Saturday, July 1, 2017

முக்கியமான இடங்கள்...

அன்புடன் ஒரு நிமிடம் - 117

ரொம்ப நாளைக்கு அப்புறம் வீட்டுக்கு வந்திருந்த நண்பர் சுதாகரைக் கண்டதும் சாத்வீகன் முகம் மலர்ந்தது. 
”வா, வா. ஆரு இது, உன் பேரனா?”
”ஆமா. நாலு வயசு. அவங்க அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் இவனை வெளியே அழைச்சிட்டுப் போக நேரம் இல்லே. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறான். அதான் நான்..” 
”நீ அந்த வேலையைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டாயாக்கும்? பேஷ். பேஷ்.”
பெருமையாக... ”வாராவாரம் இவனை அழைச்சிட்டு வெளியே கிளம்பிடுவேன். இவன் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களைக் காட்டறதுதான் என்வேலை.” 
உற்சாகமானார்...”வெரி குட். என்னென்ன இடமெல்லாம் அழைச்சிடுப் போனே?”
”எல்லாம்  தெளிவா ப்ளான் போட்டு... முதல் வாரம் பஜாருக்கு அழைச்சிட்டுப் போய் அங்கிருந்த கடைகளை எல்லாம் காட்டினேன். ரெண்டாவது வாரம் எங்க ஊர் பக்கம் கட்டியிருந்த புது ஓவர்பிரிட்ஜ். அரை கிலோ மீட்டர் நீளம் இருக்குமே, அங்கே.”
”அடுத்த வாரம்?”  
“ஊரிலிருக்கிற பெரிய மாலுக்கு... நல்லா சுத்திக் காட்டினேன். அப்புறம் போன வாரம் பஸ் ஸ்டாண்ட். இந்த வாரம் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்... ஒரு வழியா அவனுக்கு காட்ட வேண்டிய முக்கியமான இடங்களை எல்லாம்  காட்டிட்டேன்னு நினைக்கிறேன்.”
”அதாவது முக்கியமான?”
”ஆமா. முக்கியமான.”
”அந்த வார்த்தையை சொல்லணுமா? அப்படீன்னா... சரி நான் கேட்கறேன். உங்க ஊரில் ஒரு பெரிய ஆறு ஓடுதே, சுழியும் நுரையுமா... தண்ணி பொங்கிப் பொங்கிப் பாயுமே...அங்கே அழைச்சிட்டு போனியா?”
”இல்லே.”
”அது பக்கத்திலே.. நூற்றைம்பது வருஷம் இருக்குமா, அந்த பெரிய அரசமரம்? அங்கே?”
"இல்லே."
”ஊர் நிரம்பி வழியுதே தோப்புகள் ...ஒரு தென்னந்தோப்புக்கு? இளநீர் காய்ச்சுத் தொங்கற அழகு... உயர்ந்த மலைகளின் பின்னணியில் அமைந்த அந்த வயல் வெளிகள்...”
”இல்லே.”
”இதெல்லாம் அல்லவா நீ அவனுக்கு முதலில் காட்டவேண்டிய இயற்கை அழகின் மகிமைகள்? அறிமுகப்படுத்த வேண்டிய ஆண்டவன் படைப்பின் அருமைகள்?”
 எழுந்து கொண்டார். ”சே, எப்படி எனக்கு தோணாம போச்சு? இதோ இப்பவே ஆரம்பிச்சுடறேன்.”
><><
(”அமுதம்’ ஜூலை 2015 இதழில் வெளியானது)

Tuesday, June 20, 2017

அவள்... (கவிதைகள்)


411.
கானகத்து மரங்கள் இருளைப்
பொத்தி வைத்திருப்பது போல
மனதில் வைத்திருக்கிறேன் உன்னை.
><><

412
தேடப் பிடிக்கிறது எனக்கு
தேடவைக்கப் பிடிக்கிறது உனக்கு.
><><

413.
மாயச்சிரிப்பு...
எனக்கு மட்டுமாக
நீ சிரிப்பது.
><><

414.
இரு கரைகளையும்
இணைக்கிறது பாலம் நம்
இரு மனங்களையும் 
இணைக்கிறது காலம்.
><><

415.
உன் நினவலைகளினின்றும் 
கரையேற முடியாமல்
கவிதையேறிற்று மனம்.
><><

416.
வேறொன்றும் வேண்டாமென
மனசு சொல்லவே
அருகில் நீ.
><><

417.
கடைக்கண் தாவும் விழி
கடப்பது நாளில் பத்து கி.மீ.
><><

418.
எப்படி இலைகள் சரியாக அசைந்தாடி
உன்னை வரவேற்கின்றன
பூங்காவில் நீ நுழைகையில்?
><><

 419.
விரைந்து சென்றுவிட்டாய்
வியந்து நிற்கவைத்துவிட்டு.
><><

420.
என் எண்ண நதியலைகள்
சங்கமிக்கிறது உன்
இதயக் கடலில்.

><><><

Friday, June 16, 2017

நல்லதா நாலு வார்த்தை.... 82


'மனிதனை கொஞ்சமும் 
குறைவாக நேசிக்கவில்லை நான்,
ஆனால் இயற்கையை அதிகமாக.
-Lord Byron
('I love not man the less, but Nature more.')
<>

'செல்வம் என்பது வாழ்க்கையை
முழுவதுமாக அனுபவிக்க
முடிகிற திறமை.'
-Thoreau
('Wealth is the ability to fully experience life.')
<>

’உங்கள் திறமைகளை மறைக்காதீர். 
பயன்படவே அவை படைக்கப்பட்டன. 
நிழலில் சூரியக் கடிகாரம் என்ன பயன்?’
- Benjamin Franklin
('Hide not your talents. They were for use made
What's a sundial in the shade?')
<>

'நிலவை நோக்கிப் பாய்ந்திடு;
தவறவிடினும் இருந்திடுவாய்
தாரகைகளின் மத்தியில்.'
- Les Brown
('Shoot for the moon and if you miss
you will still be among the stars.')
<>

’என் வாழ்க்கை நெடுகிலும்
இயற்கையின் புதிய காட்சிகள் 
என்னை ஒரு குழந்தை போல 
குதூகலிக்க வைத்தன.’
- Marie Curie
(’All my life through, the new sights
of nature made me rejoice like a child.’)
<>
’பேசுவதற்கு இரு மடங்கு கேட்கலாம்
என்பதற்காகவே நமக்கு 
காதுகள் இரண்டும் வாய் ஒன்றும்.’
- Epictetus
('We have two ears and one mouth so that
we can listen twice as much as we speak.')
<>

'படிப்பதற்கு எளிதாகவிருப்பது
எழுதுவதற்கு மிக கஷ்டமானது.’
-Nathaniel Hawthorne
('Easy reading is damn hard writing')
<>

'இன்றைய அறிவியல் 
நாளைய தொழில்நுட்பம்.’
-Edward Teller
('The science of today is the technology of tomorrow.')
<>

'இளைஞனாக இருக்கையில் நான்
வாழ்க்கையில் ஆக முக்கியமான விஷயம்
பணம் என்று எண்ணியிருந்தேன்;
இப்போது எனக்கு வயதாகவே, 
அறிகிறேன் அதுவேதான் என்று.'
- Oscar Wilde
('When I was young I thought that money
was the most important thing in my life;
now that I am old I know that it is.')
<>

'காதலின் உணவு
இசையென்றானால் அதை
வாசித்துக்கொண்டேயிரு.'
- William Shakespeare
('If music be the food of love, play on.')

><><><