Schindler’s List என்று சொன்னால் ஆஹா, ஆஸ்கார் வாங்கிய ஸ்பீல்பெர்க் படமாயிற்றே என்பீர்கள், Saving Private Ryan என்றால் ஓ,ரெண்டாவது ஆஸ்காரை ஸ்பீல்பெர்க் வாங்கிய படமாயிற்றே என்போம். ஆனால் அந்த ரெண்டு படத்துக்கும் ஒருவர் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆஸ்கார் வாங்கினார் என்பதும் ஓசைப்படாமல் அவையிரண்டும் சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த ஒளிப்பதிவுக்கான படங்களில் சேர்ந்து கொண்டன என்பதும் நாமறியோம்.
அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் தன் மாஸ்டர் டிகிரியை வாங்கிக் கொண்டவர் ‘Wild Flower’ என்ற டிவி படத்தில் ஒளியோடும் நிழலோடும் விளையாடியதைப் பார்த்து பிரபல Steven Spielberg தன்னோடு இணைத்துக் கொண்டார்.
“பார்த்தால் பிரமிக்கிற மாதிரி இமேஜ்களை அமைக்க வேண்டும் என்ற நோக்கம் எப்போதும் இருக்கும், ஆனால் கடைசியில் என் தலையாய கவனம் எல்லாம் அந்தக் காட்சியின் கதை ஓட்டத்திற்கு நேர்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான்,” என்று அவர் சொல்வது ஒளிப்பதிவாளர்களுக்கான பாட வரிகள்.
இதை அவர் எப்படிச் சாதிக்கிறார் என்றால் அந்தக் காட்சியின் கதையை அழுத்தமாகக் பிரதிபலிக்கிற மாதிரி, அந்தக் காட்சியில் நடிகர்கள் பிரதிபலிக்கும் உணர்ச்சிக்கு அடிக்கோடு இடுகிற மாதிரி தன் ஒளிப்பதிவை வைத்துக்கொள்கிறார். வேறெப்படி? நீங்களே சொல்லுங்க.
காமிராவை கவனிக்கிற மாதிரியெல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார். கண் எப்படி அந்த நேரம் பார்க்க வேண்டியதைப் பார்க்கிறதோ அப்படிச் சென்றுகொண்டிருக்கும் அவரது கேமரா. நின்று பார்த்து ரசித்து விட்டு வருகிற மாதிரி ஒரு திருப்தியைக் கொடுத்துவிடுவார் நமக்கு. ஒரு டைரக்டருக்கு இதைவிட வேறென்ன உதவி வேண்டும்?
வெறுமே துரத்திக்கொண்டு ஓடாது காமிரா. துரத்திக்கொண்டு ஓடுவதைப் பார்க்கும்போது நீங்கள் எதை எப்படிப் பார்ப்பீர்களோ அதை அப்படிப் பார்க்கும். ஒரு ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?
கேமராவை ரசிக்க இவர் படம் பார்க்க வேண்டாம். படத்தை ‘மேலும் மேலும் ரசிக்க’ இவர் படம் பார்க்க வேண்டும்! Backlighting ஐக் கொட்டிக் கொடுத்து காட்சிகளைத் தட்டிக் கொடுப்பார். வழக்கமான 180 டிகிரி ஷட்டருக்குப் பதிலாக 90, 45 டிகிரி உபயோகிப்பதன் மூலம் இன்னும் நறுக்காக யதார்த்தமாக...
இவரது படங்களைப் பாருங்கள். பனி மூட்டங்களையும் பலகணி வழி பாயும் ஒளிக்கற்றைகளையும் கொண்டு தன் காட்சிகளைப் பின்னியிருப்பார். எந்தக் கோணத்தில் காட்டினால் ஏற்படுத்த வேண்டிய உணர்ச்சி அப்படியே ஏற்படுமோ அந்தக் கோணத்தில்... நடிகர்கள் மீது பாய வேண்டிய ஒளியையும் நிழலையும் எங்கே எத்தனை வேண்டுமா அங்கே அத்தனை துளி பிசகாமல்... ஒளிப்பதிவு என்றாலே நிழலுக்கும் ஒளிக்கும் உண்டான விகிதம்தானே?
நடிகர்களில் எங்கே, எப்படி நிறுத்துவார் என்று தெரியாது, ஆனால் பார்க்கிறபோது அழகாக இருக்கும். முகம் ஒரு புறம் திரும்பும்போது காமிரா இன்னொருபுறம் திரும்பும் அழகு… ‘Catch Me If You Can’ படத்தில் Leonardo DiCaprio ஃபிரேமுக்கு ஃபிரேம் விசேஷ அழகுடன் ஜொலிப்பதை எப்படி மறக்க முடியும்?

No comments:
Post a Comment