அவர்களில் ஒருவர் பீம்சிங். இன்று பிறந்த நாள்..
படிக்காத மேதை. ரங்கராவ் சிவாஜியை வீட்டை விட்டு போடா என்பார். என்னையா போகச் சொல்றீங்கன்னு அதிர்ந்து, எதிர்த்து, கத்தி, அடங்கி கடைசியில் கோபத்துடன் வெளியேறும் அந்த காட்சியில் சிவாஜி, ரங்காராவ் தவிர இன்னொருவரும் இருப்பார். ஆனால் அவரது பிரசன்ஸை கொஞ்சமும் நாம் உணர மாட்டோம். அவர்தான் பீம்சிங். Yes, his speciality is not showing his presence while showing his brilliance!
அம்மையப்பன் தான் முதல் படம். அடுத்ததில் கவனம் ஈர்த்தார். ‘ராஜா ராணி’. breezy comedy... நாலே முக்கால் நிமிட ஒரே ஷாட்டில் சேரன் செங்குட்டுவனாக தொடர் வசனம் பேசுவாரே சிவாஜி? அந்தப் படம். அப்புறம் ‘பாகப்பிரிவினை’ வந்தது. பாகஸ்தர் ஆகிவிட்டார் நம் வாழ்வில்.
திரைக்கதை எடிட்டிங் டைரக் ஷன் மூன்றிலும் எக்ஸ்பர்ட். எடிட்டிங் அசிஸ்டன்ட் ஆக ஆரம்பித்து டைரக் ஷன் அசிஸ்டெண்டாக ( கிருஷ்ணன் - பஞ்சுவிடம்) தொடர்ந்து, பின் டைரக்டர் ஆனவராயிற்றே?.
வாழ்க்கையின் முடிச்சுகளில் சிக்குண்டு தங்கள் தவிப்பை, உள்ளக் கொந்தளிப்பை கேரக்டர்கள் வெளிப்படுத்தும் போதெல்லாம் அதை நம் உள்ளங்களுக்கு நானோ லிட்டர் குறையாமல் அப்படியே டிரான்ஸ்ஃபர் செய்யும் வித்தையை அறிந்த வித்தகர். Opposite characters + Conflict = Drama என்பதையும் Sensitive Characters + Situation = Melodrama என்பதையும் புரிந்து வைத்திருப்பவர்.
சிவாஜி, ஜெமினி, சாவித்திரி என்று இந்தப் பக்கம் 'பாவமன்னிப்பு' அரங்கு நிரம்ப ஓடிக்கொண்டிருக்க, இரண்டே மாதத்தில் அதே நடிகர்களுடன் பாசமலர் வெளியாகி அந்தப் பக்கம் அரங்கு நிறைந்து... இந்த தியேட்டரை விட்டு சிரித்தபடியே வெளியே வருபவர்களும் சரி, அந்தத் தியேட்டரை விட்டு கண்ணீர் மல்க வெளி வருபவர்களும் சரி, கதையில் கரைந்து, காட்சிகளில் உருகி, பிரமிப்புடன் இருப்பார்கள். (வாழ்க்கையை அப்புறம் அவர்கள் பார்க்கும் விதமே மாறுபட ஆரம்பித்து விட்டிருக்கும்.) மிகச் சின்ன இடைவெளியில் இரண்டு குடும்பப் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா காண வைத்த டைரக்டர் அவர் ஒருவர்தான். நாலாம் மாதமே ‘பாலும் பழமும்’ வெளியாகி அடுத்த ஜூபிலியை நோக்கி... சிவாஜி படங்களுக்கு பீம்சிங் ஒரு பீம்!
அந்த வருடத்தின் மிக நீளப்படமான ‘பதிபக்தி’யில் தொடங்கி இரண்டே கால் மணி ஓடும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரை கேரக்டர்களின் conflict தான் இவரது பலம். அதில் சில மிக நுணுக்கமாக இருக்கும். ‘பார் மகளே பார்’ படத்தில் தன் வீட்டு ஃபங்ஷனுக்கு வந்திருந்த வி.கே.ராமசாமியை சிவாஜி தொடர்ந்து கேஷுவலாக அவமானப்படுத்த, பொறுக்கமுடியாமல் அவர் குமுறி எழுந்து, உன் இரண்டு மகள்களில் ஒருத்தியின் தாய் வேறு எவளோ ஒருத்தி, தெரியுமா உனக்கு? என்று தன்னை மறந்து பொங்கிவிடும் அந்தக் காட்சி சாட்சி.
பச்சக் என்று மனதில் ஒட்டிக் கொள்வதால் என்னமோ ‘பா’விலேயே ஆரம்பிப்பார் படத்தின் பெயர்களை. உண்மைதான். பாகப்பிரிவினை, பாலும் பழமும், பார்த்தால் பசிதீரும், பாசமலர், பாவ மன்னிப்பு, பச்சை விளக்கு.. பெயரைச் சொன்னாலே போதும், படம் நம் மனதில் ஓட ஆரம்பித்து விடும்.
கேமராவுக்கு ஒரு கண்ணனையும் எடிட்டிங்குக்கு ஒரு லெனினையும் நமக்குத் தந்திருக்கிறார். ஜெயகாந்தனின் இரண்டு நாவல்களை திரைக்கு தந்தவர் படமாக்கிய மற்றொரு நாவல் மு.வ. அவர்களின் பெற்ற மனம்.
இவர் இயக்கிய பாலும் பழமும் படத்தை ஹிந்தியில் ஸ்ரீதர் இயக்கினார். இவர் இந்தியில் இயக்கிய மற்றவர்கள் இயக்கிய படங்கள் Aadmi (ஆலய மணி - கே சங்கர்), Nai Din Nai Raat (நவராத்திரி- ஏ.பி.நாகராஜன்), Gopi (முரடன் முத்து-பி.ஆர்.பந்துலு), Phooja Ke Phool (குமுதம்-ஏ.சுப்பாராவ்)
வேறு புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது, ஜனங்களின் மனதை கவர்ந்தவர், ஜனங்களின் மனதில் இருப்பவர் பற்றி? எல்லாம் அறிந்ததே.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!