it alive.')
 

'வாழ்வதென்பது
தான் தொலைந்து போனதாக
ஒருவன் உணர்வது.'
- Jose Ortega y Gasset 
('To live is to feel oneself lost.')
 

‘வானவில் மீது ஆதிவாசிக்குரிய
மதிப்பான உணர்வு நமக்கில்லை,
எப்படி உருவாகிறது அது என்பதறிவதால்!
கிடைத்திருக்கிற அளவு இழந்திருக்கிறோம்
விஷயத்தின் உள்ளே மூக்கை நுழைத்து.’
- Mark Twain
('We have not the reverent feeling for the rainbow that
the savage has, because we know how it is made.
We have lost as much as we gained by prying into that matter.')
 

'மறுத்துப் பேசாமல் புன்னகைக்கும் ஒரு
மனிதனை ஏற்கவைப்பது இயலாது.'
- Muriel Spark
('It is impossible to persuade a man who does 
not disagree, but smiles.')
 

'ஓநாய்கள் இரைதேட அஞ்சும் பாதைகளினூடும்
ஓர் வழி கண்டு கொள்ளும் காதல்.'
- Gordon Byron
('Love will find a way through paths where wolves fear to prey.') 

’ஊகிக்க முடிகிறதாகவே வாழ்க்கை இருந்தால்
அதன்பின் அது வாழ்க்கையாக இருக்காது;
அதில் சுவையும் இருக்காது.’
- Eleanor Roosevet
('If life were predictable it would cease to be life,
and be without flavour.')
 

'சந்தர்ப்பமும் முன்னேற்பாடும்
சந்திக்கும் நேரமே அதிர்ஷ்டம்.'
- Pierre Trudeau
('Luck, that's when preparation and opportunity meet.') 

><><><><