Thursday, October 2, 2025

திரை உயர்ந்திருந்தது...


ஏன் உங்களுக்கு அந்த நாடகம் பிடிக்கவில்லை?’ என்று கேட்டபோது அவர் சொன்னார்.
‘அதுவா? அதை நான் பார்த்த சந்தர்ப்பம் அப்படி! திரை உயர்ந்திருந்தது!’
Quick Retort-க்குப் பேர் போனவர்கள் பலர் இருந்தாலும் ‘நச் பதில் நாயகர்’ என்ற பட்டம் சிலருக்கே உண்டு. அதில் பிரபலமானவர் இவர்.
Groucho Marx.. இன்று பிறந்த நாள். (1890 - 1977)
‘படிப்புக்கு டி.வி. மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை யாராவது அதை போடும் போதும் நான் பக்கத்து அறைக்கு போய் விடுகிறேன், புத்தகம் படிக்க.’ - இவர் சொன்னது.
அமெரிக்காவின் தலை சிறந்த நகைச்சுவையாளர் என்று இவரைக் குறிப்பிட்டவர் பிரபல காமெடி நடிகர் Woody Allen.
‘You Bet Your Life’ என்ற இவர் நடத்திய ஷோ டிவி.யிலும் ரேடியோவிலும் மகா பாப்புலர்.
அள்ளித் தெளித்த காமிக் பஞ்ச் அனேகம். சிரிக்க மட்டும் இதோ சில…
‘ஒரு கருப்பு பூனை உங்கள் பாதையில் குறுக்கே செல்வது எதை குறிக்கிறது என்றால் அந்தப் பூனை எங்கோ போய்க்கொண்டிருக்கிறது என்பதை.’
‘அவளுடைய அழகிய முகம் அவள் தன் தந்தையிடம் இருந்து பெற்றது. ...அவர் ஒரு பிளாஸ்டிக் சர்ஜன்.’
‘நான் சாகாமல் என்றும் வாழ விரும்புகிறேன். ...அந்த முயற்சியில் செத்தாலும் சரி.’
‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். ...அவளுக்குப் பின்னால் அவன் மனைவி இருக்கிறாள்.’
‘என்னைப் போன்றவர்களை மெம்பராக ஏற்றுக் கொள்ளும் எந்த கிளப்பிலும் இருக்க நான் விரும்பவில்லை.’
‘ஒருவன் நேர்மையானவனா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. அவனையே கேளுங்கள். அவன் ஆமாம் என்றால் அவன் ஒரு மோசமான பேர்வழி.’
‘நான் சொல்கிற இந்த கதையை ஏற்கனவே கேட்டிருந்தால் என்னை நிறுத்தாதீர்கள், ஏன்னா நான் இன்னொரு முறை அதை கேட்க விரும்புகிறேன்.’
‘ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து நான் ரொம்பப் பாடுபட்டு மிக ஏழ்மை என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்.’
‘இதெல்லாம் என் கொள்கைகள். உங்களுக்கு அவற்றைப் பிடிக்கவில்லையானால் சொல்லுங்கள், வேறு சில இருக்கிறது என்னிடம்.’
‘விவாகரத்து நடப்பதற்கு முக்கிய காரணம் விவாகம்.’
‘ஒருவன் தன் விதியை தானே நிர்ணயிப்பதில்லை. அவன் வாழ்வில் வரும் பெண்கள் அவனுக்காக அதை செய்கிறார்கள்.’
‘அவன் பார்க்கிறதுக்கு முட்டாள் மாதிரி இருக்கலாம், முட்டாள் மாதிரி பேசலாம், அதை வெச்சு ஏமாந்திராதீங்க. அவன் நிஜமாவே முட்டாள்தான்.’