Friday, August 29, 2014

அதுவும் இனிமை...



னிமையைப் போக்குகின்றன எண்ணங்கள்.
எண்ணங்கள் சூழ நான் 
அமர்ந்திருக்கும்போது
எந்த இடமும் தெரிவதில்லை தனிமையாக.
கவலைக் கிரணங்களை அவை 
கொண்டிருந்தாலும் அதன் 
திவலைகளை அள்ளித் தெளித்தபடியே என்
தனிமையை விசிறுகின்றன.
பெரும் தீயாக எழும் துக்கமும்
அடங்கிப் போகிறது ஒரு கட்டத்தில்.
என் எண்ணங்களுடன் நான்
பேசுகிறேன்.
எங்கிருந்தாவது எடுத்து ஓர்
இனிமைச் சாயம் அவற்றின் மேல்
பூச முயலுகிறேன்.
ஏதோ ஒரு பாட்டை அவை முணுமுணுக்க
எப்படியோ தெளிந்து போகிறேன்.

>0<


(படம்- நன்றி:கூகிள்)

Wednesday, August 27, 2014

காற்றின் திசைக்கு...

அன்புடன் ஒரு நிமிடம் - 63

அவர்கள் பேசிக் கொண்டிருந்த  விஷயம் அப்படியொன்றும் தலையைப் பிய்க்கிற பிரசினை இல்லை. என்றாலும் வாசு எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தது வந்திருந்த அவர் மைத்துனர் பாஸ்கருக்கு ஆச்சரியம்... தவிர எந்த தலைபோகிற சங்கதியானாலும் லேசில் பதற்றம் அடைகிறவர் அல்லவே அவர்?
ஆபீஸ் விஷயமாக அந்தப் பகுதிக்கு வந்திருந்த பாஸ்கர் அப்படியே அவரையும் பார்த்து சில வீட்டுப் பிரசினைகளை கேட்டுவிட்டுப் போகலாம் என்று நுழைந்தான்.
சற்றே கவனித்தபோது சுவரில் மாட்டியிருந்த மின் விசிறியின் சுழற்சிக் கேற்றபடி இடமும் வலமுமாக அவர் நடப்பது புரிந்தது.
காற்றுக்காகத்தான் அப்படி என்றால் ஏன் கஷ்டப்பட்டு அப்படி நடக்கணும்? அதை ஒரே திசையில் வீசச் செய்ய ஓர் ஸ்விட்ச் இருக்கும்போது? , அது வேலை செய்யவில்லை போலும்... இதைக்கூட சரி செய்யாமல் என்ன வீட்டைப் பராமரிக்கிறார் இவர்?
பேச்சு ஒரு முடிவுக்கு வந்ததும் சொன்னான். "எனக்கு இன்னும் அரை மணி போல அவகாசம் இருக்கு. இந்த ஸ்விட்ச்சை சரி பண்ணிடறேனே?"
"அது ரிப்பேர்னு யார் உனக்குச் சொன்னது?"
"ஐயோ அது சரியா வேலை செய்யாததால் தானே நீங்க இப்படி குறுக்கும் நெடுக்குமா...?"
"அப்படீன்னு நீயா  நினைத்துக் கொண்டாய், அவ்வளவுதான!"  என்றவர் அதை ஓரிடத்தில் வீசுமாறு நிறுத்தினார்.
"Oh,it works! அப்புறம் ஏன்  நாம இருக்கிற திசைக்கு அதை ஃபிக்ஸ் பண்ணாமல் ...?"
"அப்படி எதையுமே  நமக்காக மாற்றிப் பழகக் கூடாது என்பதால் தான்! எதனுடைய, யாருடைய பொசிஷனையும்! எப்பவுமே நாம நினைக்கிறபடி விஷயங்கள் நடப்பதற்காக மற்றவங்களை நாம நினைக்கிற நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம். அதில் நமக்கு வெற்றிக் களிப்பு ஏற்படற அளவுக்கு விரக்தியும் ஏமாற்றமும் சோர்வும் வர சான்ஸ் இருக்கு இல்லையா?  தேவையான இடங்களில் மற்றவர்களின் நிலைக்குத் தகுந்தாற்போல நம்மை அசைக்க கற்றுக் கொள்வது மிக மிக முக்கியம் மட்டுமல்ல, வெற்றி பெறும் சந்தர்ப்பங்களையும் அதிகரிக்க வைக்கும். ஆக அதை எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ளத்தான் இதைப்போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்கிறேன்அது தக்க தருணத்தில் என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் நான் வளைந்து கொடுக்க உதவும்."
(’அமுதம்’  2014 ஜனவரி இதழில் வெளியானது)

(படம் - நன்றி: கூகிள்)
><><><><

Tuesday, August 19, 2014

அவள் -6


30.
எப்படிக் கொண்டாடுவது
உன் பிறந்த நாளை,
தினமும் அல்லவா
பிறந்து கொண்டிருக்கிறாய் நீ
என் மனதில்!

31.
உன்னிடம்
அறிந்து கொண்டேன்
சின்ன எழுத்து அழகுக்கும்
பெரிய எழுத்து அழகுக்குமான
வித்தியாசம்.

32
உன்
அழகுக்கில்லை
கடந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
என்று தனியே.

33.
பளிச்சிடுகிறது
உன் முகம்
அதில்
பிரதிபலிக்கிறது
என் மனம்.

34.
தள்ளிச் செல்லச் செல்ல
என் மிக அருகாமையில்
நீ.

35.
சற்றே திரும்பிப் பார்
தத்தித் தத்தி உன் பின்னால்
நடந்து வருகிறது
என் இதயம்.

36.
உன் எண்ணங்களும்
என் எண்ணங்களும்
கை கோர்த்தபடி
நம் முன்னால்!

><><><>< 
(படம்- நன்றி:கூகிள்)