Wednesday, May 10, 2017

நல்லதா நாலு வார்த்தை... 81

'ஒரு பணக்காரர் ஆரோக்கியமாகத் திகழ ஒரே வழி
உடற்பயிற்சி, விரும்புவது தவிர்த்தல்
என்றொரு ஏழையைப் போல வாழ்தலே.'
-- Dr Paul Dudley White 
(’The only way for a rich man to be healthy is,
by exercise and by abstinence, to live as if he were poor.’)

'அளிப்பதன் ஆடம்பரம் அறிபவனாக
அவன் இருக்கவேண்டும் வறியவனாக.'
-George Eliot
('One must be poor to know the luxury of giving.')

'என்ன இன்று செய்கிறாயோ அ்து உன்
எல்லா நாளைகளையும் மேம்படுத்த முடியும்.'
-Ralph Marston
(‘What you do today can improve all your tomorrows.’)

'மூளும் கணங்களிடம்
முழுவதுமாகச் சரணடந்துவிட்டால்
இன்னும் சுகமாக வாழ்ந்திடலாம்
 அந்தக் கணங்களை நீ.'
-Anne Morrow Lindbergh
('If you surrender completely to the moments
as they pass, you live more richly those moments.')

'பகலவன் ஒளி நோக்கி
முகத்தை வைத்திருக்க,
பார்த்திட நேராது
இருள் எதையும் நீ.'
-Helen Keller
(‘Keep your face to the sunshine
and you cannot see a shadow.’)

'உங்கள் இதயத்தின் சுவாசங்களால்
 உங்கள் தாளை நிரப்புங்கள்.'
-William Wordsworth
(‘Fill your papers with the breathings of your heart.’)

'விண்,
விழிகளின் தின ஊண்.'
-Emerson
(‘The sky is the daily bread of the eyes.’)

’நேசி எல்லாரையும்,
நம்பிக்கை வை சிலரிடம்,
தவறிழைக்காதே யாருக்கும்.’
-William Shakespeare
{’Love all, trust a few, do wrong to none.’)

'நல்ல மனிதர்களின் 
இயல்பான விழைவு 
அறிவே.'
- Leonardo da Vinci
('The natural desire of good men is knowledge.')

ஆகக் குறைவாய் நம்மிடம்
அமைந்திருப்பது நேரமே.'
- Ernest Hemingway
('Time is the least thing we have of.')

><><><

Monday, May 8, 2017

ஆட்டத்தின் ஆட்டம்...

அன்புடன் ஒரு நிமிடம் - 115

”ஒரே டென்ஷனுங்க கொஞ்ச நாளாகவே... வரிசையா பிரசினை. என் பையனோட வியாபாரத்தில நஷ்டம். பேரனுக்கு ஸ்கூலில் திடீர்னு காரணமில்லாம வெளியே போக சொல்றாங்க. மனைவிக்கு அனீமியா வந்தது கொஞ்சமும் மட்டுப்பட மாட்டேங்குது. இப்படி ஒவ்வொண்ணா போராடி ... ஒரே சோர்வு.”
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் சாத்வீகன். வந்திருந்த சிவதாணு விலாவாரியாக அவரை முற்றுகையிடும் பிரசினைகளையும் அதை எதிர்த்து போராட முடியாமல் துவண்டு போவதையும் விளக்கினார்.
”எல்லாருக்கும் பிரசினைகள் வரும்தான். இல்லேன்னு சொல்லலே. ஆனால் இப்படி அடுக்கடுக்காக... தாங்க  முடியலே. ரொம்ப மனசு துவண்டு போகுது... சரியா சாப்பிட்டு ஒரு மாசமாகுது.”
அப்போது அபிஜித், இவர் பேரன், உள்ளே நுழைந்தான்.
”என்னடா இப்படி ... மேலெல்லாம் வேர்வை.. சட்டையெல்லாம் கசங்கி... அடிகிடி பட்டுட்டுதா?” 
சிரித்தான் கடகடவென்று. ”மூணு மணி நேரம்! சூப்பரா வெளையாடிட்டு வர்றேன்!”
”என்ன கேம்?”
”ஷட்டில்காக். நானும் சரவணனும். அந்தப் பக்கம் மாமாவும் கிருஷ்ணாவும். கேக்கணுமா? மாமா அடி தூள் கிளப்பறார். தாக்கு பிடிக்க முடியலே எங்களால.  ஓரொரு பந்தும் மட்டையை நிமிர்த்தறதுக்குள்ளே வந்து விழுது. பயங்கர டென்ஷன். குனிஞ்சு வளைஞ்சு காட்ச் பண்றதுக்குள்ளே... கால் இடறி கீழே விழுந்து எழுந்து அப்பாடா, முட்டி பேர்ந்துட்டது.” 
”சரி சரி, இன்னும் மூச்சு வாங்குது. மெதுவா பேசு.”
”அதெல்லாம் விளையாட்டில சகஜம் தாத்தா. மூச்சு வாங்க விளையாடினாத்தானே த்ரில்? நாலு தடவை விழுந்து எந்திரிச்சா தானே விளையாட்டு?”
போய்விட்டான்
”பார்த்தீரா?” என்றார் இவரிடம். ”நீங்க மூணு நாளா அனுபவிக்கிற டென்ஷனை இவன் மூணு மணி நேரத்தில இன்னொரு ரூபத்தில அனுபவிச்சிட்டு வர்றான். ஆனா ஆடறப்ப அந்த டென்ஷன் இவனை கஷ்டப் படுத்தலே. அதை பார்ட் அஃப் த கேம் ஆக எடுத்துக்கிட்டான். சமாளிக்கணும்! ஜெயிக்கணும்! அது ஒண்ணு தான் மனசில்! வெற்றியோ தோல்வியோ ஸ்கோரை வாங்கிட்டு வெளியேயும் வந்துட்டான்.” 
”வாழ்க்கையை விளையாட்டா எடுத்துக்கணும்னு சொல்றீங்களா?”
”இல்லை. வேறெப்படி எடுத்துக் கொண்டாலும் கஷ்டம்தான்கிறேன். விளையாட்டா எடுத்துக்க முடியாது. என்ன ஆகுமோ ஏது ஆகுமோன்னு தான் இருக்கும். ஆனா விளையாடறவனுக்கும் அந்த வினாடிகளில் அது என்ன ஆகுமோ ஏது ஆகுமோன்னுதானே இருக்கும்? என்ன வேணா ஆகட்டும்னு தன் திறமை மேலே நம்பிக்கையோட தன் சக்தியை திரட்டி தன் ஆட்டத்தை ஆடறான் அவன், ஜெயித்தாலும் தோற்றாலும் அடுத்த கேம் இருக்குன்னு... அதே நிலைதான் நமக்கும் இங்கே!  என்ன வேணா ஆகும். சக்தி இருக்கு, நம்பிக்கை இருக்கு, அவனுக்கில்லாதபடி யோசிக்க திட்டமிட அவகாசம் இருக்கு. அப்புறம் என்ன, நாமும் அதே எண்ணத்தில் ஆட வேண்டியதுதான் நம் ஆட்டத்தை! அந்த டென்ஷனை இயல்பாக எடுத்துக்கொண்டு நம்மை நாமே ரிலாக்ஸ் பண்ணிக்கலாமே?”

(”அமுதம்’ ஜூன் 2015 இதழில் வெளியானது)


Saturday, April 1, 2017

அவள் - கவிதைகள்

391.
என்னை எங்கோ கொண்டுபோன
உன் புன்னகை
திரும்பக் கொண்டு விடவேயில்லை.

 392.
எப்படித் தேர்ந்தெடுத்தேன் நான்?
வியப்பு நேரவில்லை.
எப்படித் தேர்ந்தெடுத்தாய் நீ?
வியப்பு தீரவில்லை.

393.
காலத்தைப் பூவாக்கி
கையில் தருகிறாய்...

394.
நீ சென்றதும் 
சிரித்தன மலர்கள்,
அப்பாடா,
அகன்றது போட்டியென.

395.
எத்தனை யாசித்தாலும் 
அத்தனை யோசிக்கிறாய்
ஒரு சிரிப்புக்கு முன்.

396.
இன்றைக்கு என்ன கிழமை?
கேட்காதே என்னை.
எல்லாமே உன் கிழமைகளாகிப் போனபின்
எப்படிச் சொல்வேன்?

 397.
வேறென்ன,
உன் அன்பின் உயரத்தைத்தான்
அளந்து சொல்லச் சொன்னேன் 
அந்த நட்சத்திரத்திடம்.

398.
கவிதை தோன்றவோர் 
இடமில்லை இதயத்தில்...
நீ நிறைந்திருப்பதால்.

 399.
வாசலில் நீ இட்ட கோலம்
மனசில் நீ நான் இட்ட கோலம்.

அவள் - 400.
பாதை நீ வகுத்தாய்,
பயணமானோம் நாம்.

><><