Saturday, April 22, 2023

வாழ்வின் சோகம்... இலக்கிய வேகம்....


எந்த ஒரு மீட்டிங்கிலும் சரி, கூட்டத்தை நோக்கி, உங்களில் பள்ளிநாட்களில் ‘Jane Eyre’ படிக்காதவர்கள் விரல் உயர்த்துங்கள் என்று சொன்னால் விரல் உயர்த்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அத்தனை புகழ் பெற்ற அந்த (துணைப்பாடக்) கதையை எழுதியவர்...

Charlotte Bronte... ஏப்ரல், 21. பிறந்த நாள்.
கதையில் ஜேன் படும் துன்பங்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல, அதனை உருவாக்கியவர் வாழ்க்கையில் பட்டது. சின்னவயதில் கொண்டு விடப்பட்ட பள்ளி விடுதியில் சார்லெட்டும் 4 சகோதரிகளும் சந்தித்த கஷ்டங்கள்! தங்களில் இருவரைப் பறிகொடுத்தே மீண்டார்கள்
சார்லட்டுக்கு 10 வயது இருக்கும்போது அப்பா சில படை வீரர் பொம்மைகளை வாங்கி வந்தார். சகோதரிகள் அந்த பொம்மைகளுக்கு பெயரும், குணமும், உலவிட ஓர் உலகமும் கொடுத்தார்கள். அந்தக் கற்பனை உலகுக்கு Angria என்று பெயரிடப்பட்டது. அவர்களை வைத்து கதையும் கவியும் புனைந்தார்கள்.
ஆம், வாழ்வின் சோகத்திலிருந்து இலக்கியம்தான் அவர்களை வெளியில் எடுத்து சென்றது. பெண்கள் பெயரில் எழுதினால் வரவேற்பில்லை (ஆம் அப்படி ஒரு காலம் இருந்தது!) என்பதால் ஆண் புனைபெயர்களில் அவர்கள் எழுதினார்கள். அவர்களே வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு இரண்டு பிரதிகள்தாம் விற்றது என்றாலும் சோர்ந்து போகவில்லை.
சார்லட் அனுப்பி வைத்த கவிகளைப் பார்த்து அவர் திறமையை ஒப்புக்கொண்ட கவிஞர் Robert Southey, ஆனாலும் இதற்கெல்லாம் ஏது பெண்களாகிய உங்களுக்கு நேரம்? வேண்டாமே, என்று பதில் எழுதியதையும் பொறுத்துக் கொண்டார்.
எழுதிய முதல் நாவல் 9 முறை திரும்பி வந்தது. அடுத்ததுதான் Jane Eyre. உடனடி ஹிட்! by Currer Bell என்று வெளியிட்ட பப்ளிஷருக்கு அடுத்த வருடம் தான் தெரிந்தது அது பெண் என்று. மற்றொரு சகோதரியின் நாவலுக்கும் மகத்தான வரவேற்பு. ஆம், ‘Wuthering Heights’ எழுதிய Emily Bronte தான் அவர்.
தந்தையின் உடல்நிலை, தம்பியின் கடன் என்று பல தடைகள், அவர் தனக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள. தம்பியையும் இரு சகோதரிகளையும் ஒரே வருடத்தில் பறி கொடுத்தார். மூன்று முறை தனக்கு வந்த ப்ரப்போசல்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனவருக்கு இறுதியில் அந்த வாய்ப்பு கூடும்போது வயது 37 ஆகியிருந்தது. மாதங்களே நீடித்தது மண வாழ்க்கை. மறைந்தார் 38வது வயதிலேயே, தன் அம்மாவைப் போல.
Quotes இரண்டு...
‘பகைமையை வளர்க்கவோ மற்றவர் தவறுகளை பட்டியலிடவோ
நேரமில்லாத அளவுக்கு வாழ்க்கை எனக்கு மிகச் சிறியதாகத் தோன்றுகிறது.’
‘மனித இதயத்தில் ரகசியப் புதையல்கள் உண்டு. காப்பாற்றும் ரகசியங்களில். மூடி வைத்த மௌனத்தில். நினைவுகள், நம்பிக்கைகள், கனவுகள், சந்தோஷங்கள்... சொல்லிவிட்டால் அவற்றின் வசீகரம் நொறுங்கி விடும்!’

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!