Wednesday, August 13, 2014

முடிகிற இடத்தில்...

அன்புடன் ஒரு நிமிடம் - 62


"எனக்கு உங்களை ஒண்ணு கேட்கணுமே தாத்தா ?''வீடு வந்து சேர்ந்ததுமே விழி விரியக் கேட்டான் அபிஜித்.   சாத்வீகனும் அவனுமாக அவரது நண்பர்கள் இருவரின் வீடுகளுக்குப் போய் திரும்பியிருந்தனர்,
"தாராளமா."
"இப்ப நாம ரெண்டு இடத்துக்குப் போனோம் இல்லையா?"
"ஆமா, முதல்ல ராஜதுரை வீடு.   அப்புறம் பத்மநாபன். ரெண்டு பேருமே சின்ன வயசில  என்னோடு படிச்சவங்க. நெருங்கின நண்பர்கள்."
"ஓஹோ? முதல் வீட்டில என்ன கேட்டீங்க?"
"அவன் பிசினஸ் பத்தி. அதில் உள்ள கஷ்டம் எல்லாம் சொன்னான்.  சமீபத்தில் உண்டான நஷ்டம் பற்றி குறிப்பா சில விஷயங்களை சொல்லி விளக்கினான்.  எப்படி சரிப்படுத்தி கொண்டு போறதுன்னே தெரியலேன்னு வருத்தப்பட்டான்."
"நீங்க என்ன பண்ணினீங்க?"
"எனக்குத் தெரிந்த சில வழிகளை... பொதுவா வியாபாரத்தில் வரும் வரும் சிக்கல்களை சமாளிக்கத் தோதான வழிமுறைகளை எடுத்துச் சொன்னேன்"
"சரி. அப்புறம் அடுத்த நண்பர் வீட்டுக்கு போனோம். அவரிடம் என்ன கேட்டீங்க?"
"பத்மநாபனும் அதே லைன் தானே? எப்படி போயிட்டிருக்கு பிசினஸ்னுதான்."
"என்ன சொன்னார்?"
"சொல்லி வெச்ச மாதிரி அங்கேயும் அதே கதை! அவன் கஷ்டங்கள்,  கொஞ்ச நாள் முன்னாள் ஏற்பட்ட நஷ்டங்கள் எல்லாம் சொன்னான். எப்படி சமாளிக்கப் போறேன்னே தெரியலேன்னு ரொம்ப வருத்தப்பட்டு பேசினான்...."
"நீங்க என்ன பண்ணினீங்க?"
"எல்லாம் நல்லபடியா வரும்னேன். வேறே எதும் பேசலே,"
."ஏன்  தாத்தா  ஏன்?" அபிஜித் குரல் உயர்த்தினான், "முதலாமவருக்கு வழிமுறைகள் எல்லாம் சொல்லி அட்வைஸ் கொடுத்தவர்  அடுத்த நண்பரிடம் மட்டும் வாயை மூடிக்கொண்டது ஏன்?"
"சிம்பிள். ராஜதுரையிடம்  தனக்கு வேண்டியவர்கள் சொல்லும் நல்ல அறிவுரைகளை, ஐடியாக்களை அலசிப் பார்த்து தீர்மானித்து அதை செய்து பார்க்கும்  குணம் உண்டு.  அதனால் அவனுக்கு என் ஐடியாக்களை சொன்னேன். அவன் அதை விரும்பக் கூடியவன். பத்மநாபனோ வேறே மாதிரி. வேண்டியவரோ மற்றவரோ யார் எதை சொன்னாலும் பொருட்படுத்தாமல்  எந்த ஒரு விஷயத்தையும் தன்போக்கில் தீர்மானித்து செய்பவன். தன்னைவிட அறிந்தவர் யாருமில்லை என்றெண்ணும் ரகம்..   ஆகவே அங்கே என் ஐடியாக்களைக்  கொட்டி என்ன பிரயோஜனம்? அது மட்டுமல்ல, தனக்கு நேரம் சரியில்லாததால் ஒவ்வொருத்தராக வந்து அறிவுரை சொல்கிறார்கள் என்று எரிச்சல்தான் ஏற்படும் அவனுக்கு. அதான் அங்கே நான் வாய் திறக்கவில்லை.."
<<>> 
(’அமுதம்’ டிசம்பர் 2013 இதழில் வெளியானது)


(படம் - நன்றி : கூகிள்) 

Thursday, August 7, 2014

தொலையாத நாட்கள்...



தொலையாத நாட்கள்...

சூட்கேஸை உருட்டிக்கொண்டே தன் பேத்தி 
ரயில்வே ஸ்டேஷனில் முன் செல்லும்போதும்
திரளான ஸ்டேடியத்தில் இதோ நம்ம சீட் என்றவள்
தானே மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுக்கையிலும்
விரலை அரை அங்குலம் தேய்த்து ஜி.பி.எஸ்ஸை
சொடுக்கி காரை லெஃப்டில் விட சொல்லுகையிலும் 
அதே வயதில் திருவிழா கூட்டத்தில் 
தான் தொலைந்து போய் ஏற்படுத்திய பரபரப்பை 
நினைத்து வெட்கமும் பெருமையும் உறுகிறாள் இவள்.
><>< 

வலிக்காத நாட்கள்... 

பென்ஜே கிரீம் தடவி விடவா என்று கேட்கிற மனைவியிடமோ
தினம் இப்படி படுத்துதே முதுகு வலி
திருவனந்தபுரம் ஒரு நடை போய் வாருங்களேன்
என்று சொல்லும் நண்பரிடமோ
சுடுதண்ணி வெச்சு ஒத்தடம் கொடுத்தால் கேட்குமென
பரிந்துரைக்கும் பக்கத்து வீட்டு மாமியிடமோ
எப்படி சொல்லுவார் அவர்
சென்னையிலிருந்து பேரப்பயல் வந்து மேலே படுத்துப் புரண்டால்
அடுத்த நிமிடமே காணாமல் போய்விடும்
அத்தனை வலியும் என்று?
><><

(படம் - நன்றி: கூகிள்)

Sunday, August 3, 2014

நட்பின் தினம்.


நம்மை நினைத்துக் கொண்டிருக்கும் நண்பர்களை
நாம் நினைக்கவே இந்த
நட்பின் தினம்.

நன்றியும் நவில்வோம்
நல்கிய இறைவனுக்கு…

நட்பெனும் படகிலேறி
நாட்களைக் கடப்போம்
நகர்வதில் களிப்புடன்…

விட்டுபோன நட்புக்களில்
தொட்டு உயிர்ப்பிப்போம்
ஒன்றையேனும்...

பழகும் நட்புகளுடன்
பகிர்ந்திடுவோம்
பழைய நினைவுகளை…

நட்புக்கொள்ள நபரின்றி
பற்றிக்கொள்ள கொம்பின்றி
வாடும் உயிரொன்றுக்கு
நட்பாய் உதவுவோம்…
நாமின்று.

>>><<<

(படம்- நன்றி: கூகிள்)