நிகழ்வு 2. கப்பலில் திரும்பிக் கொண்டிருக்கிறார் அவர், ஐரோப்பாவிலிருந்து. சக பயணியான அமெரிக்க விஞ்ஞானி, எலெக்ட்ரோ மேக்னெடிஸத்தில் ஐரோப்பாவில் நடத்திய சோதனைகளைப் பற்றிச் சொல்லுகிறார். இவர் மூளையில் பளிச்! ‘தொலை தூரத்துக்கு சிக்னலைக் கொண்டு செல்ல உபயோகிக்கலாமே இதை?’ முயன்றார். தந்தியை முந்தி சிந்தித்தவர்கள் 36 வருடமாக 26 கம்பிகளுடன் போராடிக் கொண்டிருக்க, ஒரே கம்பிக்குள் கொண்டு வந்தார். அந்த Code -ஐ எழுதினார் Morse.
Samuel Morse…. இன்று பிறந்த நாள்!
Patent கிடைத்தாலும் patronage கிடைக்கவில்லை. ஆறு வருடம் போராடி அரசின் நிதி உதவி பெற்று அமைத்தார் ஒரு ஐம்பது மைலுக்குத் தந்திக் கம்பங்களை. உதவிக்கு போராடிய பேடண்ட் அதிகாரி மகள் அந்த பைபிள் வாசகத்தை சொன்னாள் முதல் தந்தியாக! ‘What hath God wrought?’
தந்திக்குப் பிந்திய விளைவுகள் அமோகம். சேதிகள் புறாக்களாகப் பறந்தன. யுத்தத்திலும் சத்தமில்லாமல் உதவிற்று சத்தமிட்டு! நிகழ்வுகளில் ஒன்று: லண்டனில் தன் காதலியை கொன்று விட்டு தப்பி ஓடுகிறான் ரயிலில் ஒருவன். தந்தியில் அடையாளம் கொடுக்கப்பட்டு அவன் இறங்கும் போது தயாராக அதிகாரிகள் ரயில்வே ஸ்டேஷனில்!
அடுத்த 30 வருடத்துக்குள் அமெரிக்கா நெடுகிலும் நீண்ட தந்திக் கம்பி, அட்லாண்டிக்கையும் நீந்திச் சென்றது ஐரோப்பாவுக்கு. முதல் டெலிக்ராமை விக்டோரியா ராணி தந்தியித்தார் அமெரிக்க அதிபர் Buchanan -க்கு.
ஆங்காங்கே போட்டிக் கம்பங்களை நாட்டிய கம்பெனிகளிடமிருந்து போராடிப் பெற வேண்டியதாயிற்று உரிமைகளை. கப்பலில் வந்த விஞ்ஞானியும்கூட சொந்தம் கொண்டாட, சக பயணிகளின் சாட்சியால் ஜெயித்தார். மில்லியன்களை சந்தித்தார். ஐரோப்பாவில் மட்டும் கிடைத்தது 400000 ஃப்ராங்குகள். (இவருக்குப் 18 வருட முன்பே வேறொருவர் கண்டுபிடித்துவிட்டார் தந்தியை என்றொரு 'வதந்தி'யும் உண்டு.)
சூபர் ஹிட் படம், A Beautiful Mind, அதில் Priceton University யில் வரவேற்று பேசும் புரஃபசர் ‘உங்களில் யார் மோர்ஸ் ஆகப் போகிறீர்கள்?’ என்பார்.
மரிப்பதற்குப் பத்து மாத முன் அவர் சிலையொன்றை நிறுவி, ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் கலந்துகொண்ட மோர்ஸ், உலக முழுதுக்கும் ஒரு தந்தியைக் கொடுத்தார்: ‘குட் பை!’.
><><><
No comments:
Post a Comment
உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!