Thursday, July 22, 2021

'இயக்குநரை' நமக்கு அறிமுகப்படுத்தியவர்

 


அந்த இளைஞன் கொண்டு வந்து கொடுத்த நாடகத்தை படித்துவிட்டு அசந்து போனார் டி. கே. சண்முகம் அவர்கள். ரொம்பச் சின்ன வயசாயிருக்கே, உண்மையிலேயே இவன்தான் அதை எழுதியிருப்பானா? ஒரு ஸீனை அங்கேயே வைத்து எழுதச் சொல்ல, உடனே எழுதி காட்ட... தன் மேல் ‘ரத்த பாசம்’ கொண்ட எழுத்தாளரை தமிழ் சினிமா கண்டுகொண்டது.

‘கல்யாண பரிசு’ தந்தார். வியந்து தீர்ப்பதற்குள் ‘விடிவெள்ளி’ முளைத்தது. ரசித்து முடிப்பதற்குள் ‘தேன் நிலவு’ வந்தது. சிரித்து ஓய்வதற்குள் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. திடுக்கிட்டு நிமிர்வதற்குள் ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ அமைத்தார். நெகிழ்ந்து நிற்பதற்குள் ‘காதலிக்க நேரமில்லை’ என்றார். சிரித்து தீர்ப்பதற்குள் ‘நெஞ்சிருக்கும் வரை’. நினைவில் அடைப்பதற்குள் ‘சிவந்தமண்’ படைத்தார். அசந்து நாம் நிற்க, ‘அழகை ஆராதித்துக்’ கொண்டிருந்தவருக்கோ ‘இளமை’ இன்னும் நெஞ்சில் ‘ஊஞ்சலாடுகிறது’.
ஶ்ரீதர்! 'இயக்குநரை' நமக்கு அறிமுகப்படுத்தியவர்..
இன்று பிறந்த நாள்!
தமிழ் திரையுலகுக்கு அவரளித்த முதல் கதையே யாரும் ‘எதிர்பாராதது.’ விமான விபத்தில் கண்ணை இழந்த இளைஞன் வீட்டுக்கு வந்து சேரும்போது காதலியை தன் அப்பாவின் மனைவியாக சந்திக்கிறான் என்ற ஒன்லைன்.
‘1960 களில் தமிழ் திரை உலகம்’ என்றும் சொல்லலாம். சுருக்கமாக ‘ஸ்ரீதர் பீரியட்’ என்றும் சொல்லலாம். ‘அலைகடலில் எங்களது சிறிய தோணி, கலையுலகில் எங்களது புதிய பாணி..’ என்று தன்னை அழகாய் அறிமுகப்படுத்திக்கொண்டது அவரின் சித்ராலயா.
உருக்கமான ஒரு சீனை கற்பனை பண்ணினால் போதும், அதை நறுக்குத் தெறித்தாற்போல் நாலு வசனங்களால் சுவையூட்டி, வித்தியாசமான கோணங்களில் ஷாட் பிரித்து, டிகிரி சுத்தமாக நடிப்பை வாங்கி, விறுவிறு இயக்கத்தினால் மெருகேற்றி நம் கையில் கொடுத்து விடுவார். இவர் படங்களில் எடிட்டர் பாடு ரொம்ப கஷ்டம். (பெரும்பாலும் என் எம் சங்கர்.) ட்ரிம் பண்றதுன்னா எங்கே கை வைக்கிறது? அத்தனை கரெக்டான ஷாட்கள்.
மாமன் மகள், யார் பையன், மாதர்குல மாணிக்கம், எங்கள் வீட்டு மகாலட்சுமி .. எல்லாம் சக்கை போடு போட்டபோது இந்த வசன இளைஞரை யாரும் கவனிக்கவில்லை. இளங்கோவன் புனரமைத்த திரை வசன பாணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது இவர்தான். 'உத்தம புத்திரன்' வசனம் பத்தி மொத்தமும் எழுதணும்னா இங்கே இடம் பத்தாது... அந்த பட்டாபிஷேக ஸ்பீச் ஒண்ணு போதுமே!
பாடல் காட்சிகளை படமாக்குவதில் இணை இல்லை. ‘நெஞ்சிருக்கும் வரை’யில் கடற்கரை சாலையில் சிவாஜி, முத்துராமன், கோபி அவங்க பாட்டுக்கு, எம்.எஸ்.வி. பாட்டுக்கு ஆடிக்கொண்டே வர, ட்ராலியில் நம்மை அழைத்துக்கொண்டு, (துளி கிரௌட் இல்லை ஃபீல்டில்) ஜங்ஷனுக்கு ஜங்ஷன் ஆடவைத்து... அத்தோடு திருப்திப்படுபவர் அல்லவே அவர்? லாரியை உபயோகித்தாரோ, இல்லை அசலையே கொண்டு வந்தாரோ, நடுரோட்டில் க்ரேன் ஷாட்டும் வைத்துவிட்டார்!
பெண் பார்க்க வந்திருக்கும் போது அடுத்த வீட்டில் காப்பி பொடி கடன் வாங்க ஓடும் ‘சுமைதாங்கி’ காட்சியாகட்டும், ( மிடில் கிளாஸ் ஃபீலிங்கை ஒரே காட்சியில்!) அரை அடி உயரத்தில் ஹெலிகாப்டர் சிவாஜியை அடித்துப் போட முயல்வதை பள்ளத்திலிருந்து காட்டி பிரம்மாண்டத்தை ஒரே காட்சியில் தரும் ‘சிவந்த மண்’ காட்சியாகட்டும் இவர் ரேஞ்ச் படுவிசாலம்! ‘சிவந்த மண்’ (நம்பியார் இதில் கம்பீரர்!) என்ன ஒரு ஸ்டைல் பீரியட் ஃபில்ம்!
‘விடிவெள்ளி’ விமர்சனத்தில் ‘விழுந்த யானை எழுந்தது’ என்று குறிப்பிட்டது குமுதம். பங்களா மாடியில் குதித்து சிவாஜி திருடச் செல்லும் அந்த அசத்தல் ஆரம்பக் காட்சிகள்! சிவாஜியின் யானைப் பசிக்கு சுமாராகவேனும் தீனி போட்ட சிலரில் முக்கியமானவர். அற்புதமான ஒரு இசையமைப்பாளர் தந்தார் நமக்கு: ஏ. எம். ராஜா.
சிவாஜி, முத்துராமன், விஜயா என்று யாருக்குமே துளி மேக்கப் இல்லாமல் இவர் எடுத்திருந்த அந்தப்படம் மட்டும் முழு வெற்றி பெற்றிருந்தால் பேன் கேக்குக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கும் ‘நெஞ்சிருக்கும் வரை’யோடு!
‘கா. நேரமில்லை’யில் நாம் பார்ப்பது ‘சிரிதர்’ என்றால் போலீஸ்காரன் மகளில் நாம் பார்ப்பது சீரியஸ்தர். ‘தேன் நிலவி’ல் காஷ்மீர குளிர் குன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது வைஜயந்திமாலாவிடம் ஜெமினி கேட்பார் குறும்பாக: ‘இன்னும் கொஞ்சம் மேலே போவோமா?’ அது ரொமான்டிக் ஸ்ரீதர்!
காட்சிகளை நயமாக அமைப்பதில் கில்லாடி. ‘Saathi’யில் (பாலும் பழமும்’ இந்தி) ராஜேந்திரகுமார். வைஜயந்திமாலா தம்பதி ஊட்டியில் உலாவும்போது சஷி கபூர் லவ் சீன் ஷூட்டிங் பார்த்து வெட்கப்படுவார் வைஜு அழகாக. ஹிந்தி திரையுலகத்திற்கு இவர் தந்த Nazrana, Dil Ek Mandir இரண்டு மைல் கல்லும் போதும் இதமாக வழிகாட்ட.
Wit and Wisdom கலந்த அவர் வசனங்களுக்கு சாம்பிள் சொல்றது கஷ்டம். அத்தனை அதிகமாக! ‘நெஞ்சிருக்கும் வரை’யில், ‘கொஞ்சம்கூட கண்கலங்காம ஒரு துளி கண்ணீர் கூட விடாம உன்னால எப்படிடா இருக்க முடியுது?’ன்னு கேட்கும் கோபியிடம் சிவாஜி: ‘வேதனையையும் துன்பத்தையும் சுமந்துகொண்டு என்ன மாதிரி கோடிக்கணக்கான பேர் இந்த உலகத்தில இருக்கிறாங்கடா, அத்தனைபேரும் கண்ணீர் சிந்த ஆரம்பிச்சா இந்த உலகமே அந்த கண்ணீரில மூழ்கிடும். Just to save the world, நான் கண்ணீரே சிந்தறதில்லே!’
இத்தனை எழுதிய பிறகும் அவரைப் பற்றி ஒன்றுமே எழுதாதது போல் தோன்றுகிறதே, அவர்தான் ஸ்ரீதர்!

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தகவல்களும் விவரிப்பும் மிகச் சிறப்பு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!