Thursday, March 22, 2018

வேலைக்கு ஆவது...

அன்புடன் ஒரு நிமிடம் - 123

தியாகுவை அழைத்துக் கொண்டு அந்த இலக்கியக் கருத்தரங்கிற்கு செல்ல வந்திருந்தான் வினோத். 
”இதோ குளிச்சிட்டு வர்றேண்டா.”
”டேக் யுர் டைம். நிறைய நேரம் இருக்கு.”
இருந்தாலும் டைம் கொஞ்சம் நீண்டுதான் போனது. கவனித்தான் வினோத். அப்பவே குளிச்சு முடிச்சிட்ட மாதிரி இருந்ததே அப்புறமும் என்ன பின்கட்டை விட்டு வர இத்தனை நாழி? எட்டிப் பார்த்தான்.
பின்கட்டில் தலைக்கு மேல் உயரத்தில் அமைந்திருந்த நீளப் பலகணியின் கண்ணாடிகளில் ஒன்றைக் கழற்றிக் கொண்டிருந்தான் தியாகு. இவன் பார்த்துக் கொண்டிருக்க அவன் அந்த கண்ணாடியை சோப் தண்ணீர் தெளித்து பிரஷால் கழுவி துணியால் கிளீன் செய்தான். 
பலகணியில் வரிசைக்கு நான்காக பதினாறு இருந்தன. அவன் கழற்றியது ரெண்டாம் வரிசையில் நாலாவது. 
துடைத்து முடிந்ததும் அதை அதனிடத்தில் பொருத்தினான். உபகரணங்களை எடுத்து அதனிடத்தில் வைத்தான்.
கையைத்  துடைத்துக் கொண்டு இவனிடம், ”கிளம்பலாமா?” 
”பாக்கி கிளாஸ் எல்லாம்...?’
”இன்னிக்கு ஒண்ணுதான். நாளைக்கு ஒண்ணு. அப்படி...”
அவனை ஏற இறங்கப் பார்த்தான் வினோத். ”இதென்னடா இது. ஒரே ஒரு கிளாஸை மட்டும் மெனக்கெட்டு உட்கார்ந்து கழுவிக்கொண்டு?  ஒன்றை மட்டும் கழுவ இருபது நிமிஷம் ஆகுதுன்னா அதிலே, சோப், தண்ணி, பிரஷ், துணின்னு அதுக்கான எல்லா தேவைகளையும் எடுத்து வைக்க, கழற்ற, கை கழுவன்னு பத்து நிமிஷம் ஆகாதா? இந்தப் பத்து நிமிஷ நேரம்  தினம் அதிகப்படியா வேஸ்ட் ஆகறதுக்கு. ஒரேயடியா 16 கிளாஸையும் ஒரே நாளில் கிளீன் செய்யறதுன்னா அந்த நேரம் மிச்சம் இல்லையா? அதை யோசிக்கலியா? அப்படிச் செய்ய நினைக்கலியா?”
”அப்படித்தான் இதை செய்ய நினைச்சேன்.  நினைச்சு ஒண்ணரை வருஷம் ஆச்சு.” 
”ஓண்ணரை வருஷமா?”
”ஆமா. சுத்தமா வேலை நடக்கலே. நடக்காது. அதான் நம்ம மனசு. மொத்தமா ஒரு ரெண்டரை மணி நேரம் வேணும்னா அது நமக்கு சுலபமா கிடைக்காது. அதுவே ஒரு எக்ஸ்க்யூஸ் ஆகிடும் மனசுக்கு. மூடும் வராது. ஆக, ஒரு நாளும் அந்த வேலை நடக்காது. தினம் ஆகிற பத்து நிமிஷ வேஸ்டை நினைக்காதபோது... இப்ப பாரு, பாதி வேலை நடந்தாச்சு. எது பெட்டர்?”
“இதுவேதான்...” 
('அமுதம்' செப் 2015 இதழில் வெளியானது)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

கோமதி அரசு said...

//தினம் ஆகிற பத்து நிமிஷ வேஸ்டை நினைக்காதபோது... இப்ப பாரு, பாதி வேலை நடந்தாச்சு. எது பெட்டர்?//

இது பெட்டர்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!