குப்பையிலும் மலரும் பூக்கள்…
கே.பி.ஜனார்த்தனன்
“ஏன் தாத்தா, குப்பைச் செடிக்கு ஏதாச்சும் விசேஷம் உண்டா?” கேட்டான் அபிஜித், “கிடையாது தானே?”
எட்டவே எட்டாத விஷயம் தன் ஐ.க்யூவுக்கு என்றால் அவன் ஓடி வருவது தாத்தாவிடம்தான்.
“சரி, நீ விஷயத்துக்கு வா,” என்றார் சாத்வீகன், “என்ன சந்தேகம் இப்போ?”
“நேற்று முழுக்க தலையைப் பிய்ச்சுக்கிட்டேன்…” என்று ஆரம்பித்தான் அபிஜித். “அப்பா அம்மாவோட நம்ம ஏகாம்பரம் மாமா வீட்டுக்கு போயிருந்தப்பதான்… அப்பா இருக்காரே அவர் திடீர்னு பேச்சுக்கு நடுவில் அம்மாவிடம், ‘வர்ற வழியில் பார்த்தியா, குப்பை மேலே செடி செடியா வளர்ந்து கிடந்ததே?’ன்னு கேட்டார். நார்மலா வீட்டிலே வெச்சு இப்படி எல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாம அவர் பேசறதே கிடையாது.”
“அப்படியா?”
“ஆமாங்கிறேன். எனக்கு புரியலே. என்ன தாத்தா இது? இந்த அப்பா என்ன இப்படி எல்லாம் பெனாத்த ஆரம்பிச்சிட்டாரு?”
“யோசிச்சுப் பாரு, புலம்பினாரா என்ன?”
யோசிக்கையில் அப்படி இல்லை என்று தோன்றிற்று.
”கொஞ்சம் விலாவாரியா சொல்லு. அப்ப என்ன பேசிட்டிருந்தாங்க?”
“அப்பா புது வீடு கட்டினப்ப வேலை முடியாம வெளியிலே வாங்கின கடனைப் பத்தி பேசிட்டிருந்தாங்க எல்லாரும். அது தப்புன்னு மாமா லெக்சர் விட்டுட்டிருந்தாங்க. அம்மா அப்ப ஏதோ ஒரு பாயிண்டை வேகமா சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்பதான் இவரு, ‘வர்ற வழியில பார்த்தியா, குப்பை மேலே செடி செடியா வளர்ந்து கிடந்ததே, பார்க்க அழகா இருந்ததில்லையான்னு…”
“அப்புறம்?”
“அம்மா ஒரு நிமிடம் முழிச்சாங்க. அப்புறம் ஆமா ஆமான்னு பதில் சொன்னாங்க. அப்பா மாமாகிட்ட ஏதோ பேச ஆரம்பிச்சிட்டாங்க. அம்மாவும் தொடர்ந்து மாமாவிடம் விட்ட இடத்திலிருந்து பேசினாள். நான்தான் தலையை பிய்ச்சிக்கிட்டேன்.”
ஒரு நிமிடம்தான் யோசனை செய்தார் தாத்தா. ”டே, உங்கப்பா விவரமான ஆளுதான். ஒரே வார்த்தையில் எக்கச்சக்கமான சூழ்நிலையை சரி பண்ணிட்டாரே? வீடு கட்ட கடன் வாங்கினதை மாமா விமர்சிக்கிறார். அது அவர் ஐடியா. நம்மைக் குற்றம் சொல்ற மாதிரி அதில் வார்த்தைகள் விழுந்தாலும் அவருக்குள்ள அக்கறையில் பேசறார். அவரோட ஐடியாக்களை சொல்றார். அதிலுள்ள நல்லதை எடுத்துவிட்டு மற்றதை விட்டுடணும். அதை உபயோகிச்சு நாம மேம்பட முடியுமான்னு பார்க்கணும். இதான் அப்பாவோட மெசேஜ் அம்மாவுக்கு. அழகா கொடுத்துட்டார். அவளும் புரிஞ்சிட்டு தன் பேச்சைத் தகுந்தாற்போல மாத்திக்கிட்டா. ஐடியல் தம்பதிதான்!”
“என்ன தாத்தா இது? அதுக்கு குப்பை செடின்னு சொன்னால்?”
“குப்பையிலே வளர்ற செடி என்ன பண்ணுது? அதிலுள்ள நல்ல சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு, தான் அழகா வளருது இல்லையா?” என்று சிரித்தார் அழகாக.
அன்புடன் ஒரு நிமிடம் - 4
‘அமுதம்’ ஏப். 2012 இதழில்…
><><><><

No comments:
Post a Comment