Monday, October 20, 2025

அந்த ‘டிடன்று’...


அந்த ‘டிடன்று’ எப்படி?
காதல் தோல்வியை காதலியின் முன் வெளிப்படுத்தும் ஆயிரம் பாடல்களில் காவியமாக நிற்கும் ஒரு பாடல் அது…
’இள வேனில் இது வைகாசி மாசம்
விழியோரம் மழை ஏன் வந்தது?’
’காதல் ரோஜாவே..’ (2000) படத்தில் வரும் அந்த காதல் வலி சொல்லும் பாடல்... பார்ட்டி சீனில் காதலன் காதலியை மனதில் வைத்து பாடுவது. ஐந்தரை நிமிடமும் மனசை அசையாமல் கவ்விக் கொண்டு விடுகிறது. இப்போதும் ஒன்றரை கோடிக்கு மேல் வியூஸ்..
முதல் இடையிசையில் ஃப்ளூட்டின் ஆர்ப்பரிப்பு. ‘ஹுஹுஹூ ஹூ ஹூஹு’… என்று அது மூன்று முறை நம்மை சோகச் சாட்டையால் அடிக்கும்போது கலங்கிப் போகிறோம். அதன் முத்தாய்ப்பாக ஒலிக்கும் அந்த ’டிடன்று டிடன்று டிடன்று!’ ஆஹா அற்புதம்! மொத்தப் பாட்டின் ஆதார பீட் ஆக! இளையராஜாவின் முத்திரை! அது என்ன இசைக்கருவி? எனக்குத் தெரியவில்லை. (ஆரேனும் சொன்னால் நன்றி_ சரியாக 1.59 - 2.01 நிமிடத்திலும் 3.43 - 3.45 நிமிடத்திலும் வருவது.) லிங்க் கமெண்டில்.
ரெண்டாவது இடையிசையில் அந்த அதிசயம். ஃப்ளூட் எழுப்பிய அந்த சோக ஒலியை எஸ்.பி.பி ‘அஹஹா ஹா ஹாஹா’ என்று தன் அடிக்குரலில் ஹம் செய்ய பத்து மடங்கு வெப்பம் பரவுகிறது சோகச் செங்கடலில். பாடலின் மொத்தச் சங்கட உணர்வும் அதில் தொற்றிக்கொண்டு விடுகிறது. அந்தக் கனத்தில் முழுசாய் கவிழ்ந்துவிட, சரணம் முடிகிற அப்போதுதான் அந்த மேஜிக். அவனின் அந்தப் பல்லவியை அப்படியே பாடியபடியே நடனமாடுகிறாள் அவள். அடி மன வேதனை கொப்பளிக்க அவன் பாடும் அந்தப் பல்லவி ராகத்தை அப்படியே எடுத்து மற்றவர்கள் முன் தன் உணர்வை அடக்கிக் கொண்டு அவள் நடனமாடியபடியே பாடும்போதுதான் தெரிகிறது ஆழமான சோகத்துக்கும் பால் ரூம் டான்ஸுக்கும் 'ஆட்ட'காசமாய்ப் பொருந்துகிற மாதிரி அமைத்திருக்கிறார் இளையராஜா என்று.
‘பனி மூட்டம் வந்ததால், மலர்த் தோட்டம் நீங்கியே, திசை மாறிப் போகுமா தென்றலே?’ என்ற அவன் வரிக்கு ‘பனி மூட்டம் வந்ததால், மலர்த் தோட்டம் நீங்கியே, திசை மாறிப் போகுமோ தென்றலோ?’ என்று அவள் ஒரே ஒரு எழுத்தை மாற்றிப் பதில் தருகிறாள். முத்தான பாடலுக்கு பல்லவி மட்டும் பாடி முத்தாய்ப்பு வைக்கிற குரலின் குயில் சித்ரா.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!