Friday, June 16, 2017

நல்லதா நாலு வார்த்தை.... 82


'மனிதனை கொஞ்சமும் 
குறைவாக நேசிக்கவில்லை நான்,
ஆனால் இயற்கையை அதிகமாக.
-Lord Byron
('I love not man the less, but Nature more.')
<>

'செல்வம் என்பது வாழ்க்கையை
முழுவதுமாக அனுபவிக்க
முடிகிற திறமை.'
-Thoreau
('Wealth is the ability to fully experience life.')
<>

’உங்கள் திறமைகளை மறைக்காதீர். 
பயன்படவே அவை படைக்கப்பட்டன. 
நிழலில் சூரியக் கடிகாரம் என்ன பயன்?’
- Benjamin Franklin
('Hide not your talents. They were for use made
What's a sundial in the shade?')
<>

'நிலவை நோக்கிப் பாய்ந்திடு;
தவறவிடினும் இருந்திடுவாய்
தாரகைகளின் மத்தியில்.'
- Les Brown
('Shoot for the moon and if you miss
you will still be among the stars.')
<>

’என் வாழ்க்கை நெடுகிலும்
இயற்கையின் புதிய காட்சிகள் 
என்னை ஒரு குழந்தை போல 
குதூகலிக்க வைத்தன.’
- Marie Curie
(’All my life through, the new sights
of nature made me rejoice like a child.’)
<>
’பேசுவதற்கு இரு மடங்கு கேட்கலாம்
என்பதற்காகவே நமக்கு 
காதுகள் இரண்டும் வாய் ஒன்றும்.’
- Epictetus
('We have two ears and one mouth so that
we can listen twice as much as we speak.')
<>

'படிப்பதற்கு எளிதாகவிருப்பது
எழுதுவதற்கு மிக கஷ்டமானது.’
-Nathaniel Hawthorne
('Easy reading is damn hard writing')
<>

'இன்றைய அறிவியல் 
நாளைய தொழில்நுட்பம்.’
-Edward Teller
('The science of today is the technology of tomorrow.')
<>

'இளைஞனாக இருக்கையில் நான்
வாழ்க்கையில் ஆக முக்கியமான விஷயம்
பணம் என்று எண்ணியிருந்தேன்;
இப்போது எனக்கு வயதாகவே, 
அறிகிறேன் அதுவேதான் என்று.'
- Oscar Wilde
('When I was young I thought that money
was the most important thing in my life;
now that I am old I know that it is.')
<>

'காதலின் உணவு
இசையென்றானால் அதை
வாசித்துக்கொண்டேயிரு.'
- William Shakespeare
('If music be the food of love, play on.')

><><><

Friday, May 26, 2017

ரெண்டு நிமிஷம்...

அன்புடன் ஒரு நிமிடம்... 116

உற்சாகம் ஒரு துளிகூட இன்றி காணப்பட்டான் வைபவ். வாசுவின் பக்கத்து வீட்டுப் பையன். எஞ்சினீயர். மனைவி, இரு குழந்தைகள். அடிக்கடி வீட்டுக்கு வருவான் இவரைப் பார்க்க. இவரிடம் ரொம்ப ஒட்டுதல்.
என்னப்பா என்று கேட்டபோது எல்லாரையும் போல, வேலை ஜாஸ்தி, டென்ஷன் என்றே எதிர்பார்த்த பதில்.. ஆனால் கொஞ்ச நேரம் அவனுடன் பேசியதுமே தெரிந்துவிட்டது அப்படியொன்றும் வேலைப்பளு இருக்கவில்லை என்று. வீட்டில் ஒன்றும் பிரசினை இல்லை. வேறு எதனால் இவன் இப்படி? எதனாலோ ஒரு வெறுமை...எப்படி இவனை சரிப் படுத்துவது?
“ஒரு வாக் போலாமா?” என்றவர் சொன்னதும் அவன் எழுந்தபோது செல் ஒலித்தது. எடுத்துப் பார்த்துவிட்டு அணைத்து விட்டான்.
”யார் அது? பேசியிருக்கலாமே?”
”ஃப்ரண்ட். அப்புறம் பேசலாம்னு...” காட்டினான் பெயரை’
பார்க்கலாமா என்று அதை வாங்கினார். 
கான்டக்ட் லிஸ்டை உயிர்ப்பித்தார். ”இது யார் அரவிந்த்?’
”என் பெரியண்ணா. என் மேல ரொம்பப் பிரியம்.”
”கடைசியா எப்ப அவருக்கு போன் பண்ணினே.. இரு பார்க்கிறேன் இதில...ஓ, நாலு மாசம் முந்தி.” இன்னும் புரட்டி, ”அஸ்வின்?”
”ஃப்ரண்ட். பத்து வருஷமா... சென்னையில இருக்கான். எப்ப போனாலும் இவனோடதான் தங்கறது...”
”ரெண்டு மாசம் முந்தி ரெண்டு நிமிஷம் பேசியிருக்கே.” புரட்டி... ”ராமாமிர்தம். இது உன் கல்லூரி ஆசிரியராச்சே? எனக்கு இவர்தான் வழிகாட்டின்னு..”
“அவரேதான். அவங்க பையன் கொஞ்ச நாள் முந்தி ஆக்ஸிடெண்ட்ல...”
“ஒரு மாசமா அவர்கிட்ட எதும் பேசலே போல. அப்புறம் வத்சலா கார்த்திக். அது யாரு?”
“ரயிலில் சந்திச்ச எழுத்தாளர். ரொம்ப ஃப்ரண்டாயிட்டாங்க.”
”இவங்களோடும் சமீபத்தில பேசினமாதிரி தெரியலியே?” 
தொடர்ந்து அழுத்திப் பார்த்த முக்கியமான நெருங்கிய பல பேர்களோடெல்லாம் அவன் பேசி  நாளாயிற்றென தெரிந்தது.
”என்னப்பா இது, அத்தனை பிரியமானவங்க..  அப்பப்ப அவங்களை அழைத்து ரெண்டு நிமிஷம் பேசறதில்லையா?”
”அது... எனக்கு... நேரம் கிடைக்கணுமில்லையா?”
”ரெண்டு நிமிஷம்கிறது ஒரு நேரமா என்ன... அதில்லை காரணம்!”
”சரி, அவங்களும் கூப்பிட்டு பேசணும் இல்லையா?”
”நாம மதிக்கிறவங்க, நேசிக்கிறவங்களோட பேசறதுக்கு பதிலுக்கு பதில் பார்க்கணுமாக்கும். நோ! இந்தா!” நீட்டினார் மொபைலை.
”பேசு இப்ப இதில ரெண்டு பேரோட. ஜஸ்ட் அஞ்சு நிமிஷம்... நாளைக்கு ரெண்டு பேர்.  தினம் இப்படி ஒரு வாரம் பண்றே. ப்ளீஸ்....  நான் சொன்னதுக்காக இதை செய்யறே. அடுத்த வாரம் உன்னை பார்க்கிறேன். சரியா?”
இவன் போனை உசுப்பியவாறே வெளியேறினான். .
அடுத்த வாரம் வந்தபோது அவனது கண்களில் அப்படியொரு உற்சாகம். மனதில் அகன்றிருந்த வெறுமை பேச்சில் தெரிந்தது.
><><><
(”அமுதம்’ ஜூன் 2015 இதழில் வெளியானது)

Saturday, May 13, 2017

அவள் - கவிதைகள்


401.
தெரிந்துகொள்ளத் துடிக்கிறேன்
தென்றல் உன் காதில் சொன்ன சேதி.

 402.
அழகை புவி ஈர்ப்பதில்லை போல..
அதனாலோ உன் கால்கள்
தரையில் படுவதில்லை?

403.
சந்தித்த நாளின் 
எந்தக் கணத்தைத் தொட்டாலும்
சிலிர்க்கிறது.

404
உன் கன்னங்களில் நீந்தும்
என் எண்ணங்கள்
கரையேறுகின்றன இதழோரமாய்.

405.
தெளித்திடும் பன்னீரில்
தெறித்திடும் மணம் போல
உன் பேச்சில் அன்பு...

406.
ஓடி ஓடிச் சென்று நிற்க முயலுகிறேன்
உன் மனம் செல்லும் இடங்களில்.

407.
எப்படிக் காட்சியளிக்க முடிகிறது
என்றும் புதிதாக?

408.
முதல் தேதி போல
நீ எனக்கு.
முப்பது நானுனக்கு.

409.
எத்தனையோ சத்தம்.
ஊஹூம்!
என் ஒரு சிறு கிசுகிசுப்பு
விழித்துக் கொள்கிறாய்.

410
தொடுவானத்துக்கு அப்பாலும்
நீள்கிறது உன் 
நினைவு.
><><