Friday, July 9, 2021

ஷோலேயின் ஜ்வாலை...


அவர் மட்டும் தன் பக்கத்தில் கிடக்கிற துப்பாக்கியை எடுத்துப் போட்டிருந்தால் தங்களைத் தாக்க வந்த கப்பர் சிங்கை மடக்கியிருப்பார்கள் தர்மேந்திராவும் அமிதாப்பும். ஆனால் அவர் செய்யவில்லை. ஏனென்று அவர் விளக்குவது படத்தின் ஜீவ நாடியான காட்சி. தன்னை சிறைக்கு அனுப்பிய அவரின் குடும்பத்தினரை கொலை செய்ததோடு நிற்கவில்லை கப்பர்சிங். நிற்க வைத்து அவர் கரங்களையும் அல்லவா துண்டித்து விட்டான்? காற்றில் போர்வை விலக அவரது கையறு நிலை புரிந்து அவர்கள் திகைக்க, இன்டர்வெல் கார்டு வேறெப்போதும் அத்தனை அட்டகாசமாக விழுந்ததில்லை. பத்துக் காட்சிகள் போலத்தான் அவருக்கு என்றாலும் படத்தின் சென்ட்ரல் காரெக்டர் அவர்தான் என்பதை அந்தப் பத்து நிமிட ஃபிளாஷ்பேக்கில் காட்டிவிடுவார். 

சஞ்சீவ் குமார். அவரில்லாமல் ‘ஷோலே’யில் ஜ்வாலை ஏது?

ஃபிலிமாலயா நடிப்புப் பள்ளியில் படித்து முடித்த கையோடு ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார். கண்டுகொள்ளப்படவில்லை. வில்லனாக நடித்தார். எல்லோரும் கை தட்டினர். அமோக பாராட்டு. ஆகிவிட்டார் ஹீரோவாக.

அந்தப் படம் ‘Sunghursh’. இரண்டு வில்லன்களில் ஒருவராக திலீப் குமாருடன் மோதும் காட்சிகளில் எல்லாரையும் தன்னைக் கவனிக்க வைத்தார். காரணம் அந்த அபாரமான நடிப்பும் அழுத்தமான உச்சரிப்பும்.

சஞ்சீவ் குமார்… இன்று பிறந்த நாள்!

மனைவியுடன் கனவுகளுடன் மாநகரில் வந்து இறங்கும் அவன். வீடு தேடி அலைகிறான். முன்கதைச் சுருக்கம் தெரியாமல் அந்த வீட்டில் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள். ஒரு மாதிரியான ஏரியா அது. இதற்கு முன்பு அங்கு தங்கியிருந்த பெண்ணும்! ராத்திரியானால் கதவைத் தட்டுகிறார்கள் கஸ்டமர்கள்! விரட்டித் தாங்கவில்லை. எப்படி இருக்கும் அவனுக்கு! வேறு வீடு தேடி அலைவதும் கிடைக்காமல் குமுறுவதும்..  அகலும் ஒவ்வொரு இரவையும் அகழியாகத் தாண்டுவதும்... அந்தப் பாத்திரத்தின் தவிப்பை வேறு யாராலும் அத்தனை பிரதிபலித்திருக்க முடியுமா? ராஜேந்திர சிங் பேடியின் ‘Dastak’ சஞ்சீவுக்கு நேஷனல் அவார்டு வாங்கித் தந்தது.

தங்களுக்கு பிறந்த குழந்தைக்கும் தங்களைப் போல் காது கேளாமல் இருந்து விடுமோ என்று தவிப்பில் கிலுக்கத்தை அதன் காதருகில் ஆட்டி ஆட்டி அவனிடம் சலனமில்லாததைப் பார்த்து (அப்போது அந்த கண்களில் தெரியும் பதைபதைப்பு!) துடிப்பதும், டாக்டர் வந்து காதருகே சுண்டிப் பார்த்துவிட்டு ஓகே என்ற பிறகும் நம்பாமல் விழிப்பதும், அந்தக் கிலுக்கத்தில் மணிகள் இல்லாததைக் டாக்டர் காட்ட, நிம்மதிக்கு  மீள்வதும்.. வசனமற்ற அந்த ரெண்டே நிமிட காட்சியில் கொண்டே சென்றுவிடுகிறார் இதயங்களை. குல்ஜாரின் ‘கோஷிஷ்’! அடுத்த இரண்டாவது வருடமே நேஷனல் அவார்டு வாங்கி தந்த படம்.

சவால் ரோல்கள் அவருக்கு அவல்.  நவராத்திரி, ராமன் எத்தனை ராமனடி, ஞான ஒளி, சாந்தி... இந்திக்கு போன சிவாஜி படங்களுக்கு வேறு சாய்ஸே இருக்கவில்லை இவர் இருந்ததால்.

சீரியஸ் ரோல் ஆனாலும் சரி 'சிரி'ஸ் ரோல் ஆனாலும் சரி சிறப்பாகச் செய்து விடுவார். ‘Pati, Patni aur Woh’, ‘Seeta aur Geeta’... படங்களில் தன் டைமிங் திறமையால் அசத்துவார்.

Aandhi, Mausam, Arjun Pandit… அடுக்கிக் கொண்டே போகலாம் அடையாளம் பதித்த படங்களை. சிகரமாக சத்யஜித் ரேயின் ‘Shatranj Ke Khilari’


2 comments:

ராமலக்ஷ்மி said...

சிறந்த நடிகரைப் பற்றி சிறப்பான பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

ஆந்தி மறக்க முடியாத படம். என்ன பாடல்கள்....

தகவல் பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!