Saturday, July 1, 2017

முக்கியமான இடங்கள்...

அன்புடன் ஒரு நிமிடம் - 117

ரொம்ப நாளைக்கு அப்புறம் வீட்டுக்கு வந்திருந்த நண்பர் சுதாகரைக் கண்டதும் சாத்வீகன் முகம் மலர்ந்தது. 
”வா, வா. ஆரு இது, உன் பேரனா?”
”ஆமா. நாலு வயசு. அவங்க அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் இவனை வெளியே அழைச்சிட்டுப் போக நேரம் இல்லே. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறான். அதான் நான்..” 
”நீ அந்த வேலையைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டாயாக்கும்? பேஷ். பேஷ்.”
பெருமையாக... ”வாராவாரம் இவனை அழைச்சிட்டு வெளியே கிளம்பிடுவேன். இவன் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களைக் காட்டறதுதான் என்வேலை.” 
உற்சாகமானார்...”வெரி குட். என்னென்ன இடமெல்லாம் அழைச்சிடுப் போனே?”
”எல்லாம்  தெளிவா ப்ளான் போட்டு... முதல் வாரம் பஜாருக்கு அழைச்சிட்டுப் போய் அங்கிருந்த கடைகளை எல்லாம் காட்டினேன். ரெண்டாவது வாரம் எங்க ஊர் பக்கம் கட்டியிருந்த புது ஓவர்பிரிட்ஜ். அரை கிலோ மீட்டர் நீளம் இருக்குமே, அங்கே.”
”அடுத்த வாரம்?”  
“ஊரிலிருக்கிற பெரிய மாலுக்கு... நல்லா சுத்திக் காட்டினேன். அப்புறம் போன வாரம் பஸ் ஸ்டாண்ட். இந்த வாரம் மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்... ஒரு வழியா அவனுக்கு காட்ட வேண்டிய முக்கியமான இடங்களை எல்லாம்  காட்டிட்டேன்னு நினைக்கிறேன்.”
”அதாவது முக்கியமான?”
”ஆமா. முக்கியமான.”
”அந்த வார்த்தையை சொல்லணுமா? அப்படீன்னா... சரி நான் கேட்கறேன். உங்க ஊரில் ஒரு பெரிய ஆறு ஓடுதே, சுழியும் நுரையுமா... தண்ணி பொங்கிப் பொங்கிப் பாயுமே...அங்கே அழைச்சிட்டு போனியா?”
”இல்லே.”
”அது பக்கத்திலே.. நூற்றைம்பது வருஷம் இருக்குமா, அந்த பெரிய அரசமரம்? அங்கே?”
"இல்லே."
”ஊர் நிரம்பி வழியுதே தோப்புகள் ...ஒரு தென்னந்தோப்புக்கு? இளநீர் காய்ச்சுத் தொங்கற அழகு... உயர்ந்த மலைகளின் பின்னணியில் அமைந்த அந்த வயல் வெளிகள்...”
”இல்லே.”
”இதெல்லாம் அல்லவா நீ அவனுக்கு முதலில் காட்டவேண்டிய இயற்கை அழகின் மகிமைகள்? அறிமுகப்படுத்த வேண்டிய ஆண்டவன் படைப்பின் அருமைகள்?”
 எழுந்து கொண்டார். ”சே, எப்படி எனக்கு தோணாம போச்சு? இதோ இப்பவே ஆரம்பிச்சுடறேன்.”
><><
(”அமுதம்’ ஜூலை 2015 இதழில் வெளியானது)

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
இயற்கையின் கொடையினை ரசிப்போம்

vimalanperali said...

நல்ல கதை வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!