வழி தவறி வந்த சிறுமியை குழந்தை பாக்கியம் இல்லாத செல்வத் தம்பதி எடுத்து வளர்க்கிறார்கள். பிள்ளையார் பக்தையாக வளரும் அந்தப் பெண், வேண்டாத திருமண வாழ்விலிருந்து தப்பிக்க வேண்டுகிறாள் பிள்ளையாரை. முதியவளாக மாறிவிடுகிறாள். அவ்வையார். ஜெமினியின் பிரமாண்ட தயாரிப்பு. நடித்தவர்? கட்டபொம்மன் என்றதும் சிவாஜி நினைவு வருவது போல ஔவையார் என்றதும் இவர்.
கே.பி.சுந்தராம்பாள்… இன்று பிறந்த நாள்!
தாராளமாகச் சொல்லலாம், தமிழ்த் திரையுலகின் முதல் கிரேட் ஸ்டார் என்று. ஆம், 1935-இலேயே ஒரு லட்சம் வாங்கிய நட்சத்திரம்.(பக்த நந்தனார்)
‘வாழ்க்கை என்னும் ஓடத்தி’ல் நம்மை அழைத்துச் சென்றவர் (பூம்புகார்). ‘ஞானப்பழத்தை’ மொழிந்து தந்தவர் ( திருவிளையாடல்). ‘காலத்தில் அழியாத’ பாடல்கள் தந்தவர் (மகாகவி காளிதாஸ்). ‘கேள்விகள் ஆயிரம்’ பாப்பாவை கேட்கச் செய்தவர் (உயிர் மேல் ஆசை). ‘வாசி வாசி என்று’ தமிழ் வாசித்தவர் (திருவிளையாடல்). ‘எங்கேயும் சக்தி உண்டு’ என்று காட்டியவர் (சக்தி லீலை) ‘கூப்பிட்ட குரலுக்கு’ யார் வராதது? ( துணைவன்)
அந்த கம்பீரக் குரலை கேட்டதும் நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும்... அந்த கணீர்க் குரல் காதில் விழுந்ததும் பரவசம் பொங்கும்... அந்தப் பாசக் குரலில் மனம் அப்படியே இளகும்.
ஆரம்பத்தில் டிராமா ட்ரூப்பில் இருந்தபோது, தரப்பட்ட ஆண் வேடங்களையும் ஏற்று நடித்தார். ஒரு மைல் தூரம் கேட்கும் அவர் பாடினால் என்பார் நடிகர் சாரங்கபாணி.
செம பாராட்டில் இருந்தபோது சம புகழில் இருந்தவர் S.G.கிட்டப்பா. ரெண்டு பேரையுமே வேண்டியவர்கள் எச்சரித்தார்கள் அவருடன் பாடினால் உங்கள் பாட்டு எடுபடாது என்று. காதில் போட்டுக் கொண்டால் தானே? கொழும்பில் சந்தித்தபோது நேராக அவரிடமே கேட்டு விட்டார் கிட்டப்பா, ரிகர்சல் ஆரம்பிக்கலாமா என்று. சேர்ந்து பாடிய மேடைகள் கைதட்டலில் மூழ்கின. ‘வள்ளி திருமணம்’ படத்தில் சேர்ந்து நடிக்க, அது அவர்கள் திருமணத்தில் முடிந்தது. எதிர்பாராத கிட்டப்பாவின் 27 வயது மரணம்! மீண்டும் தனிமையில் அவர்.
எப்போதும் கதர் அணியும் இவர், 750 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். ஆறு மணி நேர கச்சேரி எல்லாம் அவருக்கு சாதாரணம்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான நேஷனல் அவார்டு, துணைவன் படத்துக்காக 1969 இல். M.L.C. ஆக பதவி பெற்றது 1951 இல். அவ்வகையில் கலைஞர்களில் முதலாமவர்.
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!