Tuesday, September 11, 2012
Tuesday, September 4, 2012
கிடைக்காமல் இருக்காது...
கிடைக்காமல் இருக்காது...
“ஆஹா, இதுவரை மூணு பேர் மண்டையை உடைச்சு
யோசிச்சுப் பார்த்திட்டாங்க. முடியலே ஒரு விளக்கத்தைக் கண்டுபிடிக்க, அவங்களால!” என்றான் கிஷோர்.
“மூணு பேராலேயும்னா ஆச்சரியம்தான்.”
“இப்ப நீங்க கேட்ட இதே
கேள்வியைத்தான் அவங்களும் கேட்டாங்க. நீங்களே யோசித்து ஏன்னு காரணத்தைக்
கண்டுபிடியுங்களேன்னேன். Were
not able to. அவங்களால முடியலே. அத்தனைக்கத்தனை
நல்லதுதான்னு நானும் சொல்லாமலே விட்டுட்டேன்.”
ராகவ்
தலையை சொறிந்துகொண்டார். இவன் தத்துபித்துன்னு ஏதோ பண்ணி வெச்சிட்டு அதுக்கு நம்மை
காரணம் கண்டுபிடிக்க சொல்றானே?
ஊகித்த
கிஷோர், பி.எஸ்.வீரப்பா போல சிரித்தான். “கேட்டது நீங்க தானே?”
உண்மைதான்.
“என்னமோ ஏகப்பட்ட பணம் கொடுத்து ஒரு
ஆடியோ சிஸ்டம் வாங்கி செட் பண்ணியிருக்கியாமே உன் அறையில? நான் இன்னும் பார்க்கவே இல்லையே?” என்று கேட்டது அவர்தான்.
“வாங்க, இப்பவே பார்த்துடலாம்,” கையோடு அழைத்துப் போய்விட்டான்.
கேட்க
திவ்யமாக இருந்தது. தேனாக ஒலித்தன பாடல்கள். அறையின் நடுவே இருந்த ஒற்றை சோபாவில்
அமர்ந்து கேட்டபோது நெருடல் ஒன்று எழுந்தது. வலது பக்கம் வால்யூம் அதிகமாக
வெளிப்பட்டது ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. ஓ, இடது புறமிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் வலதை விடவும் சற்றே தள்ளியிருந்த மாதிரி...
மாதிரி என்ன, தள்ளித்தான் இருந்தது.
“ஏண்டா இப்படி? சரியா அளந்து பார்த்து ஃபிக்ஸ்
பண்ணலியா? அல்லது சோபா தான் இடம்
மாறிவிட்டதா?”
“அதெல்லாமில்லை. டெலிப்ரேட்டா
பண்ணினதுதான் அது. அப்படி செய்ய எனக்கே எனக்குன்னு உள்ள அந்தக் காரணத்தை ஊகிக்க
முடியுமா உங்களால?”
ஊகித்ததில்
மண்டை காய்ந்ததுதான் மிச்சம். ஒவ்வொன்றாக சொல்ல எல்லாமே தவறென்றான். உள்ளே
இருக்கும் ஸ்பீக்கரின் கான்ஃபிக்ரேஷனில் உள்ள வித்தியாச சாத்தியதை வரை யோசித்துப்
பார்த்துவிட்டார்.
“நீயே சொல்லிடேன்.”
தயங்கினான்.
அப்புறம் மெல்ல சொன்னான். “அது வந்து.. ஒரு காது எனக்கு சரியா கேக்கறதில்லே. அதனால இந்த ஸ்பீக்கர்களை
சரியா பிளேஸ் செஞ்சா எனக்கு ஸ்டீரியோ எஃபக்ட் கரெக்டா கிடைக்கலே. என்னடா
பண்றதுன்னு யோசிச்சேன். இப்படி வலது ஸ்பீக்கரை டிரயல் அன் எரர் பண்ணிப் பார்த்து
என் சோபாவை வலது பக்கம் ஒன்றரையடி தள்ளி வைத்துக் கொண்டேன். எப்படி என் ஐடியா?”
ராகவ்
பதிலே சொல்லவில்லை. “என்ன மாமா யோசனையில
ஆழ்ந்துட்டீங்க?”
“ஒண்ணுமில்ல... ஒண்ணு தோணிச்சு
எனக்கு”
விழித்தன
அவன் கண்கள்.
அவர்
சொன்னார். “அதாவது வெளியிலிருந்து ஒரு நல்ல
கருத்தை நாம பெறும்போது அது சரியானதுன்னு அறிவுக்குப் பட்டாலும் கூட பல சமயம் அதை
முழுமையா ஏத்துக்க நம்மால முடியாது போகுது இல்லையா? அதுக்குக் காரணம் நம்ம மனசிலிருக்கும் விருப்பமும் - அதை வலது
காதுன்னு வெச்சுக்க, நம்ம பொறுப்புணர்வும் - அதை
இடது காதுன்னு வெச்சுக்க, ரெண்டும் பாலன்ஸ் சரியில்லாம இருக்கலாம் இல்லையா? அதை உணர்ந்து கொண்டு வலது காதான
பொறுப்புணர்வை கொஞ்சம் அதுக்குக் கிட்டத்தில வெச்சுக்கிட்டா, அதாவது அதிகப் படுத்திக் கொண்டால்
அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட நம்மால முடியும் இல்லையா? அதைத்தான் யோசிச்சிட்டிருந்தேன்.”
“என் காதை, ஸாரி, கண்ணைத் திறந்திட்டீங்க மாமா!”
('அமுதம்' ஆகஸ்ட் 2012 இதழ்)
<<<>>>
<<<>>>
Monday, August 13, 2012
உன் இடம்... அவன் இடம்...
அன்புடன் ஒரு நிமிடம் - 14
உன் இடம்... அவன் இடம்...
“உலகத்தில் ரொம்ப மலிவாய்க் கிடைக்கிற
விஷயம் எது தெரியுமா?”
கிஷோரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ராகவ்.
“ஆலோசனை தான் மாமா!” என்றான் அவன். “அதான் எங்கே போனாலும்
மலிவாய், ஏன், இலவசமாய்க் கூட... கூடை கூடையாய்!”
அப்போது உள்ளே நுழைந்தான் விச்சு. அவரின் தம்பி மகன்.
“வாடா விச்சு,
உன்னைத்தான் எதிர்பார்த்தேன்,”
வரவேற்றார் ராகவ். “ஒரு முக்கியமான விஷயம் கேள்விப்பட்டேனே? அது...”
“வாஸ்தவம்தான்!” தலையை ஆட்டினான், “நான் வேலையை விட்டிடலாம்னு இருக்கேன். சொந்தமா ஒரு
பிஸினஸ் செய்ய உத்தேசம்.”
கேட்ட கிஷோர் முகத்தில் ஆச்சரியம் வழிந்தது. “என்ன விச்சு
இத்தனை வருஷம் வேலை பார்த்து நல்ல செட்டிலாகின பிறகு இப்படி திடீர்னு?”
“கொஞ்ச நாளாவே யோசனைதான். வேலை சலிச்சுப் போச்சு. கையில
கொஞ்சம் சேவிங்ஸ் இருக்கு. அதை வெச்சு எங்க வீட்டு முன்னாடியே ஒரு புக் ஷாப் தொடங்கி
நடத்தலாமேன்னு நினைக்கிறேன்.”
கொஞ்சமும் தயங்காமல் கிஷோர் அவன் கையைப் பிடித்து
குலுக்கினான். “கோ அஹெட் விச்சு! நல்ல சென்டர் உங்க ஏரியா.
பிய்ச்சுக்கும் வியாபாரம். அப்பப்ப உன் மனைவியும் வந்து கவனிச்சுக்கலாம் கடையை...”
என்று ஆரம்பித்து அவன் திட்டத்தை ஆதரித்து ஒரு சின்ன லெக்சர் கொடுத்த பின்னரே
ஓய்ந்தான்.
“தாங்க்ஸ், கிஷோர்...
பெரியப்பா, நீங்க என்ன
சொல்றீங்க?”
“நான் சொல்றது இருக்கட்டும், இப்ப உன் திட்டத்துக்கு நம்ம கிஷோர் அவன் மனசில் உதித்த ஐடியாக்களை சொன்னான்
இல்லையா, அதைப்பத்தி நீ
என்ன நினைக்கிறே? Will they be of use to you?”
“Of course, they will be.” என்று புன்னகைத்தான். ‘அவன்
மனசில் இருக்கிறதை அப்படியே சொல்லிட்டான், இது மாதிரி மனமார்ந்த ஆலோசனைதான் எனக்கு தேவை.”
கிஷோர் பக்கம் திரும்பினார். “நான் வெல் டன் சொல்லலாமா கிஷோர்? நீ அதை யோசித்து உன் மனசில் கிடைத்த பதிலை
சொல்லிட்டேதானே?”
“பின்னே?”
தலையை ஆட்டினான் அவனும்.
“இப்ப நான் சொல்றதை அப்படியே சிந்திச்சு உனக்குத் தோணற
பதிலை சொல்லணும். இதே மாதிரி உன் வேலையில் சலிப்பு உண்டாகி ஒரு பிஸினஸ் பண்ணலாம்னு
மனசில் விருப்பம் எழுந்தால் நீ எப்படி யோசித்து என்ன முடிவு எடுப்பே?”
“அதாவது அவன் இடத்தில் நான் இருந்தால்?” சரி என்று சிரித்தபடியே யோசிக்க ஆரம்பித்தான்.
இரண்டாவது நிமிடமே அவன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.
குழப்ப ரேகைகள்.
“நிச்சயமா நீ முதலில் சொன்னதை இப்ப சொல்ல மாட்டேன்னு
தெரியுது.”
மீண்டும் புன்னகை உதட்டில் தவழ. “யெஸ். என்னதான் சலிப்பா
இருந்தாலும் சுளையா மாதம் முப்பதாயிரம் போல வர்றதைப் போய், ஒரு குடும்பம் நடத்தற நாம விடலாமான்னு ஒரு கேள்வி கிளம்புது....
பர்சேஸ்க்காக சென்னை, மும்பைன்னு
அலையறப்போ நம்பிக்கையா ஸ்டோரை விட்டிட்டுப் போக இந்தக் காலத்தில் முடியுமாங்கிறது
அடுத்த கேள்வி. அப்புறம்... நம்ம ஊரில கடன் கொடுத்தாத்தான் வியாபாரம் நடக்கும், கொடுத்துட்டு அப்புறம் அவங்க பின்னாடி அலைய
முடியுமான்னு வேறொரு கேள்வி முளைக்குது… ஆஹா, கொஞ்சம் அந்த இடத்தில் மானசீகமா அமர்ந்து கற்பனை
செய்ய செய்ய சுவாரஸ்யமான புதிர் மாதிரி பதில் கிடைச்சுட்டே இருக்குது.”
“இது! இதுதான் நான் சொல்ல வந்தது. அந்த இடத்தில் நம்மை
வைத்து பார்த்து சில நிமிடம் யோசித்துவிட்டு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்தால்...”
“…they will certainly be of use.”
என்றான் விச்சு.
“for both,”
என்று முடித்தான் கிஷோர், “அந்த மாதிரி யோசித்து பழக்கும்போது அத்தனைக்கத்தனை நாம் எடுக்கும்
முடிவுகளும் நல்லா அமையுமில்லையா?”
('அமுதம்' ஜூலை 2012 இதழ்)
<<<>>>
Subscribe to:
Posts (Atom)


