ஆஸ்கார் சரித்திரத்திலேயே மூன்று முறை சிறந்த நடிகர் ஆஸ்கார் வாங்கிய ஒரே ஒருவர் தான் உண்டு. மார்லன் பிராண்டோ? இல்லை. ஸ்பென்சர் டிரேஸி? டஸ்டின் ஹாஃப்மேன்? ரிச்சர்ட் பர்ட்டன்? பீட்டர் ஓ டூல்? பால் நியூமேன்? இவங்க யாரும் இல்லை.
Daniel Day-Lewis ஆம், ஆறு முறை நாமினேஷன் பெற்று மூன்று முறை அகாடெமி அவார்ட். (My Left Foot 1990, There will be Blood 2008, Lincoln 2013)
ஏற்றுக் கொண்டதெல்லாம் பெரும்பாலும் உணர்ச்சிகரமான, ஆர்ப்பரிக்கிற ரோல்கள். ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியில் நாடக நடிகராக இருந்து வந்தவர், நாடகத்தின் நேரடி த்ரில்லை திரையில் அனுபவிக்க வைத்து விடுவார்.
ஆக்ரோஷமாக கத்துவதில் ஓர் அழகு, அழகாக உச்சரிப்பதில் ஓர் அமரிக்கை, அமரிக்கையாக காதலிப்பதில் ஒரு ஸ்டைல்!
சிறுவயதில் மற்ற பசங்களால் கேலி செய்யப்படுவதைத் தவிர்த்து தன் நேரத்தை மிமிக்ரி செய்வதில் செலவழித்ததுதான் நடிகர் ஆவதற்கு அடித்தளமிட்டது.
வெரைட்டி தான் இவர் forte. ரொம்பவே ஸெலக்டிவ், கேரக்டர்களைத் தேர்ந்தெடுப்பதில். விதவிதமான கதாபாத்திரங்களிடையே வித்தியாசத்தை அனாயாசமாக காட்டுவார்.
நடிப்பில் துடிப்பைக் கொண்டுவர இவர் எடுத்துக் கொள்ளும் சிரமத்திற்கு எல்லை இல்லை. ‘The Ballad of Jack and Rose’ படத்தில் மனைவியைப் பிரிந்து பதின்ம வயது மகளுடன் தனியே வாழும் கேரக்டருக்காக இவர் மனைவியை விட்டு தனியே வசித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ‘Gangs of NewYork’ படத்தில் நடிக்கும்போது ஷூட்டிங் நாட்கள் முழுக்க நியூயார்க் பாஷையிலேயே பேசிக்கொண்டிருப்பார். படத்தில் நடித்து முடித்தபின் பாத்திரத்திலிருந்து வெளி வருவதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்வாராம்.
பிரபல நாடகாசிரியர் ஆர்தர் மில்லர் நாடகம் அது. ‘The Crucible’. அந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் அவர் மகளை காதலித்து மணந்தார்.
காவியம் அது. Cerebral palsy நோய் வாய்ப்பட்ட பையன். இடது காலை மட்டுமே சரியாய் இயக்க முடிகிறவன். எல்லாராலும் உதாசீனப் படுத்தப்பட்டவனை அரவணைக்கும் அன்னைக்கு அவனிடம் நம்பிக்கை. ஓவியனாக, எழுத்தாளனாக உருவாகிறான். ‘My Left Foot’ படத்தில். உலகின் தலைசிறந்த நூறு நடிப்புக்களில் 11-வதாக பிரிமியர் பத்திரிகை அதைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை.
2017-இல் 'Phantom Thread’ படத்தில் நடித்ததோடு திரைக்கு End Card போட்டார்.
சொன்னது: ‘உங்களுக்கென்று ஒரு ரிதம் இருக்கும். அதைக் கண்டு கொள்வதுதான் உங்களை அறிந்து கொள்வதில் ஒரு முக்கியமான விஷயம். என்னுடைய ரிதம் கொண்டுதான் நான் நடிக்கிறேன்..’
>><<
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!