Friday, September 6, 2013

ஊகம் பதினெட்டு, ஊக்கம் ஒன்று...


 

 
அன்புடன் ஒரு நிமிடம் - 43
 
ரயில் எக்மோரை நெருங்கிக் கொண்டிருந்தது. வினோதுக்கு மனது இதமாக இருந்தது. அதே போல் ஆர்வமுள்ள நண்பனுடன் இரண்டு நாள் அந்த இலக்கிய கருத்தரங்குக்கு சென்றுவிட்டுத் திரும்பியதில்!. வெகு நாளைய அவா ஆயிற்றே?

இன்னும் ரெண்டு மணி நேரம் பயணத்தில் வீடு. யமுனாவுக்கு அலை பேசிப் பார்க்கலாமா?

அழைத்தான். பதிலில்லை. 

லேசாய்க் கலவரம் மூண்டது மனதில்.

"என்ன தியாகு இது, பதிலில்லையே? ஸ்விச் ஆஃப் இல்லே வருது? அங்கே ஏதோ பிரசினை...?”

“அட, சார்ஜ் தீர்ந்திருக்கும். விடு.”

விடவில்லை. லாண்ட் லைன் முயற்சித்தான். கடைசி மணி வரை

பதிலில்லை.

வயிற்றுக்குள் பல்ப் எரிந்தது. பக்கத்து வீட்டு தொலைபேசிக்கு அழைப்பு கொடுத்தான்.

ப. வீ. மைதிலி எடுத்தாள். “யமுனா அக்காவா? அக்கா அவசரமா குழந்தையோட ஆட்டோவில் கிளம்பிப்போனா.  நான் வந்து என்னன்னு கேக்கிறதுக்குள்ளே ஆட்டோ கிளம்பிட்டது.”

அவ்வளவுதான். டென்ஷன் ஆகிவிட்டான். “நெனச்சேன்! ஆஸ்பிடல் தான் போயிருப்பாள்! விகாசுக்கு ஏதோ பிராப்ளம் ஆயிருக்கும். சே, இந்த நேரத்தில நான் அங்கே இருந்திருந்தா எத்தனை ஈஸியா... ”

“அதெல்லாம் ஒண்ணும் ஆயிருக்காது.”

“நோ. அதான் அந்த பதற்றத்திலதான் செல் போனை மறந்திருக்கா.”

“நிச்சயமா அப்படி இருக்காது. குழந்தைக்கு ஏதும் உடம்புக்குன்னா உடனே உனக்கு போன் செய்து அலர்ட் பண்ணியிருப்பா. தட்ஸ் ஷ்யூர் அபவுட் ஹர். பக்கத்தில ஏதாச்சும் ஃபிரண்ட் வீட்டுக்கு போயிருக்கலாம். இல்லேன்னா ஸ்கூலில் விகாஸோட டீச்சர் வந்து பார்க்க சொல்லி அவனை அழைச்சிட்டுப் போயிருக்கலாம். அல்லது பக்கத்து கணபதி கோயிலில் ஏதாச்சும் விசேஷம்னு…. ”

 வரிசையாக பதினெட்டு ஊகம் சொன்னான்.

கொஞ்சம் ஆசுவாசமானாலும் கேட்டான். “அப்படீன்னா எனக்கு ஏன் ஒரு போன் பண்ணலே?”

“போன் பண்ணிச் சொல்லாததிலிருந்தே தெரியலியா ஏதோ trivial matter தான்னு?

ஐந்தே நிமிடத்தில் அவனை அமைதியாக்கிவிட்டான் தியாகு.. பாசிடிவ் ஆகிவிட்ட மனம் அடுத்த விஷயத்துக்கு பாஸ் ஆனது.

தொடர்ந்த ஒன்றரை மணி நேர ரயில் பயணத்தின்போது அந்த கருத்தரங்கில் கேட்ட விஷயங்களைப் பற்றி அலசி, அசைபோட்டு, விவாதித்து, ரசித்து என்று  நேரம் சென்றதே தெரியவில்லை. பஸ்ஸில் ஏறிய பின்பும் தொடர்ந்தது சம்பாஷணை.

வீட்டை நெருங்கும்போதுதான் மீண்டும் அதெல்லாம் நினைவு வந்தது. உள்ளே நுழைந்தால்?

அப்போதுதான் வந்திருக்கிறாள். ஆஸ்பிடல்தான் ஓடியிருக்கிறாள். ஆத்திரத்தில் செல்லை மட்டுமல்ல பர்ஸையும் மறந்திருக்கிறாள். குழந்தைக்கு உடம்பு சரியில்லை  டாக்டர் சொன்ன விவரம் எல்லாம் சொன்னாள். பழகிய நர்சிடம் கடன் வாங்கி...

எல்லாம் அவன் சந்தேகப்பட மாதிரியே...

உடனே செய்ய வேண்டிய விஷயங்களை மடமடவென்று கவனித்தார்கள். மருந்துச் சீட்டை அவளிடமிருந்து வாங்கி ஓடிப்போய் வாங்கி வந்து... இட்லியும் தேநீரும் வாங்கிவந்து... வெந்நீர் ரெடி செய்து...

 “சே, வந்த நினைப்பை அப்படியே விட்டிட்டேனே? உனக்கும் அப்படித் தோணாமப் போச்சே? என்றான் நண்பனிடம்.

“எனக்கும் அப்படியேதான் தோணிச்சு!” என்றான் தியாகு அமைதியாக. “ஆனா நாம ரயிலில் இருந்தோம். எதுவும் பண்றதுக்கு இல்லை. ஏதும் செய்ய முடியாம டென்ஷனை மட்டும் ஏற்றிக் கொண்டே போனால் என்ன ஆகும்? உடம்பை வதைக்கிறதைத் தவிர ஒண்ணும் நடக்காது. இங்கே வந்து சேரும்போது, அப்படி நடந்திருக்கும் பட்சத்தில்,  அதை எதிர் கொண்டு நிற்கத் தேவையான அந்த சக்தி குறைந்திருக்கும். செயல்படும் வேகத்தை அது பாதிக்கும். அது எதுக்கு? அதுக்கு பதிலா முடிந்த வரையில் இயல்பா அந்த நிமிடங்களைக் கழித்துவிட்டு இருக்கிற சக்தி குறையாம வந்து சேர்ந்தா அதுவே பிரயோஜனமா இருக்கும். அதான் அப்படி இப்படி ஊகங்களை அடுக்கி உன்னை அமைதிப் படுத்தினேன். அதுவும் சரிதானே?’

 ‘நோ நோ, அதுதான் சரி!”
 
('அமுதம்' மே  2013 இதழில் வெளியானது)

<<<>>> 

(படம் - நன்றி:கூகிள்)

Monday, September 2, 2013

நல்லதா நாலு வார்த்தை - 15



‘எல்லாப் பெருமையும்,

துணிந்து தொடங்குவதில்

தோன்றுகிறது.’
- Eugene F. Ware
(‘All glory comes from daring to begin.’)
<> 

‘அடுத்தவர்

அனுபவத்திலிருந்து
அறிந்து கொள்கிற
அளவுக்கு
அறிவுடையோர்
ஆருமுண்டோ?’
- Voltaire
(‘Is there anyone so wise as to learn by
the experience of others?’)
<> 

‘சரியான வார்த்தைக்கும்

கிட்டத்தட்ட
சரியான வார்த்தைக்கும்
உள்ள வித்தியாசம்
மின்னலுக்கும்
மின்மினிப் பூச்சிக்கும்
உள்ள வித்தியாசம்தான்.’
-Mark Twain
 (‘The difference between the right word and the almost
right word is the difference between lightning and a lightning bug.’)
<> 

‘ஆற்றல்,

தன்னால் முடிவதை செய்கிறது.

அறிவாற்றல்,
தான் செய்யவேண்டியதை செய்கிறது.’
- Edward Bulwer-Lytton
(‘Talent does what it can; genius does what it must.’)
<> 

‘அன்பின்

அரவணைப்பில்
அனைவரும்
ஆகிவிடுகிறார்கள்
கவிஞர்களாக!’
- Plato
(‘At the touch of love everyone becomes a poet.’)
<> 

என் வாழ்க்கை நிறைவானது

அப்படி இல்லாத பொழுதுகளிலும் கூட.’
- Ellen DeGeneres
(‘My life is perfect even when it’s not.’)
<> 

ஆகாயம்,

கண்களின் தினசரி
ஆகாரம்.
-Emerson
(‘The sky is the daily bread of the eyes.’)
 <<<<>>>>

(படம்- நன்றி:கூகிள்)

Monday, August 26, 2013

சில புள்ளிகள்... சில கோடுகள்...

அன்புடன் ஒரு நிமிடம் - 42

கொண்டு வைத்த காபி ஆறிப்போனது. கண்ணில் கவலைக் கிரணங்கள் கொஞ்சமும் குறையவில்லை. அத்தனை அதிகாலையிலேயே தேடி வந்திருந்த நிமலனின் சங்கடம் நல்லாவே விளங்கிற்று சாத்வீகனுக்கு. அவரது நண்பனின் பேரன்.

 “…பத்து வருஷம் வெளிநாட்டில எல்லாரையும் பிரிஞ்சிருந்துட்டு திரும்பின எனக்கு இப்படி எங்க குடும்பம் ஆளுக்கொரு பக்கம் முகத்தைத் திருப்பிட்டு, ஒருத்தரை ஒருத்தர் பகையா நினைச்சுட்டு இருக்கிறதைப் பார்த்ததும் எப்படி இருக்கும் சொல்லுங்க. ஒரே அலங்கோலம். அப்படியே தலையில கையை வெச்சிட்டு உட்கார்ந்திட்டேன். பெரியண்ணா என்னடான்னா யாருமே என் பேச்சை மதிக்கிறதில்லேன்னு விலகிப் போயிட்டார், திட்டறார். அக்கா கணவருக்கும் என் தம்பிக்கும் ஒரு கல்யாண வீட்டில வெச்சு வாய்த்தகராறு முற்றி கைகலப்பில முடியப்போய் விருந்தாளிகள் வந்து விலக்கி... அக்கா என்னன்னா தன் மகள் கல்யாணத்தில் தங்கை அதிகம் பங்கெடுக்கலேன்னு எரிச்சலாகி விரோதம் வளர்த்து...  மாமாவுக்கும் அம்மாவுக்கும் சுத்தமாப் பிடிக்கிறதில்லே சித்தப்பாவுக்கு எல்லாரோடும் பகையாகி,. எங்க குடும்பத்துக்கும் இவங்களுக்கும் எந்தத்  தொடர்பும் இல்லேன்னு சொல்லிட்டு இருக்காரு...”

 இன்னும் விலாவாரியாக அவன் பேசப்பேச, சரிதான், அவன் அயர்ச்சியின் விளிம்பில் இருப்பதில் எந்த வியப்புமில்லை. என்று தோன்றிற்று.

 “ஒரு காலத்தில் உங்க குடும்பத்தை, குடும்ப ஒற்றுமைக்கு உதாரணமா சொல்வாங்க...” 

 “அதெல்லாம் போச்சு தாத்தா... நிறைய தகராறு நடந்துவிட்டது. ஆளுக்கொரு பக்கம் கறுவிட்டு திரியறாங்க. இப்ப என் பிரசினை என்னன்னா இனி எப்படி இவங்களை ஒண்ணு சேர்க்கிறதுங்கிறதுதான்!” 

வாசலில் ஜனனி ஒவ்வொரு புள்ளியாக இட்டு கோலம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தபடியே தலை குனிந்து பேசினான். அவனுக்கு சொல்ல வேண்டியதை எப்படி சொல்வது என்ற யோசனை ஓடிற்று இவர் மனதில்.

“கொஞ்ச நேரம் இதைப் பாரேன்.”  நிமிர்ந்தான்.

“உனக்கான பதில் இதில் இருக்கிறது.”

“என்ன சொல்றீங்க தாத்தா?”

“அவ்வளவு பெரிய கோலத்தை அவள் எப்படிப் போட்டு முடிக்கிறா பார்த்தியா? முதல்லே ஆங்காங்கே சில புள்ளிகளை வைக்கிறா. அப்புறம் அதைக் கோடுகளால் சேர்க்கிறா. இப்படி ஒரு பகுதி கோலம் உருவாகுது. அடுத்து அதன் நீட்சியா ஒரு திசையில் சில புள்ளிகள். அதை சேர்த்தல். அப்படி மற்ற திசைகளிலும். சேர்க்கச் சேர்க்க அடுத்த கட்டங்கள் உருவாகிப் படர்ந்து அவ்வளவு பெரிய கோலம் மெல்ல உருவெடுக்குது.”

அவன் விழித்தான்.

“நீ இப்ப போட வேண்டியதும் இப்படி ஒரு கோலம்தான். முதல்ல சில புள்ளிகளை வை.”

 “புள்ளிகள்?”

 “ஆமா. அவங்களை ஒருங்கிணைக்கக்கூடிய புள்ளிகள்.”

“அதென்ன மாதிரி?”

 “இத பாரு, உன் தங்கை மகள் கணக்கில் வீக். உன் சித்தப்பாவோட நண்பர் பிரபல கணக்கு டீச்சர். அவரிடம் சித்தப்பா வழியா இவனுக்கு ட்யூஷன் ஏற்பாடு பண்ணினா அது ஒரு புள்ளி. உன் அத்தானுக்கு நண்பர் வட்டம் பெரிசு. அதில சில பேருக்கு பெரியண்ணாவோட இன்ஷூரன்ஸ் கம்பெனியில் ஆளுக்கொரு பாலிசி எடுத்துக் கொடுத்தால் அது ஒரு புள்ளி. அம்மாவோட அடுத்த காசி டூரை மாமா ஃபிரண்ட் நடத்தற டிராவல் ஏஜென்சியில் புக் பண்ணினா அது ஒண்ணு. இன்னும் நீயே யோசிச்சா தோணுகிற இப்படிப்பட்ட புள்ளிகள். அதை முதல்ல வை. அப்புறம் கோடுகளை இழு. அதாவது இப்படி தொடர்பு ஏற்பட்டதும் அதனால ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் சொல்ற நல்ல வார்த்தைகளை மட்டும் அந்த நபர்களிடம் சொல்கிறது தான் அது. அப்புறம் அடுத்த செட் புள்ளிகள். கோடுகள்.... இப்படியே அந்தக் கோலத்தைப் போட்டு முடிச்சிடலாம் நீ.”

மனக் கண்ணில் சுபம் தெரிய, “தாங்க் யூ தாத்தா!” என்றான் அவன்.
 
('அமுதம்' மே  2013 இதழில் வெளியானது.)
 <<>>
(படம்- நன்றி: கூகிள்)