Friday, July 2, 2021

க்ளாஸ் ஜோக்குக்கு ஒரு கோபு...


காஞ்சனா கேட்கிறார் குட்டிப் பெண் மஞ்சுளாவிடம். "Tell me why a man is great?"

"A man is great because he alone can laugh at others and at himself." என்று பதில் வருகிறது.
'சாந்தி நிலையம்' படத்தில் வரும் கலகலப்பான இந்த ஆங்கில டயலாக் நினைவிருக்கிறதா?
52 வருடங்களுக்கு முன் எழுதியவருக்கு இன்று பிறந்த நாள்!
சித்ராலயா கோபு. சிரிப்பு ஆள் ஐயா கோபு என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தோம். மகிழ்ந்தோம்.
ஜோக் எல்லாம் சும்மா க்ளாஸா இருக்கும். தமிழ்த் திரைக்கு ஶ்ரீதரும் இவருமாக அளித்த நகைச்சுவை வண்ணம் கொஞ்சமா?
கட்ட பொம்மன் வசனத்தை எப்படி உணர்ச்சி பொங்கக் கேட்டார்களோ அதேபோல ‘கல்யாண பரிசு’ வசனங்களை சிரிப்பு பொங்க மீண்டும் மீண்டும்!
‘காதலிக்க நேரமில்லை’ பற்றி சொல்லவே வேண்டாம். எழுதுவதற்கு இடமில்லை, அதில் வரும் நல்ல நகைச்சுவை அத்தனையையும் எடுத்து!
காமெடி படத்தில் டயலாக் சற்று சீரியஸான விஷயம். கதையைக் கொண்டு செல்வதாவும் இருக்கணும். எழும் கேள்விகளை இயல்பாக விளக்குவதாகவும்! சங்கீதம் மாதிரி டயலாகிலேயும் ஒரு ப்ராக்ரஷன் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையா வரணும். அதே சமயம் கதைக்குத் தேவையில்லாமல் இருக்கக்கூடாது. இந்த இலக்கணத்துக்கு எடுத்துக் காட்டாக 100% சரியாக அமைந்த படம் ‘காதலிக்க நேரமில்லை’.
ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி என்று நிறைய படங்களில் தன் வசனத்தால் நம் விசனம் துடைத்தவர். காசேதான் கடவுளடா, அத்தையா மாமியா, ராசி நல்ல ராசி என டைரக் ஷனிலும் டிஸ்டிங்ஷன் காட்டினார்.
என்னைக் கவர்ந்த அந்த ஒன்று… காமெடி, காதல், தத்துவம் என அவரது முழு வீச்சையும் ரசித்தது ‘சாந்தி நிலைய'த்தில்தான்.
சாலையில் சந்திக்கும் கோப ஜெமினியிடம் காஞ்சனா சொல்லும் கோபு டயலாக்: “அந்தஸ்தில இருக்குற உங்கள மாதிரி பணக்காரங்க வாழ்க்கையில முன்னேற மேலே போகும்போது சந்திக்கறங்ககிட்ட கொஞ்சம் அன்பா நடந்துக்கணும். காரணம், கீழே வரும்போது மறுபடியும் அவங்களை சந்திக்க வேண்டியதா இருக்கும்!”
“அனுசூயா டீச்சர்னு வந்தாங்களே, அவங்களும் வேலையைவிட்டு போய்ட்டாங்களா?”ன்னு ஜெமினி கேட்க, நாகேஷ்: வந்தாளே அனுசூயா! புருஷனை விவாகரத்து பண்ணிட்டு, பெத்த இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இங்க வந்தா. நம்ம வீட்டு குழந்தைகளைப் பார்த்தவுடனே அந்த குழந்தைகளே பெட்டர்னு புருஷனோட போயிட்டா!”
தனியே நிற்கும் காஞ்சனாவிடம், ‘என்ன மாலதி, இருட்டைக் கண்டாலே பயப்படுவியே’ன்னு கேட்கும் ஜெமினியிடம், “வாழணும்கிற நம்பிக்கைகளும் ஆசைகளும் மனசில நிறைஞ்சி இருந்தப்ப நான் பயத்தை உணர்ந்தேன். ஆனால் இப்ப நான் இருட்டைக் கண்டு பயப்படறதில அர்த்தமே இல்லை.”
“என்ன திடீர்னு இந்த விரக்தி மனப்பான்மை?”
“என்னைப்போல அனாதைகள்கிட்ட நிரந்தரமாக உறவாடுவது விரக்தி ஒண்ணுதானே?”
“காலையில உன்னை கடுமையாக பேசிட்டேன், என்ன மன்னிச்சிடு மாலதி.”
“எப்பவுமே மன்னிப்பு கேட்கிறது அடுத்து செய்ய இருக்கிற தப்புக்கு அஸ்திவாரம்னுதான் நான் நினைக்கிறேன்!”
குழந்தைகளைப் பற்றி காஞ்சனா ஜெமினியிடம் சொல்லும் அந்த ஆழமான அட்வைஸ்: “அவங்கள நீங்க கடுமையான நடத்தறதினால நீங்க வீட்டில் இல்லாத போது சுதந்திர உணர்ச்சியில விஷமங்களைக் கொஞ்சம் அதிகமாக செய்யறாங்கன்னு நினைக்கிறேன். குழந்தைங்க எப்போதுமே மலரைப் போல மிருதுவானவங்க. மலர்ல இருக்கிற முள்ளை நீக்க அதைத் தீயில போட்டால் கருகிவிடும் இல்லையா? வேறுவிதமா தானே எடுக்க முயற்சி செய்யறோம்? அதைப்போலத்தான் நாம குழந்தைகளை அவங்க போற போக்குல போய்த்தான் நம்ம வழிக்கு கொண்டு வரணும்!”
“மலருங்கறீங்க, முள்ளுங்கறீங்க, வாத்தியார் வேலைக்கு வர முன்னாலே எங்கேயாவது தோட்டவேலை பார்த்தீர்களா?” என்று நாகேஷ் கேட்பது அதையும் மென் காமெடிக்கு நகர்த்தும்!
சிகரமாக நாகேஷின் அந்த காலட்சேப காட்சி! “குறும்புக்கார கோவிந்தன் நம்ப கிருஷ்ணன் ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் இருந்தார்... உப்புமா ஒரு குண்டா! உருளைக்கிழங்கு போண்டா! காப்பி ஒரு அண்டா! குடிக்க டம்பளர் கொண்டா!... ஆப்பம் அறுபது! அதிரசம் அறுபத்தெட்டு!... பத்தாதா? இத்தனைக்கும் மேலே ஒரு தார் வாழைப்பழம் அதையும் சாப்பிட்டுட்டு உண்ணாவிரதம் இருந்தார்!” என்று தொடங்கி கோபியர் கதைக்கு வந்து “கோபியரே, கோபியரே, கேளுங்கோடி.. கோபாலகிருஷ்ணனை பாருங்கோடி! குளத்திலே குளிக்கையில் கண்ணன் புடவையை எடுத்தே ஓடிச் சென்றான்! தம்மாத்துண்டு பயலுக்கு தில்லைப் பாத்தியா”ன்னு அமர்க்களப்படுத்துவாரே… அது!

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

முகநூலில் படித்து ரசித்தேன். இங்கேயும் சேமிப்பது நல்ல விஷயம்.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!