Wednesday, July 7, 2021

கல்கண்டு இசை...


அந்தப்படத்தில் ஐந்து இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தினார் டைரக்டர் வசந்த். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று சொல்ல வைத்தது ஒவ்வொரு பாட்டும். அதில் இதயத்தை "தொட்டுத் தொட்டுச் செல்லும்..." அந்தப் பாட்டை இசையமைத்ததோடு பாடியும் அசத்தி தமிழ் திரைக்கு அறிமுகமானார் அவர்.

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்... இன்று பிறந்த நாள்!

'அழகிய தீயே' தான் இவரை பிரபலமாக்கியது. பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி பாந்தமாக அமைந்த படம். “சந்தனக் காற்றே…” “விழிகளில் அருகினில்…” ரெண்டுமே கல்கண்டு ரகம்.

“ஜீவன் எங்கே …”  ‘யூனிவர்சிடி’ படத்தில் வரும் பாடல். ஜீவனைத் தொட்டுச் செல்லும். இடையிசையில் அமர்க்களப் படுத்தியிருப்பார். 'ஜெர்ரி' படத்தின் ஹிட் "என் சுவாசத்தில் காதலின் வாசம் வீசவைத்ததாரோ.." 

இனி அவரின் அந்த அதி உன்னத முயற்சி. ‘ராமானுஜன்.’ 2014 இன் சிறந்த இசையாக ‘டெக்கான் மியூசிக்’ தேர்ந்தெடுத்த படம். க்ளாஸிகல் இசையும் வெஸ்டெர்னும் அந்தக் கதையின் காலத்திற்கேற்ப கலந்து ஓர் பவழ இசையைத் தவழ விட்டிருப்பார். 

“நாராயணா.. நாராயணா..” என்ற அந்தப் பாட்டை நீங்கள் ஒரு முறையாவது  கேட்க வேண்டும். அடுத்து  எத்தனை முறைகேட்பது என்பதை நீங்களே தீர்மானிப்பீர்கள். சுஹாசினி பாடி முடிந்து சின்ன இராமானுஜன் வந்து பாடும்போது பீட் மெல்லத் தாவி விட்டு இருக்கும் முழு வெஸ்டர்னுக்கு. 

உன்னி கிருஷ்ணன் பாடும் திருமழிசை ஆழ்வாரின் 'விண் கடந்த ஜோதியாய்..' பாடலாகட்டும், ("ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்...") ரமேஷே பாடும் நா. முத்துக் குமாரின்கனிவான 'துளி துளியாய்...' பாடலாகட்டும் கேட்க பரவசம்.

அப்புறம் அவரின் அந்த ஆகச் சிறந்த பாடல்... என்ன அதுன்னு கேட்பவருக்கு: “என்ன இது, என்ன இது என்னைக் கொல்வது?..."  கமலின் ‘நள தமயந்தி'யில் சின்மயியுடன் இவரே பாடியது. சரணத்தின் கடைசி வரி பல்லவியின் முதல் வரியாக மாறும் அதிசயம்! அந்த பிரில்லியண்ட் அரேஞ்ச்மெண்ட்! நான் ஸ்டாப்பாக ஒலிக்க விட்டு நாம் தூங்கிப் போகலாம் நல்ல கனவுகளை நாடி!

அதே படத்தில்தான் மாதவனும் ஷ்ருதிகாவும் ஆடும் அந்த அட்டகாச ஜாலி பாடலும்! "புக்காம் பொறந்தா மனுஷாளெல்லாம் ஒண்ணா சேருங்கோ… மாப்ளே பொண்ணில் யார்தான் சமர்த்து நன்னாப் பாருங்கோ.."

இவரின் பக்திப் பாடல் ஆல்பங்களில் எஸ். பி. பி. பாடிய "கிருஷ்ணா.. ஜனார்த்தனா..." அப்படியொரு உருக்கம்!

க்ளாஸிகல் மெலடி ஸ்டாப் பண்ண முடியாத அந்த "ஸ்டாப் த பாட்டு..." யுவன் இசையில் (தொட்டி ஜெயா) இவர் பாடியது என்றால் ‘என்னத்தை சொல்ல…” ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்.(‘என்றென்றும் புன்னகை’)


1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல் பகிர்வு சிறப்பு. சில பாடல்கள் கேட்டு ரசித்திருக்கிறேன்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!