அன்புடன் ஒரு நிமிடம் - 62
"எனக்கு உங்களை ஒண்ணு கேட்கணுமே தாத்தா ?''வீடு வந்து சேர்ந்ததுமே விழி விரியக் கேட்டான் அபிஜித். சாத்வீகனும் அவனுமாக அவரது நண்பர்கள் இருவரின் வீடுகளுக்குப் போய் திரும்பியிருந்தனர்,
"தாராளமா."
"இப்ப நாம ரெண்டு இடத்துக்குப் போனோம் இல்லையா?"
"ஆமா, முதல்ல ராஜதுரை வீடு. அப்புறம் பத்மநாபன். ரெண்டு பேருமே சின்ன வயசில என்னோடு படிச்சவங்க. நெருங்கின நண்பர்கள்."
"ஓஹோ? முதல் வீட்டில என்ன கேட்டீங்க?"
"அவன் பிசினஸ் பத்தி. அதில் உள்ள கஷ்டம் எல்லாம் சொன்னான். சமீபத்தில் உண்டான நஷ்டம் பற்றி குறிப்பா சில விஷயங்களை சொல்லி விளக்கினான். எப்படி சரிப்படுத்தி கொண்டு போறதுன்னே தெரியலேன்னு வருத்தப்பட்டான்."
"நீங்க என்ன பண்ணினீங்க?"
"எனக்குத் தெரிந்த சில வழிகளை... பொதுவா வியாபாரத்தில் வரும் வரும் சிக்கல்களை சமாளிக்கத் தோதான வழிமுறைகளை எடுத்துச் சொன்னேன்"
"சரி. அப்புறம் அடுத்த நண்பர் வீட்டுக்கு போனோம். அவரிடம் என்ன கேட்டீங்க?"
"பத்மநாபனும் அதே லைன் தானே? எப்படி போயிட்டிருக்கு பிசினஸ்னுதான்."
"என்ன சொன்னார்?"
"சொல்லி வெச்ச மாதிரி அங்கேயும் அதே கதை! அவன் கஷ்டங்கள், கொஞ்ச நாள் முன்னாள் ஏற்பட்ட நஷ்டங்கள் எல்லாம் சொன்னான். எப்படி சமாளிக்கப் போறேன்னே தெரியலேன்னு ரொம்ப வருத்தப்பட்டு பேசினான்...."
"நீங்க என்ன பண்ணினீங்க?"
"எல்லாம் நல்லபடியா வரும்னேன். வேறே எதும் பேசலே,"
."ஏன் தாத்தா ஏன்?" அபிஜித் குரல் உயர்த்தினான், "முதலாமவருக்கு வழிமுறைகள் எல்லாம் சொல்லி அட்வைஸ் கொடுத்தவர் அடுத்த நண்பரிடம் மட்டும் வாயை மூடிக்கொண்டது ஏன்?"
"சிம்பிள். ராஜதுரையிடம் தனக்கு வேண்டியவர்கள் சொல்லும் நல்ல அறிவுரைகளை, ஐடியாக்களை அலசிப் பார்த்து தீர்மானித்து அதை செய்து பார்க்கும் குணம் உண்டு. அதனால் அவனுக்கு என் ஐடியாக்களை சொன்னேன். அவன் அதை விரும்பக் கூடியவன். பத்மநாபனோ வேறே மாதிரி. வேண்டியவரோ மற்றவரோ யார் எதை சொன்னாலும் பொருட்படுத்தாமல் எந்த ஒரு விஷயத்தையும் தன்போக்கில் தீர்மானித்து செய்பவன். தன்னைவிட அறிந்தவர் யாருமில்லை என்றெண்ணும் ரகம்.. ஆகவே அங்கே என் ஐடியாக்களைக் கொட்டி என்ன பிரயோஜனம்? அது மட்டுமல்ல, தனக்கு நேரம் சரியில்லாததால் ஒவ்வொருத்தராக வந்து அறிவுரை சொல்கிறார்கள் என்று எரிச்சல்தான் ஏற்படும் அவனுக்கு. அதான் அங்கே நான் வாய் திறக்கவில்லை.."
<<>>
(’அமுதம்’ டிசம்பர் 2013 இதழில் வெளியானது)
7 comments:
கருத்தான சிறிய உதாரண விளக்கம்...
நன்று!
பாத்திரம் அறிந்து பிச்சை இடணும் என்பார்கள். அதுபோலவே தான் நாம் பிறருக்கு அறிவுரை வழங்குவதும் ... என்பதைச் சொல்லும் அழகான நிகழ்வுக்குப் பாராட்டுகள். அமுதம் இதழில் வெளியானதற்கு வாழ்த்துகள்.
மிகவும் அருமையான கதை..நன்றி
அமுதம் இதழில் உலாவந்த
அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்.!
அன்புள்ள ஜனா.
வணக்கம். எதார்த்தம். எளிமை. நடைமுறை. வாழ்வியலை சாதாரணமாக சொல்லிப்போகும் கதை. அருமை.
சரியாகச் சொன்னீர்கள். நல்ல கதை.
அருமையான கதை நண்பரே
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!