Thursday, July 1, 2021

தென்றலாக நுழைந்தவர்...

 





‘பக்கயிந்தி அம்மாயி’.. 1953 இல் வந்த  தெலுங்குப் படம். எதிர் மாடியில் தரிசனம் தரும் அஞ்சலி தேவியோ கானப் பிரியை. காதலிக்கும் ரேலங்கிக்கோ பாட வராது. நண்பர்கள் ஒரு பாடகரை அழைத்து வருகிறார்கள்.  கட்டிலில் அமர்ந்து ரேலங்கி வாயசைக்க கட்டிலுக்குக் கீழே அமர்ந்து ஆக்சுவலாகப் பாடுவார் அந்த பாடகர். பாடகராக நடித்ததும் பாடியதும்..

நம் ஏ.எம்.ராஜா… இன்று பிறந்த நாள்!

தென்னிந்திய சினிமாவில் தென்றலாக நுழைந்தவர்… தன் இசையால் தென்றலை வீசவும் செய்தவர். இவரது பாடகர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா இசையமைப்பாளர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா? மயக்கத்தைத் தவிர்க்க முடியாது. இரண்டிலும் ஏகத்துக்கு சாதித்திருப்பதால்.

கல்யாணப்பரிசு படத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக நின்றது பட்டுக்கோட்டையாரின் எட்டுப் பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா தந்த இசை.

“காலையும் நீயே.. மாலையும் நீயே..” என்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் இன்றைக்கும் அதன் பாடல்களை. ஆம் இசைக்கென்றே அவதரிக்க படம்.. ‘தேன்நிலவு.’

கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டும் இரண்டு கைகளில்! ஆடிப்பெருக்கின் இசை சொல்லும்.  “தனிமையிலே இனிமை காண முடியுமா..” “காவேரி ஓரம் …”

இவருடைய progression ( பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வரும் இசை) கனகச்சிதமாக, மிகச் சரியான வாத்தியங்கள் கொண்டு ஏராளம் வயலின்களுடன் ஒரு முழுமையான orchestration ஆக இருக்கும். “மலரே மலரே தெரியாதோ…” பாடலிலும் சரி,   “புரியாது..வாழ்க்கையின் ரகசியம் புரியாது..” பாடலிலும் சரி அதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு சின்ன மாற்றம் கூட செய்வதை விரும்ப மாட்டார் என்பார்கள் என்றால் அந்த அளவு ஒரு பர்ஃபெக் ஷனுடன் அது இருக்கும்.

பிபி ஸ்ரீனிவாஸின் மிக அருமையான பாடல்களில் ஒன்று இவர் இசையில் அமைந்த “பண்ணோடு பிறந்தது தாளம்…” (விடிவெள்ளி) சீர்காழி கோவிந்தராஜனின் முத்துக்களில் ஒன்று “அன்னையின் அருளே வா..” அதுவும் இவர் இசையமைத்ததே. (‘ஆடிப்பெருக்கு').

இசையமைத்த ‘அன்புக்கோர் அண்ணி’ யில்தான் அந்த சூப்பர் ஹிட். “ஒரு நாள்.. இது ஒரு நாள்.. உனக்கும் எனக்கும் இது திருநாள்..”

“ஆடாத மனமும் ஆடுதே..” என்றிவர் பாடினால் ஆடாத மனமும் ஆடும்! “பாட்டு பாட வா..” என்று பாடினால் பாடாத வாயும் பாடும் கூடவே.  “அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே..” தென்றல் போல் மிதந்து வரும் பாடல். “வாராயோ வெண்ணிலாவே..” பாடலின் அந்தக் குழைவு! “அதிமதுரா.. அனுராகா..” பாடலின் அதிமதுரம்! (எங்கள் குடும்பம் பெரிசு) “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..” விருந்தானது காதலர்களுக்கு அப்போது. “எல்லாம் உனக்கே தருவேனே.. இனிமேல் உரிமை நீதானே…” பெண்களின் மனதை அள்ளிக் கொண்டது.

வளமான குரல் இருந்ததால் வாய்ப்புக்காக ரொம்ப சிரமப்படத் தேவை இருக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஜெமினி படம், கேவி மகாதேவனின் ‘குமாரி' என்று பாட ஆரம்பித்து ஹெலிகாப்டராக உயர்ந்தார். இங்கிருந்து இந்திக்குப் போன முதல் பாடகரும் இவர்தான்.

பிரிக்க முடியாதது? என்று கேட்டால் துள்ளிக் குதித்துக் கொண்டு வரும் பதில்: ஜெமினியும் இவர் குரலும். பாடகரே நடிகராக இருந்த காலம் மாறி நடிக்க மட்டும் நடிகர்கள் வந்தபோது ஜெமினி கணேசன் குரலின் இனிய பாதியாக இவர் இருந்ததை மறக்க முடியுமா? “கண்களின் வார்த்தைகள் புரியாதோ..” (களத்தூர் கண்ணம்மா) “தங்க நிலவில் கெண்டை இரண்டும்..” (திருமணம்) “வாடிக்கை மறந்ததும் ஏனோ..”

எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சத்யன், பிரேம் நசீர் என்று நாலு மொழி நாயகர்களின் நாவசைப்புக்கும் பாடிக்கொண்டிருந்தவர். சிவாஜிக்கு “என்ன என்ன இன்பமே..” (அன்பு) “இடை கையிரண்டில் ஆடும்..” (விடிவெள்ளி) “திரைபோட்டு நாமே..” (ராஜா ராணி) “யாழும் குழலும் உன் மொழி தானோ..” (கோடீஸ்வரன்) என்றால் எம்ஜிஆருக்கு “கண்மூடும் வேளையிலே..” (மகாதேவி) “மாசிலா உண்மை காதலே..” “பேசும் யாழே பெண்மானே…” (நாம்) “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” (குலேபகாவலி) 

இதுபோன்று ஒரு மதுரமான குரலை ஆண்டவன் தேர்ந்தெடுத்து அவருக்குக் கொடுத்தது, வேறென்ன, நம்மைச் சில வருடங்கள் மகிழ்விக்கத்தான்! எத்தகைய சால மென் குரல் என்பதை எந்த பின் வாத்தியமும் இல்லாமல் வெறும் குரலில் ஆரம்பிக்கும் இவரது சில பாடல்களில் உணர்கின்றோம். “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்..” (மீண்ட சொர்கம்) என்று ஆரம்பிக்கும் போது.. “காலையும் நீயே மாலையும் நீயே..” (தேன் நிலவு)  “சிங்காரப் பைங்கிளியே பேசு..” (மனோகரா)

‘இல்லற ஜோதி’யில் “களங்கமில்லா காதலிலே..”  பாடலில் “நினைவிலே பேதமில்லை..” என்று இவர் என்ட்ரி ஆகும்போது ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே அதை உலகில் வெகு சில குரல்கள் தான் கொடுக்க முடியும்! அதேபோல் “இதய வானின் உதய நிலவே..” பாடலில் “இருளகற்றும் ஒளியென்றென்னை எண்ணும் நீயாரோ..” என்றும்! “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” வில் “பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே..”

ஜாலி பாடல்களிலும் கணீரென்று ஒலிக்கும் குரல்.. “கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை..” “ஓஹோ எந்தன் பேபி..” 

எம். எல். வசந்தகுமாரியிலிருந்து (“இன்பக் குயில் குரல் இனிமை..” - மனிதனும் மிருகமும்) ஜமுனாராணி வரை (“சந்தோஷமே தான் சங்கீதமாக..” - சந்தானம்)  சேர்ந்து பாடியவர்.  ஜி. ராமநாதன் முதல் சங்கர் கணேஷ் இசையில் வரை… ராஜா ஜிக்கி தாம் ஐம்பதுகளில் பிரபல பின்னணி ஜோடி. “அழகு நிலாவின் பவனியிலே..” இந்தப் பாடலைத் தொடர்ந்துதான் வாழ்விலும் இணைந்தது அந்த ஜோடி. 

ஒரிரு வரி பாடினாலும் உள்ளம் கவரும் குரல். “வெண்ணிலா நிலா.. என் கண்ணல்லவா கலா..” என்று இரு வரிதான் பாடுவார் ‘ஆரவல்லி'யில் “சின்னப் பெண்ணான போதிலே..’’ போதாதா? சில பாடல்களை இவர் பாடினால் கேட்போருக்கு ஏற்படும் உணர்வு மிகப் பிரத்தியேகமானது. அதற்கு உதாரணம் “என் நெஞ்சின் பிரேம கீதம்..” (பணம் படுத்தும் பாடு) 

எத்தனைக்கெத்தனை காதல் பாட்டுக்கு மன்னனோ அத்தனைக்கத்தனை சோகப்பாட்டுக்கும் அரசன். “மின்னல் போல் ஆகும் இந்த..”  “அன்பே நீ அங்கே..” “என் காதல் இன்பம் இதுதானா..” “அன்பே வா..” “உன்னைக் கண்டு நான் வாட…” எல்லாவற்றுக்கும் மேலே அந்த ஒரு பாடல்.. “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..” (மல்லிகா)

Re entry சில ஹிட்கள் தந்தது. ரங்கராட்டினம் படத்தில் வி குமார் இசையில் “முத்தாரமே உன் ஊடல் என்னவோ..” சங்கர் கணேஷ் இசையில் அன்பு ரோஜாவில் “ஏனடா கண்ணா..”   

வெகு காலத்துக்குப்பின் இவர் இசையில் வந்த ‘வீட்டு மாப்பிள்ளை’யில் அந்த அசத்தும் பாடல்! “மலரே ஓ மலரே..” என்னவொரு எழுச்சியும் வேகமும் அந்தக் குரலில்!

‘அம்மா என்னு ஸ்திரி’ மலையாள படத்துக்கு இசையமைத்தார். ‘பார்யா’ ‘அடிமைகள்’.. என்று ஜி. தேவராஜன் இசையில் ஏராளம் பாடல்கள் மலையாளத்தில்! “தாழம்பூ மணம் உள்ள தணுப்புள்ள ராத்திரியில்..” அங்கே சூபர்ஹிட்.

சில பாடல்களை இவர் தான் பாட முடியும் அத்தனை மென்மையாக… “பூவில் வண்டு போதை கொண்டு..” (அன்பு எங்கே) “போதும் உந்தன் ஜாலமே..” (கடன் வாங்கி கல்யாணம்)  “புதுமை நிலா அங்கே..” கோமதியின் காதலன்

ஒரு பாட்டின் உருக்கத்தை பாடகர் எத்தனை --- செய்ய முடியும்? சி. என். பாண்டுரெங்கன் இசையில் ‘எதிர்பாராதது' படத்தில் இவர் பாடிய  “சிற்பி செதுக்காத பொற்சிலையே..” யைக் கேளுங்கள்.

மிகப் பெரும் மியூசிக் டைரக்டராகத் திகழ்ந்திருக்க வேண்டியவர். தன்னுடைய straightforwardness காரணமாக வாய்ப்புகளைத் துறந்ததாக சொல்லுவார்கள். இழந்தது நாம்.


1 comment:

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை எத்தனை பாடல்கள் இவரது குரலில், இசையில்! பதிவில் சொல்லியிருக்கும் பல பாடல்கள் நானும் கேட்டு ரசித்த பாடல்கள். கேசட்டுகளில் பதிந்து இவரது பாடல்களாகவே பத்து கேசட்டுகளாவது இருந்திருக்கும் என்னிடம். இப்போது இணையத்தில் எல்லாம் கிடைக்கிறது என்பதால் அந்தக் கேசட்டுகள் அப்படியே அட்டைப்பெட்டிக்குள்!

தகவல்கள் பகிர்வு சிறப்பு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!