அந்தக் காலத்து டூயட் பாடல்கள் என்றாலே, தன் காதலியையும், தான் அவள்மீது கொண்ட மையலையும், இயற்கையின்
கடைந்தெடுத்த அற்புதங்களுக்கு ஒப்பிட்டு காதலன் வர்ணிப்பதும்
அவள் அதைக் கேட்டு புளகாங்கிதம் அடைவதும்தாம் திகட்டிப் போகிற அளவுக்கு திரைப்
பாடல்களில்.திரும்பத் திரும்ப இருக்கும் என்று நினைத்திருந்தேன். அதெல்லாம் இப்போது ரசிக்கப்படுமா என்றால்
சந்தேகம்தான் என்றும்...
ஆனால் அப்படி கண் காணும் காட்சிகளை
காதலுக்கு உவமை சொல்லி வசீகரமான வார்த்தைகளில் பாடும் கதாநாயகனைப் பார்த்து அட
போங்க, இதெல்லாம் இயற்கையின் அன்றாட சாதாரண நிகழ்வுகளே என்று அறிவுறுத்தும் கதாநாயகி
அன்றே இருந்திருக்கிறாள் என்று எனக்கு சட்டென்று சொல்லிச் சென்ற இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு சரணத்திலும் அவள் அவனுக்கு என்ன அழகாய்ப் பதிலிறுக்கிறாள்!
படம்: ‘இவன் அவனேதான்.’ இசை: எம். ரங்கராவ்.
வில்லிப்புத்தூரான் எழுதிய பாடலைப்
பாடுபவர்கள் ஜானகி, திருச்சி லோகநாதன்.
பல்லவி:
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் மாலை நேரம்...
சரணம்
1:
1. அவன்: மாமலை வானை தேன் முத்தம் ஈந்து
மாசிலா காதல் பேசுதே சேர்ந்து..
அவள்: மாமலை தேடும் வான் வெகு தூரம்
நாமதைக் காண ஏது ஆதாரம்?
2. அவன் :பூங்கொடி நீரை தழுவிடும் காட்சி
புதுமையைப் பார் இது காதல் அத்தாட்சி!
அவள்: கிளைக் கனத்தாலே நீரலை மேலே
வளையும் தன்னாலே பாரும் கண்ணாலே!.
3. அவன்: காதலின் தாகம் தணித்திட வேண்டி
கரைதனில் தாவி வரும் அலை பாராய்!
அவள்: தென் திசைக் காற்றின் வேகத்தினாலே
திரை நதி மோதும் அது கரை மேலே!
4. அவன்: பொன் வண்டு பூவை தாவியே ஓடி
புதுக் காதல் கீதம் பாடுதே நாடி...
அவள்: தேனுண்ணும் வண்டு தான் பசி கொண்டு
பூ மலர் கண்டு கத்துது மண்டு!
பாடலின் இனிமையான இசை மனதை அள்ளிக் கொண்டு போகும்!
(படம்- நன்றி: கூகிள்; காணொளி- நன்றி: youtube.)
(அந்தக் கால ஆனந்த விகடனின் அட்டைப் பட
ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது.
கணவன்: கல்யாணத்துக்கு முந்தி நான்
உனக்கு எழுதின காதல் கடிதங்களை இப்ப படிச்சுப் பார்த்தா அசட்டுத்தனமா இருக்கு!
மனைவி: எனக்கு அப்பவே அப்படித்தான்
இருந்தது! )
<<<>>>


