Wednesday, June 30, 2021

எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச...


அவரு எவ்வளவு பெரிய ப்ரொடியூசர்.. ஆனா அவரை நம்ம தேவர் அண்ணன், நம்மள நெனச்சு படம் எடுத்திருக்கார், நாலு நல்ல விஷயம் காட்டுவார்னு நம்பி படக் கொட்டகைகள் நோக்கிப் படையெடுப்பார்கள் ஜனங்கள். ஏமாந்ததே இல்லை. இருவருமே.

சாண்டோ சின்னப்ப தேவர்… June 28. பிறந்த நாள்!
தம்பி உடையான் படமெடுக்க அஞ்சான்னு சொல்ற மாதிரி டைரக் ஷனைப் பார்த்துக்கொள்ள ஒரு தம்பி. திருமுகம். ஒரு பிரேமில் கூட அவர் கை தெரியாத படி காட்சிகள் ரொம்ப இயல்பாக மலரும், கதையை மட்டும் பகரும். வர்மாவின் காமிரா வழுக்கிக் கொண்டு நகரும்.
முருகன் மேல் அவர் வைத்த நம்பிக்கைக்கு கொஞ்சமும் குறையாதது கதை மேல் அவர் வைத்திருந்ததும். பாருங்களேன். ‘தெய்வச் செயல்’ என்று ஒரு படம் எடுத்தார். நாலு யானைகளை வளர்க்கும் செல்வந்தர் சுந்தர ராஜன் நொடித்துப் போனபோது தானும் வாழ்ந்து அவற்றையும் வாழ வைக்கும் அந்தக் கதை நன்றாகப் போகவில்லை.
எப்படித் தோற்க முடியும் இந்தக் கதை என்று யோசித்தார். எழுதினார் அதற்கு இன்னொரு திரைக்கதை. அப்போதுதான் டாப்புக்கு வந்து கொண்டிருந்த பிரபல கதாசிரியர் Salim - Javed -இடம் சீன்கள்எழுதி வாங்கி ஹிந்தியில் வெளியிட்டார். ‘ஹாத்தி மேரே சாத்தி’. ஆத்தி, அது கலக்கிற்று வசூலை. குலுக்கிற்று பாலிவுட்டை. அதை அப்படியே தமிழிலும். ‘நல்ல நேரம்.’ இங்கேயும் ஹிட்.
டீம் வைத்துக்கொண்டு கதை டிஸ்கஷன் செய்யும் முறையை அனேகமாக இவர்தான் கொண்டு வந்தார். Tell the gist. Get the best. Leave the rest. That's it.
பக்தி சிரத்தையுடன் தியேட்டரில் நுழைந்தது பரமன் லீலைகள் பார்த்து பரவசத்துடன் வெளிவர முடிந்தது இவர் காலத்தில்தான்.
ஆஹா, வரிசையாக அவர் தந்த எம் ஜி ஆர் படங்கள்! ஜஸ்ட் பதினோரு நாளில் முடித்துவிட்டார் ‘முகராசி' ஷூட்டிங்கை.
எந்தப் பிராணியைத்தான் கூர்ந்து கவனித்து இருப்போம்? இதயம் என்று அதற்கும் ஒன்று இருக்கும் என்று எண்ணி இருப்போம்? ஆனால் ‘ஆட்டுக்கார அலமேலு’வையும் ‘கோமாதா என் குலமாதா’வையும் பார்த்ததும் நம் அபிப்பிராணியமே எத்தனை மாறிப் போச்சு!
நம்ம எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச நம்ம சின்னப்ப தேவரைப் பத்தி நாஞ்சொல்ல தனியா என்ன இருக்கு? மறக்க முடியாத மனிதர்!

Sunday, June 27, 2021

ஹிட்டுக்களை இசைத் தட்டுக்களில்...


அப்பாவைத்தான் புக் பண்ண வந்தார் மெஹமூத் தன் படத்துக்கு இசையமைக்க. ஆனால் அவரிடம் தேதி இல்லை. ஹாலில் தபேலா வாசித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தார். சட்டென்று அவரை புக் செய்து விட்டார். படம் ‘Chote Nawab.' பாடல்கள் வெற்றி. இசைப் பேரலையொன்றை இயக்கி விட்டிருக்கிறோம் என்று அப்போது அவருக்குத் தெரியாது.

ஆர்ப்பரிக்கும் இசை! ஆர் அது? என்று எல்லாரும் பார்க்க ஆரம்பித்த அவர் ஆர். டி. பர்மன். இன்று பிறந்த நாள்!

50 களின் முதல் ஐந்து இசையமைப்பாளர்களில் ஒருவராயிருந்த தந்தையை நாடறியும். எஸ். டி. பர்மன்.
அந்தக் குழந்தை முகம்! அதன் பின்னே ஒரு இசைமேதை.. ‘Pancham’ இவர் செல்லப் பெயர். அஞ்சாவது நோட். பஞ்சமி.
மெஹ்மூதின் அடுத்த ‘Bhoot Bangla’ வில் கலக்கிவிட்டார். ‘Aavo Twist Karen…’’வும் ‘Pyar Karta Jaa..’ வும் இளைஞர்களை அப்படி ஈர்த்தன என்றால் ‘O Mere Pyar Raja...’ உருக வைத்தது.
அப்புறம் ‘மூன்றாம் வீடு’ (Teesri Manzil) வந்தது. முதலிடத்துக்கு இவர் போனார். ‘Aajaa Aajaa…’ என்று ஷம்மி கபூர் பாட, ரசிகர்கள் ஆட, இசை உலகம் எழுந்து உட்கார்ந்தது. ராஜேஷ்கன்னா வந்து சேர்ந்து கொள்ள கிஷோர் குமாருடன் ஹிட்டுக்களை இசைத் தட்டுக்களில் அடுக்கினார். ‘தம் மோரா தம்… ‘ வந்ததும் 1971 -ன் இசைக் கோப்பையைத் தனதாக்கிக் கொண்டது.
Electronic Rock -ம் Jazz -ம் அவர் இசையில் விளையாட, சங்கர் ஜெய்கிஷன், நய்யாரெல்லாம் தந்து கொண்டிருந்த கலகலப்பான இசையை அடுத்த படிக்கு எடுத்துச் சென்றார்.
அல்ரெடி ‘Chalti Ka Naam Gadi’ யிலிருந்து அப்பாவின் சில படங்களுக்கு அசிஸ்டன்ட் ஆக வேலை பார்த்தவர். தேவ் ஆனந்தின் பிரபல பாடல் ‘Hey Apna Dil..’ பாட்டில் மவுத் ஆர்கன் வாசித்திருக்கிறார்.
சின்ன வயதில் நண்பர்களுடன் சினிமா பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தப் பாடலை கேட்டதும் துள்ளி எழுந்து ஹேய், அது என் டியூன் என்று ஆர்ப்பரித்தார். இவர் வாசித்துக்கொண்டிருந்த ட்யூனைக்கேட்ட அப்பா அதை தன் படத்தில் போட்டிருக்கிறார். அதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும்?
9 வயதில் இவர் போட்ட டியூனைத்தான் ‘Aye Meri Topi…’ என்று தேவ் ஆனந்த் பாடினாராம் ‘Funtoosh’ படத்தில். Pyaasa படத்தில் வந்த ‘Sar Jo Tera Chakraya…’ பாடலும் இவர் ஆரம்பப் பாடல்களில் ஒண்ணுன்னு சொல்வாங்க.
ஒவ்வொருத்தர் டேஸ்டுக்கும் அவரிடம் ஒரு பாட்டு இருக்கும். உங்களுக்கு ‘Tere Bina Zindagi Se Koi...’ பிடிக்கும் என்றால் எனக்கு 'Goyake Chunanche..’ உயிர். அவளுக்கு ‘O Mere Sona Re..’ ஃபேவரிட் என்றால் இவனுக்கு ‘Hum Dono Do Premi..’ பிரியம். ‘எப்படி போட்டேன் என்று தெரியாது, அதுவாக அமைந்தது..’ என்பார் எப்போதும் அடக்கமாக.
நீங்களே பாடுங்க என்று ரமேஷ் சிப்பி சொல்லி இவர் பாடிய ‘மெஹபூபா மெஹபூபா…’ அத்தனை பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கொரு குரல் வைத்திருந்தார் என்றால் அமிதாப்புக்கு இன்னொரு குரல் வைத்திருந்தார். ‘Pukar’ படத்தில்அமிதாப், ரந்திர் சேர்ந்து பாடும் அந்த ‘Buchke Rehna Re Baba..’ பாடலில் எது கிஷோர் எது ஆர்.டி. என்று கண்டு பிடிப்பது மகா கடினம்.
70 களில் வருஷா வருஷம் நாமினேஷன் பெற்றாலும் filmfare அவார்டை வாங்கியது 1983 இல் கமல் நடித்த ‘Sanam Teri Kasam’ படத்தில் தான்.
அப்படி ஒரு டைட்டில் இசையை யாருமே போட்டதில்லை. திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆம், ‘ஷோலே’ படத்தில் வரும் இசையைத்தான் ஷொல்கிறேன். ரயில்வே ஸ்டேஷனில் ஆரம்பித்து மெல்ல அந்தக் கிராமம் முழுவதையும் சுற்றிக் காட்டும் அந்த இசை படத்தின் tone -ஐ அற்புதமாக கொடுத்துவிடும்.
எப்போதும் இசையே சிந்தனை. ஃப்ளைட்டில் சென்றுகொண்டிருந்தபோது முணுமுணுத்த டயூனை கவனித்த ராஜேஷ் கன்னா பிற்பாடு ஞாபகமாக அதைக் கேட்டு வாங்கினாராம் ‘Kati Patang’ படத்துக்காக. பாடல், ‘Yeh Jo Mohabbat Hai..’
வித்தியாசமாக எதையாவது வழங்கிக் கொண்டே இருப்பதுதான் அவரது இசை. ‘தனியே நாம் எதுவும் செய்ய விட்டால் தனியாக நம்மை கவனிக்க மாட்டார்கள்,’ என்பாராம். தேவ் ஆனந்தின் ‘Ishq Ishq Ishq’ படத்தில் ‘Wallah Kya Najara Hai..’ பாடல் பல்லவியை அதே படத்தின் வேறிரு பாடலிலும் அழகாகக் கொண்டு முடிச்சிட்டிருப்பார்.
‘ஆர். டி. பர்மன் இன்றைக்கு இருந்தால் நான் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து அவர் இசையமைப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன் நாளெல்லாம்,’ என்கிறார் பிரபல பாடகர் அர்மான் மாலிக்.

இவருடைய முதலிரு படத்துக்கும் லக்ஷ்மிகாந்த் பியாரிலால் தான் மியூசிக் அரேஞ்சர்ஸ் ஆக இருந்தார்கள் என்றால் அவர்களின் ‘தோஸ்தி’க்கு மௌத் ஆர்கன் வாசித்தது இவர். எழுபதுகளின் இந்த டாப் இசையமைப்பாளர்கள் இடையே அப்படி ஒரு நட்பு!
Amar Prem படத்தில் அப்படி ஒரு கிளாசிக்கல் மியூசிக் கொடுத்திருப்பார். அந்த ‘Raina Beet Jaye..’ பாடலை ஆரால் மறக்க முடியும்?
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல இவரது கார் கதவும் கானம் இசைக்கும். சோடா பாட்டில்களை உடைத்து, ‘Churaliya..’ (Yadon Ki Bharat) பாடலுக்கும், சீப்பை மேஜையில் உரசி ‘Tere Samne Wale... ‘ (‘Padosan’) பாடலுக்கும் என்று கையில் கிடைக்கிற வஸ்துக்களிலிருந்து விதவிதமான தாளங்கள்...மூச்சு வாங்குவதைக் கூட பாடலின் வீச்சு ஆகியிருப்பார், ‘Piya Tu...’ (‘Caravan’) பாடலில். ‘Hoga Tumse Pyare Kaun..’ பாடலில் ஊட்டி ரயில் விசிலை உசிதமாகக் கொடுத்திருக்கும் விதமே தனி!
கிஷோர்குமார்தான் இவரது ஆஸ்தான பாடகர் என்றாலும் ரபியின் மறு வருகையை ஜொலிக்க வைத்த பாடல்களில் பல இவருடையது. ‘Zamane Ko Dikhana Hai’ யில் வரும் ‘Pucho Na Yaar Kiya Hua ..’ பாடல் ஒன்று போதுமே?
‘அந்தப் பெண்ணை பார்த்தேன்.. அவள் ஒரு மலரும் ரோஜாவை போலே... கவிஞனின் கனவைப்போலே... காட்டின் மானைப்போலே... பௌர்ணமி இரவைப்போலே... வீணையின் ராகம்போல... காலையின் அழகைப்போலே… அலைகளின் விளையாட்டைப்போலே... ஆடும் மயிலைப்போலே... பட்டு நூலைப் போலே…’ என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் அந்த ‘1942, A Love Story’ யின் ‘Ek Ladkhi Ko Dekha..’ பல்லவிகளை மட்டும் அடுக்கி என்னவொரு இசைச் சிலிர்ப்பு! Filmfare அவார்டுக்காக ஒரு பாடலை விட்டு விட்டுத்தான் மறைந்தார்.

Saturday, June 26, 2021

பொழிவில் ஓர் பொலிவு



‘ராஜா, அவசரப் படாதீங்க, நான் சொல்றதைக் கேளுங்க’ன்னு அலறியபடியே நாயகி ஓடோடிவ்ர, கேட்காமல் மலையுச்சியை நோக்கி ஏறும் பாக்யராஜ்… அட்டகாசமாக முடியும் அந்த 'டார்லிங் டார்லிங் டார்லிங்' க்ளைமாக்ஸ் காட்சியை நாம் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் கச்சிதமாக படமாக்கியிருப்பார் அந்த ஒளிப்பதிவாளர்.

அஷோக் குமார்… ஜூன் 25. பிறந்த நாள்!
'நெஞ்சத்தைக்' காமிராவால் 'கிள்ளியவர்'. “பருவமே... புதிய பாடல்…” பாடல் காதில் ஒலிக்கும் போதே அந்த பியூட்டிஃபுல் போட்டோகிராஃபி மனதில் ஒளிரும். மலர்களினூடே சூரியன் ‘மினுமினு’க்கும் ஆரம்ப ஷாட்டிலிருந்தே! மரங்கள் அடர்ந்த பனிச் சாலையில் காதலர்கள் ஜாகிங் பயில, வண்ணமும் ஒளியும், கிரணமும் நிழலும் திரையில் விளையாடும்.
பொலிவு என்று ஒரு சொல் உண்டு. எழில், அழகு என்பதற்கும் மேலே விரும்பப்படுவது. புலரும் பொழுதின் பொலிவை அந்த ஷாட்களில் இவர் பொழிவதை பொழுதுக்கும் ரசிக்கலாம்.
ஜானியின் ‘என் வானிலே..’ பாடலில் அந்த வான் - மேக இடைவெளிப் பிரகாசத்தில் பியானோ வாசித்துப் பாடும் ஸ்ரீதேவியும், ரசிக்கும் ரஜினியுமாக காட்சி என்ன அழகு!
பியூட்டி பார்லர் வேலை பார்க்க ரஜினி நடந்து போவதைத் தூரத்திலிருந்து வளைவாகக் காட்டுவதாகட்டும், பச்சை மரப் பின்னணியில் ரெட்டை ரஜினி ஒருவரையொருவர் புரட்டிப் புரட்டி எடுப்பதை கட் ஷாட்களில் மிரட்டியிருப்பதாகட்டும், தீபத் தட்டுகளின் மஞ்சள் வண்ணத்தை 'ஆசையைக் காத்துல..' பாடலில்
ஆடும் பெண்களின் முகங்களில் அழகுற எதிரொலிப்பதாகட்டும்… ‘ஜானி’ இவரது மாஸ்டர்பீஸ்.
எல்லாவற்றையும் விட ‘ஒரு இனிய மனது..’ பாடலில் ஸ்ரீதேவியின் profile -ஐ ஒளிக் கோடுகளால் மட்டும் வரைந்திருப்பார்! Scintillating!
இவரது ஒரு பாடல் காட்சியிலேயே ஏராளம் ஓவிய மாடல்கள் கிடைக்கும். காம்போசிஷன் கச்சிதமாக இருக்கும்.
‘மஞ்சள் வெயில்..’ (‘நண்டு') பாடலில் வாழையிலைகளினூடே குழந்தை சிரிக்க அர்ச்சனா பாடுவது இதமாக இருக்கும் என்றால் அமிழும் சூரியனின் செவ்வானப் பின்னணியில் கடலின் படகுகள் அழகாக அசைவது ‘அக்கரையில்லா எங்க வாழ்க்கையிலே..’ பாடலில் (‘கட்டுமரக்காரன்’) ரம்மியம்!
தம் கோணங்களால் நாம் நேராக உட்கார்ந்து படம் பார்க்க வைப்பவர். நீலம் இவரது ஃபேவரிட் போலும். அழகை நீளப்படுத்தியிருக்கும் அது.
உச்சமாக ‘கண்ணோடு காண்பதெல்லாம்..’ பாடலில் நாம் கண்ணோடு கண்டதெல்லாம் அவர் கலைத்திறனை சொல்லும். ஒன்று நிஜம் ஒன்று V. R. என்று ரெண்டு ஐஸ்வர்யாக்கள் ரெண்டு பிரசாந்த் பார்க்க அனாயாசமாக கிராஸ் பண்ணிச் சென்றபடியே ஆடும் பிரமிப்பு.
முதல் படம் மலையாள ‘ஜென்ம பூமி’யிலேயே ஸ்டேட் அவார்ட் வாங்கிய இந்த அலகபாத்காரர் பயின்றது அடையார் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில். அப்புறம் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு நேஷனல் அவார்ட்! டைரக்டர் மகேந்திரனின் ஆஸ்தான காமிராமேன் எனலாம்.
‘வெற்றி விழா’ ‘மெட்டி’ ‘காளி’ ‘முந்தானை முடிச்சு’ ‘உதிரிப்பூக்கள்’… முதல் 3D படத்துக்கும் (‘மை டியர் குட்டிச்சாத்தான்’) இவர்தான் ஒளிப்பதிவாளர்.

Thursday, June 24, 2021

‘ஒரு நாள் போதுமா?’


சிலர் இருக்கிறாங்க. அவங்களை நாம சந்திச்சே இருக்க மாட்டோம். ஆனா நம்ம வாழ்க்கையில அவங்க வெகுவா ஊடுருவியிருப்பாங்க. இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு எடுத்துக்குவாங்க. உற்சாகத்தையும் ஆறுதலையும் அள்ளி வழங்கி இருப்பாங்க. ஆ, நீங்களே சொல்லிட்டீங்களே.. அவரு தாங்க. 

கண்ணதாசன்... இன்று பிறந்த நாள்!

‘அவரு எழுதின பாடல்கள்ல உங்களுக்குப் பிடிச்ச ஒரு பாடல் சொல்ல முடியுமா?’ன்னு கேளுங்க. தலையை சொறிவாங்க. சொல்றதுக்கு ஒண்ணு இருக்காது. உடனே மனசில ஓடறதிலேருந்து ஒரே ஒரு பாட்டை செலக்ட் பண்றதுக்குள்ளே முழி பிதுங்கிரும். யோசிக்க ‘ஒரு நாள் போதுமா?’


எந்தப் படமா இருக்கட்டும், கதையின் அடிநாதத்தை சில அடிகளில் தன் பாடலில் கொண்டு வந்து விடுவார். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி. படத்தின் ஒன் லைன் பாடலில்! 

"தூக்கி வளர்த்தவள் தாயென்றால் அதை

ஆக்கிக் கொடுத்தவள் பேரென்ன?

வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதைத்

தாங்கிய தாயின் உறவென்ன?"  

‘அன்னை’ படக்கதையை இதைவிடச் சுருக்கமாக எப்படி சொல்ல முடியும்?


வானம்பாடி படத்தின் சுருக் இதோ.... காதல் தோல்வியில் இருக்கும் கதாநாயகனுடன் (எஸ் எஸ் ராஜேந்திரன்) கவியரங்கத்தில் போட்டியிடுகிறாள் தோழி (தேவிகா)

‘காதலித்தாள், மறைந்து விட்டாள், வாழ்வு என்னாகும்?”

‘அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்.’

‘ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு.’

‘அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது.’

‘வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு?’

‘தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது.’


ஒன் லைனில் என்ன, சில சமயம் இரண்டொரு வார்த்தையிலேயே சொல்லிவிடுவார். படத்தின் கதையை. இதோ உதா.

“எங்கிருந்தாலும் வாழ்க..”

(’நெஞ்சில் ஒரு ஆலயம்’) காதலித்தவள் எங்கிருந்தாலும் அவள் வாழவேண்டுமென்று எண்ணி அவள் கணவனைக் காப்பாற்றுகிறான் தன் உயிரைவிட்டு.


நவரசமும் அபிநயம் பிடிக்கும் அவர் பாடல்களில்.. ‘பேசுவது கிளியா..’ என்று கொஞ்சும்! ‘வீடுவரை உறவு…’ என்று அஞ்சும்! 

பறக்க ஆரம்பித்துவிட்டால் போதும். நாம்'பாட்டு’க்கு பறந்து கொண்டேயிருக்கலாம் மனதில். கடைசி வார்த்தை வரைக்கும்!. "காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா..."

அள்ள அள்ள வந்து கொண்டே… ‘சொன்னாலும் வெட்கமடா.. சொல்லாவிட்டால் துக்கமடா… துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா…’ (முத்து மண்டபம்) ‘ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்.. அந்த ஒருவரிடம் தேடினேன், உள்ளத்தைக் கண்டேன்.. உள்ளமெங்கும் தேடினேன், உறவினைக் கண்டேன்.. அந்த உறவினிலே மூழ்கினேன் பிரிவினைக் கண்டேன்..’ (தேன் நிலவு)


இலக்கியத்துக்கும் சாதாரண ரசிகனுக்கும் இடையே உள்ள தூரத்தை யாராவது இத்தனை டெஸிமலுக்குக் குறைத்திருப்பார்களா என்றால் இல்லை. 

"நீரோடும் வைகையிலே..நின்றாடும் மீனே…" ('பார் மகளே பார்') பாடலில் ஒரு வரி.

"உன் ஒருமுகமும் திருமகளின் உள்ளமல்லவா...?"

"உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா..?"

ஒரு முகத்தின் வெள்ளம் என்றால்? நதியும் கடலும் சங்கமிக்கும் இடத்தை பொழி முகம் (Estuary) என்பார்கள். சங்க முகம் என்றும் சொல்வதுண்டு. அந்த முகம்! அதில் ஒன்றாய்ப் பாயும் இரு வெள்ளம்!

கவிதையிலும் ஓர் காவிய நயம்..


மதுரைவீரன், மன்னாதி மன்னன், மகாதேவி, மாலையிட்ட மங்கை, ரத்தத் திலகம் இல்லற ஜோதி, கவலை இல்லாத மனிதன் .. மனதில் தடம்பதித்த படங்களையும் எழுதினார்.

'மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி!' முதல் பிரபல பஞ்ச் டயலாக் அதுவே! அதுவும் வில்லனுக்கு! 

காலம் அவருக்கு எத்தனையோ பரிசுகளை வழங்கி இருக்கலாம் ஆனால் காலத்துக்கு அவர் வழங்கிய பரிசு அவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடக்கூடியது. ‘சிவகங்கைச் சீமை’ என்ற அவர் தயாரித்த படம். காலத்துக்கும் நிற்கும் காவியம்.


இந்த ஒரு பாட்டு போதுமே? அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்!

“ஓஹோ ஓஹோ மனிதர்களே, ஓடுவதெங்கே சொல்லுங்கள்!

உண்மையை வாங்கி, பொய்களை விற்று, உருப்பட வாருங்கள்!

1

அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது

அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது

உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது

உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது.

காலம் போனால் திரும்புவதில்லை, காசுகள் உயிரை காப்பதும் இல்லை...

2

அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிற்காது

அழகாய் இருக்கும் காஞ்சிரை பழங்கள் சந்தையில் விற்காது

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது

விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது.

கண்ணை மூடும் பெருமைகளாலே தம்மை மறந்து வீரர்கள்போலே...

3

ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாது

உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது

படிப்பதனாலே தெளிவுள்ள மனசு பாழ் பட்டுப் போகாது

பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது

காற்றைக் கையில் பிடித்தவன் இல்லை, தூற்றித் தூற்றி வாழ்ந்தவரில்லை…”

('படித்தால் மட்டும் போதுமா?')

><><><


Wednesday, June 23, 2021

வித்தியாசம். விறுவிறுப்பு. நகைச்சுவை...



ஹார்ட் அட்டாக்கில் இருந்து மீண்டு வந்த வக்கீல் ராபர்ட்ஸ் நிராதரவாக நிற்கும் லியோவின் கேஸை எடுத்துக்கொள்கிறார். ஒரு பணக்கார பெண்மணியை பணத்துக்காக கொன்றுவிட்டதாக அவன் மேல் வழக்கு. மனைவியே அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல வருகிறாள். அப்படியும் அவனைக் காப்பாற்றிய தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இவர்...

நினைவுக்கு வருகிறதா அகதா கிரிஸ்டியின் ‘Witness for the Prosecution’? பிரமாதமான அந்த நாவலைத் திரையில் படுபிரமாதப்படுத்தியவர் அந்த டைரக்டர். அதைப் பார்த்துவிட்டு நிறைய பேர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கிடம் அவர் படம் என்று நினைத்து விட்டு பாராட்டினார்களாம்.
அந்த டைரக்டர்... Billy Wilder. ஜூன்22. பிறந்த நாள்!
1950, 60 களின் பத்துப் பன்னிரண்டு புகழ் பெற்ற படங்களை அடுக்கினால் அதில் இவர் படம் ஒன்றிரண்டாவது இருக்கும். மொத்தம் 22 முறை ஆஸ்கார் நாமினேஷன்! அவார்டை வாங்கியது அதில் ஏழு முறை. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிட்யூட் தேர்ந்தெடுத்த 100 சிறந்த படங்களில் நாலு இவருடையது.
இவருடைய எல்லா படங்களுக்கும் மூன்றே ஒற்றுமை. வித்தியாசம். விறுவிறுப்பு. ஊடாடும் நகைச்சுவை. ரசிகர்களுக்கு போர் அடிக்க கூடாது என்பதுதான் அவர் தியரி. ‘நான் பார்க்க விரும்புகிற மாதிரி இருக்கும் படங்களையே நான் எடுத்திருக்கிறேன். என் படத்தை பார்த்துவிட்டு ஒரு 15 நிமிஷம் அதைப் பற்றிப் பேச முடிந்தால் அதைவிட வேறென்ன பரிசு?’
இவர் இயக்கியவைதாம் மர்லின் மன்றோவின் அந்த பிரபல ‘The Seven Year Itch’ , & ‘Some Like It Hot’ (1959 இல் இவர் எழுதி இயக்கிய இந்தப் படத்தை இதுவரை வந்ததில் பெஸ்ட் காமெடி படமாக 2000 ஆம் வருடத்தில் அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்ந்தெடுத்தது.)
அப்புறம் ஜாக் லெமன் - ஷர்லி மெக்லீன் ஜோடியின் அந்த இரண்டு பிரபல படங்கள்: ‘The Apartment’ & ‘Irma la Douce’ (ஹிந்தியில் மனம் கவர்ந்த ‘மனோரஞ்சன்’) கிர்க் டக்ளஸின் ‘Ace in the Hole’... ஆட்ரி ஹெப்பர்னின் ‘Sabrina’...
ரயில் டிக்கட்டுக்கு பணம் இல்லாத நாயகி சின்னப் பெண்ணாக நடித்து அரை டிக்கட் எடுப்பார் இவரது ‘The Major and the Minor’ 1942 படத்தில். அந்த வேடத்தில் ஜெர்ரி லூயி நடிக்க ‘You’re Never Too Young’ என்று 1955 இல் எடுத்து அதுவும் சக்கைப் போடு போட்டது.
‘யார் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையே அவர்தான் மிகச்சிறந்த டைரக்டர்.’ என்னும் இவர், வளரும் இயக்குனர்கள் உணரும் வார்த்தைகள் நிறைய சொல்கிறார்:
‘உங்கள் உள்ளுணர்வின்படி செய்யுங்கள். தப்பாக போனாலும் அது உங்களுடையதாக இருக்கும்.’
‘ஒரு நடிகர் கதவை திறந்து கொண்டு வந்தால் ஒன்றும் இல்லை. ஜன்னல் வழியாக நுழைந்தால் அது ஒரு சம்பவம்!’
‘க்ளோஸப் என்பது ஒரு துருப்புச் சீட்டு.’
‘தனித்தனியே பார்த்தால் ஆடியன்ஸ் ஒரு இடியட்டாக தோன்றும். ஆனால் மொத்தமாக பார்த்தால் அவர்கள் ஒரு ஜீனியஸ்.’
ரிட்டையர் ஆன பிறகு டைரக்ட் செய்ய மிகவும் ஆசைப்பட்ட படம் Schindler's List ஆனால் ஸ்பீல்பர்க் -க்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.
1970 களில், ‘என்ன இந்தக் காலத்தோடு அவுட் அஃப் டச் ஆகி விட்டீர்களே என்று கேட்டதற்கு இந்தக் காலத்தோடு டச் ஆக யார் விரும்புகிறார்கள்?’ என்றாராம்.

Monday, June 21, 2021

தரமான நடிப்பு...



....விரல்களைச் சொடுக்கி, ‘முகாம்பா குஷ் ஹுவா!’ என்றபடி என்டர் ஆகும் Mr India நடிப்பு எல்லோரையும் குஷிப்படுத்தி விட்டது.

Amrish Puri… இன்று பிறந்தநாள்!
‘Meri Jung’ படத்தில் கோர்ட்டில் குஷ்பூவை இவர் விசாரிக்கும் காட்சி. பயந்த பெண்ணிடம் கனிவாக கர்ச்சீப்பை நீட்டி, கண்ணைத் துடைத்துக் கொள்ள விட்டு, ஈசியான சின்ன கேள்விதான் கேட்கப் போறேன்னு சொல்லி, மிருதுவுக்கும் மிருதுவான குரலில் கேட்பதும், இடையில் அப்ஜெக்ஷன் சொல்லும் அனில் கபூருக்கு சட்டென்று டோனை மாற்றி கண்டிப்பான குரலில் மறுப்பதும்... மறுபடி கனிவாக குஷ்பூவிடம் தொடருவதும்... தனக்கு வேண்டிய பாயிண்டை அவர் வாயிலிருந்து வரவழைத்ததும் குரலை உயர்த்தி மடக்குவதும்.. ஆஹா, Here is a real actor! என்று சொல்ல வைக்கும்.
Steven Spielberg வாயாலேயே உலக பெஸ்ட் வில்லன் பட்டம் வாங்கியவர். ‘Indiana Jones and the Temple of Doom’ இல் ‘அந்தக் கற்களை கீழே போட்டு விடுவேன்,’ என்று சொல்லும் ஹீரோவிடம் சர்வ அலட்சியமாக சொல்லும், ‘Drop them Doctor, They will be found. You will not!’ நினைவுக்கு வருதா?
Gunda raj படத்தில் அஜய் தேவ்கனை மிரட்டும் காட்சி. வெண்கல வாய்ஸ் ஒரு புறம் மிரட்டிக் கொண்டிருக்க, இமைக்காத கண்களில் விழிகள் உருள இந்த வில்லன் சீனை ஆக்கிரமித்து விடுவார். இவரைச் சமாளித்து ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேசுவதற்குள்...
அடிக்கடி வந்து அவார்ட் வாங்கிக் கொள்வார் Filmfare விழாவில். மொத்தம் பன்னிரெண்டு. 1993, 94, 96 மூன்று வருடங்களும் விசேஷம். Best Villain, Best Supporting Actor இரண்டும் இவரே.
Raaj Kumaar -க்கு பிறகு இவர்தான் வசன உச்சரிப்புக்கு, with due modulation, of course! இருவருமே மோதிக் கொள்ளும் காட்சி ‘Surya’ படத்தில் வரும்.
ரவுண்ட் ட்ராலி ஷாட்டுக்கென்றே பிறந்தவர். சுற்றி வரும் காமிராவின் முன் சாய்த்த தலையுடன் ‘Dhivya Shakti’படத்தில் பேசும் அந்த ஸ்டைல் இவருக்கே வரும்.
நம் திரை உலக வழக்கப்படி பிற்பாடு நல்லவர் ரோலுக்கு வந்து விட்டார். Dilwale Dulhania…,China Gate, Virsat… காமெடி ரோலும் தனக்கு வரும் என்று காட்டியது ‘Sangram’ படத்தில். கமலஹாசனும் அவருடைய நளின பகுதியை Chachi 420 -இல் (‘அவ்வை ஷண்முகி’) ஜெமினி ரோலில் வெளிப்படுத்தினார்.
மறக்க முடியாதது மணிரத்னம் அளித்தது. ‘தளபதி’ ரஜினியை தன்னோடு அழைக்கிற காட்சியில் அளவான பாடி லேங்குவேஜில், குரலை ஏற்றி இறக்கி பேசுவது.. நல்லா இரு என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கும் கர்வம்.. . தேவராஜ் விடுதலையாகும் போது காட்டும் இறுக்கமான முகம்... அப்புறம் அந்த confrontation! படிக்கட்டுகளில் தேவராஜை நேருக்கு நேர் சந்திக்கும்போது…’நீ மாறவே இல்லே!’ நிறுத்தி அழுத்தமாக பேசுகிறார். அவர் ‘எதையுமே மறக்கலை’ என்றதும் ஒரு ரியாக் ஷனை முகத்தில் வடியவிடுகிறார். தலையை நிமிர்த்துகிறார். முகத்தை உயர்த்துகிறார். ‘நூறு வருஷம் வாழணும்!’ என்று தோளைத் தட்டுகிறார். பேசிக்கொண்டே உடல் அசைவுகள் காட்டுவது ஒரு ரகம் என்றால் அவசியமான இடத்தில் இடைவெளி விட்டு அந்த vital அசைவுகளைக் கவனிக்க வைப்பது இவர் ரகம். கேமிராவுக்கு முகம் காட்டும் consciousness இல்லாமல் பேசும் அந்த confidence!
முதல் ஸ்க்ரீன் டெஸ்டில் தோற்ற எத்தனையோ முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர். அண்ணன் மதன்புரி already, an established villain ஹிந்தி படவுலகில்.

எளிமையும் விவரமும்...


‘Panchayat.’ வெப் சிரீஸ்… (Amazon Prime)

அந்தக் குக் குக்கிராமத்துக்கு பஞ்சாயத்து செகரெட்டரியாக ஹீரோ வந்து சேரும்போது நம் மனதில் காதல், மோதல், காமெடின்னு பல ஒன்லைன்கள் உதிக்க, நடப்பது என்ன? எல்லாம் அமைதியாக, எல்லோரும் அவரவர் ஆக. இயல்பாக எழும் பிரசினைகள்! அழகாக வந்து விழும் முடிச்சுக்கள்! இழையோடும் நகைச்சுவை!
பல ஆயிரம் ‘ஒரே’ படங்களைப் பார்த்துப் பார்த்து ஃபார்முலாக்களை ஏற்றிவிட்டிருக்கிற மனது சற்றுத் துவளுகிறது. சற்றே நேரத்தில், இந்த ‘ஃபார்முலா இல்லாமை’ இத்தனை அழகா என்று வியந்து போகிறோம்!
ஹீரோவுடன் அந்த கிராமத்துக்குள் நுழைந்து ஒவ்வொருத்தரையா சந்திச்சிட்டே வர்றோம். கொஞ்ச நேரத்துல பார்த்தால், அந்தப் பஞ்சாயத்து பிரசிடெண்ட் வீட்டில திண்டில நாமும் உட்கார்ந்து இருக்கிறோம். எப்படி வந்தோம்னே தெரியல. அப்படி ஒரு இயல்பான மூவ்மெண்ட்.
ஹீரோவின் perspective-ல் தொடங்கிச் சென்றது, கொஞ்ச நேரத்தில் எல்லாருடைய பார்வையிலும் நகர்கிறது. ஹீரோயின்னு ஒருத்தர் இல்லாம எட்டு எபிசோட்... ஆஹா நாம் காண்பது என்ன எபிசோடா அல்லது எபிக்கா?
எத்தனை இன்னஸண்ட் ஆக இருக்கிறதோ அத்தனை விவரமாக! எத்தனை எளிமையாக இருக்கிறதோ அத்தனை ஆழமாக!
12 சோலார் விளக்கு எங்கே போடணும்ன்னு தீர்மானிச்சாச்சு. 13-வதுக்காகத்தான் இந்த மீட்டிங் என்று ஆரம்பிக்கிறது ஒரு எபிஸோட். ஹீரோவுக்கு படிக்க லைட் வேணும். அவன் வேலை பார்த்து தங்கியிருக்கும் பஞ்சாயத்து ஆபீஸ் முன்னால் போடச் சொல்ல, பேய் பிடிக்கிற மரத்தின் பக்கத்துல போட்டா ஊரார் பயம் அகன்று வோட்டு குவியுமேன்னு பிரசிடெண்ட் சொல்ல... ஒரே வழி, மக்களின் அந்த பயத்தை அகற்றறதுதான்னு ஹீரோ, பேயின் பூர்வாங்கத்தை தூர் வாங்கக் கிளம்புவதும், சந்திக்கும் இயல்பான வினோதங்களும் சந்திப்பவர்களின் வினோதமான இயல்புகளும்... கச்சிதமான கதை வட்டம்.
நேர்த்தியா இழை பின்னின பட்டுச் சேலை மாதிரி கதைகள். பாந்தமாப் போட்ட பார்டர் மாதிரி ஊடாடும் காமெடி. அந்தந்த எபிசோடின் மையக் கதைக்கு சம்பந்தமில்லாம ஒரு வார்த்தை, வசனம் வரணுமே? என்னா கவனம்யா!
யாருய்யா அது அந்த பஞ்சாயத்து பிரசிடெண்ட் கணவர்? பாலையாவை பார்வையிலேயும் ரங்காராவை வார்த்தையிலேயும் கொண்டு வருகிறார். நட்புக்கும் குடும்பத்துக்கும் இடையே, பாலிடிக்ஸ்க்கும் நியாயத்துக்கும் இடையே புருவத்தை நெறிப்பது சுவாரசியமாகவும் அழகாகவும் இருக்கிறது.
டௌரி வாங்கமாட்டேன்னு சொல்லும் ஹீரோவை வரனாக்க ஆசை அவருக்கு. அவன் சொல்ற மாதிரி ஒரு லட்சம் ஸாலரி வாங்குவானா? பரிட்சையில தேறணும்னா பிரைய்ன் வேணும்கிறாளே மனைவி? இருக்கா பார்த்துடுவோம்னு கேள்வியைக் கொடுத்து யுவர் டைம் ஸ்டார்ஸ் நவ் சொல்லும் பிரசிடெண்டு புருஷன்! அவர் குழம்பும்போது கூடவே குழம்புகிறோம். தவிக்கும்போதும் கூடவே நாமும்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைக்கிற மாதிரி அந்த கடைசி எபிசோட். ஒண்ணுமே சொல்ல வேண்டாம் அதைப் பத்தி. பார்த்துத்தான் ரசிக்கணும்.
எந்த இடத்திலும் தன்பால் கவனம் ஈர்க்காத கேமரா! அதுதானே நல்ல கேமரா மேனுக்கு இலக்கணம் என்பார் பிரபல காமிராமேன் மார்கஸ் பார்ட்லி?
நாடகத்தனமான நடிப்பு மருந்துக்குக் கூட இல்லையே என்று வருந்துகிறவங்களுக்கு ஆறுதலாத் தேடினால் ரிங்குவின் அம்மா பாத்திரம் மட்டும் ஆங்காங்கே சற்று ஆறுதல் வழங்குகிறது.
அத்தனை விஷயங்களும் மாற்றாத அவன் மனதை மாற்ற வரும் பெண் , ஆமா நாம தேடிக்கொண்டே இருந்த பெண் வருகிறாள்... எப்போ? அது சஸ்பென்ஸ்!
மொத்தத்துல நாம எதைப் பார்த்தெல்லாம் இதுவரை கைதட்டிட்டு, ரசிச்சிட்டு இருந்திருக்கோம்னு நாண வெச்சிடுது. எபிசோட் எட்டையும் பார்த்தபின் பழகிய நிஜ மனிதர்களைப் பிரியும் உணர்வு தோன்றுவது தொடருக்கும் வெற்றி, நமக்கும் திருப்தி என்கிறது.
><><

Sunday, June 20, 2021

தந்தையர் தினம்...

 


அப்பா...

அப்பாடா என்று நாம் வாழ்க்கையில்

அமருகிற வரைக்கும் ஓயாதவர்.

><><

தந்தையர் தினம்...

போற்றப் படுவதில்லை வெகுவாக,

ஆயினும் உணரப்படுகிறார்...


எப்போதும் வருவதில்லை,

எனினும் தோன்றி விடுகிறார்.

சரியான தருணங்களில்...


அடுக்கடுக்காய் அறிவுரைதான்,

அவசியம் பிற்பாடுதான் தெரிகிறது...


அவரால் முடியவில்லை,

அவ்வப்போது மனதைத் தொட.

ஆனால் செய்தவை அறிய வரும்போது 

ஆக்கிரமித்துக் கொள்கிறார் மனதை.

><><


அப்பாவைவிட அம்மாவை

பிள்ளைகளுக்குப் பிடிக்கும்.

அப்பாவை ஏமாற்ற முடியாது.

அம்மா ஏமாறுவதுபோல

நடிப்பது தெரியாது.


><><


அப்பாவின் செருப்பு

ஒருநாளும் தேய்வதில்லை.

அவர் நடக்கிற தூரமோ

ஐந்தாறு கிலோமீட்டர் அனுதினமும்.

ஆனாலும் தேயாத மாயம்

அகப்படவேயில்லை

அவர் இறக்கும் வரையில்.

வந்திருந்த யாரோ சொன்னார்கள்

’அன்பான மனைவியும்

அருமையான பிள்ளைகளும்

வாய்த்ததில் அவருக்குத்

தரையில் கால் பாவவில்லை.’


><><


Wednesday, June 16, 2021

உடை முக்கியம்!


தம்பாட்டுக்கு, தம் பாட்டுக்கு சாக்ஸபோனும் டபிள் பாஸும் வாசித்துக்கொண்டிருந்த ஜோவும் ஜெர்ரியும் வில்லன் செய்த கொலை ஒன்றைப் பார்த்து விடுகிறார்கள். அதை வில்லன் பார்த்துவிட, ஊரைவிட்டு எப்படி தப்புவது? போடு பொம்பளை வேஷம். பெண்கள் இசை கோஷ்டி ஒன்றில் பெண் வேடத்தில் சேர்ந்துகொண்டு கொண்டு ரயிலேறி விடுகின்றனர். தலைவி கேன் (மர்லின் மன்றோ) மீது மையல் கொண்டு, காட்ட முடியாத காதலில் அவதிப்படுகின்றனர். அவளோ ஒரு மில்லியனேரை மணக்கும் திட்டத்தில் மிதப்பாக! என்ன செய்வது? விழிக்கிறான் ஜோ. போடு இன்னொரு (ஆண்) வேஷம்! பணக்கார பிசினஸ்மேனாக! மீன்வைல் ஜெர்ரியோ 'அவளை' அடையத் துடிக்கும் நிஜ பணக்காரன் ஒருவனிடம் மாட்டிக் கொள்கிறான். அந்தச் சமயம் பார்த்து ஒரு ரகசியக் கூட்டத்துக்காக அங்கே வரும் வில்லன் கொலை செய்யப்பட அதையும் பார்த்து தொலைத்து விடுகிறார்கள் ஜோ-ஜெர்ரி. இப்ப இந்த ஊரை விட்டும் ஓட வேண்டும்... காதல்?

‘Some Like It Hot’ என்ற இந்த 1959 ஃப்ரேம் டு ஃப்ரேம் காமெடியில் ஜோவாக வந்து ஜோராகக் கலக்கியவர்...
Tony Curtis. இன்று பிறந்த நாள்!
பெரும்பாலும் ப்ளே பாயாக வந்து சிரிக்கவைத்த டோனியின் முன்கதை முழுக்க சோகமானது. வறுமை. சரியாக சாப்பாடு போட முடியாத பெற்றோர் தம்பியையும் இவரையும் அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட, கற்றுக் கொண்ட ஒரே விஷயம் எப்படியாவது தானே மேலே வருவது. தம்பி ஓர் ஆக்ஸிடெண்டில் இறந்துவிட தவித்துப் போனார். நேவியில் சேர்ந்தபோது இரண்டாம் உலக யுத்தம். வெளிவந்ததும் நடிப்பு பள்ளியில் சேர்ந்தார், ஆதர்ச Cary Grant -ஐ மனதில் வைத்து! சில வருடங்களில் அவருடனேயே நடிக்கும் காலம் வந்தது. ‘Operation Petticoat’
Gregory Peck, Kirk Douglas, Burt Lancaster, Anthony Quinn, Robert Mitchum, Frank Sinatra... அத்தனை பேரும் மறுத்த பாத்திரம் அது. மறுக்காத மார்லன் பிராண்டோவுக்கு தேதி கிடைக்கவில்லை. இவரிடம் வர, விரும்பி ஏற்ற படம்தான் Sidney Poiteur -உடன் நடித்த ஸ்டான்லி க்ராமரின் ‘The Defiant Ones’. இருவரும் விலங்கால் பிணைக்கப்பட்டிருக்க சிறைக்கு அவர்களை எடுத்து செல்லும் டிரக் விபத்துக்குள்ளாகிறது. ஒருவரை ஒருவர் பிடிக்காத இருவரும் அந்த விலங்குடனேயே சேறும் புதைகுழியும் அடர்ந்த காட்டு வழியில் தப்பிச் செல்வதும் வழியில் சண்டையிட்டுக் கொள்வதும்... மறக்க முடியாத படம். இருவருக்குமே ஆஸ்கார் நாமினேஷன்.
ஆனானப்பட்ட கிர்க் டக்ளஸுடன் நடித்தபோது அந்த இரண்டு படத்திலும் ரசிகர்களை இவரும் தவறாமல் கவர்ந்திருப்பார். ‘Spartacus’ ‘The Vikings’(அந்த இறுதி ஃபைட் த்ரில்லிங், இல்லை?) அசாத்திய காமெடி நடிகரான ஜாக் லெமனுடன் இவர் சேர்ந்தால் கேட்க வேண்டுமா? சீன் பை சீன் நாம் சிரித்த ‘The Great Race’! நடித்த வேடங்களில் ஒன்று மேஜிக் நிபுணர் ஹூடினியாக. மேஜிக் தெரிந்தவர் என்பதால் அனாயாசமாக.
மணந்த ஆறு பேரில் முக்கியமானவர் பிரபல நடிகை Janet Leigh இவரது நாலு புத்திரிகளுமே நடிகையர். ரொம்ப பிரபலம் அதில் Jamie Lee Curtis (‘True Lies’ நாயகியாக வருவாரே அவரேதான்.)
ரொம்ப கவனமாக தேர்ந்தெடுப்பார் படத்தில் அணியும் காஸ்ட்யூம்களை. கற்றுக் கொடுத்தவர் பிரபல நடிகர் Lawrence Olivier. ‘உடை முக்கியம்! அது கேரக்டரை இன்னும் மேம்படுத்த உதவும்!’
><><

Tuesday, June 15, 2021

ஆனந்த நீலப் பறவைகள்


“எங்கோ வானவில்லின் மேலே.. இன்னும் மேலே..
நீலப் பறவைகள் பறக்கின்றன..
நீ காணும் கனவுகள் பலிக்கின்றன…..
ஆனந்த நீலப் பறவைகள்
வானவில்லை தாண்டி பறக்கும் போது
என்னால் ஏன் பறக்க முடியாது?“
இன்றும் பெரிதும் விரும்பிக் கேட்கப்படும் இந்த 1939 பாடலை பாடியவர் பிரபல நடிகை Judy Garland.. June 10 பிறந்த நாள்!
ஆஸ்கார் அவார்டு வாங்கிய “Over the Rainbow…” என்ற அந்தப் பாடல் ‘The Wizard of Oz’ படத்தில் வருவது. 100 வருடங்களின் மாபெரும் பாடல்களில் முதலாவதாக அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் தேர்ந்தெடுத்தது. (பாடல் லிங்க் கீழே)
நாவலைப் படித்திருப்பீர்கள். புயலால் தூக்கி எறியப்பட்டு மந்திரவாதியின் ராஜியத்தில் கண்விழிக்கும் டாரதியாக அந்தச் சின்ன வயதிலேயே அற்புதமாக நடித்திருப்பார் ஜூடி.
ரெண்டு வயதிலேயே திரும்பத் திரும்ப ‘ஜிங்கிள் பெல்ஸ்’ பாடிக்கொண்டு மேடையை விட்டு இறங்க மறுத்த குழந்தையைக் கவனித்ததுமே அன்னை தீர்மானித்து விட்டாள், அவளை ஒரு பாடகி ஆக்கிவிட வேண்டும் என்று.
‘A Star Is Born’ படத்தில் இவருக்கு ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்தபோது பரிசு ஆறு ஓட்டில் தவறி Grace Kelly -க்குப் போகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை பிரமாதமாக நடித்திருந்தார். பிரிமியர் பத்திரிகை 100 தலைசிறந்த நடிப்புகளில் ஒன்றாக அதைத் தேர்ந்தெடுத்தது.
சொன்னவை:
‘என்னை ஒரு லெஜண்ட் என்கிறார்கள். அப்புறம் ஏன் நான் தனிமையில் தவிக்கிறேன்?’
‘ஹாலிவுட் ஒரு வித்தியாசமான இடம் தான், நீங்கள் கஷ்டத்தில் இருந்தால்! அது தம்மையும் தொற்றிக் கொள்ளும் என்று நினைக்கிறார்கள்.’
‘உங்களுடைய முதல் பதிப்பாக இருங்கள், வேறு யாருடையவாவது இரண்டாம் பதிப்பாக இருக்காமல்!’