Saturday, July 31, 2021
சிறுமிக்கு எழுதிய கதை..
Saturday, July 24, 2021
ஆடவும் பாடவும் நடிக்கவும்...
பத்து வயது மகனுடன் தனியே வாழும் ஹோட்டல் பணிப்பெண் மாரிஸா. அறையை கிளீன் செய்யும் போது தோழி சொன்னாள் என்று அங்கிருந்த உயர்ரக ஆடை ஒன்றை அணிந்து பார்க்கிறாள். அப்போது அங்கே வரும் கிரிஸ், செனட்டர் தேர்தலுக்கு நிற்க இருப்பவர், தான் சந்திக்க வந்த கரோலின் ஆக அவளை நினைத்து விடுகிறார். அவளாலும் மறுக்க முடியவில்லை. அவளது பையனை அவருக்குப் பிடித்த போக, இருவரிடையேயும் மெல்லிய காதல் அரும்புகிறது. மேலும் தவறை நீடிக்க விடாமல் அவள் தடுப்பதற்குள் அவர் கண்டுபிடித்து விடுகிறார்.சீறுகிறார். இருந்த வேலையும் போகிறது அவளுக்கு. தடுமாறி நிற்கிறாள். ஒரு நாள் நிருபர்களை சந்திக்க வரும் கிரிஸ்சிடம் எல்லோரும் கேள்வி கேட்கும்போது குட்டி பையனும் ஒரு கேள்வி கேட்கிறான், ‘மனிதர்கள் தவறு செய்தால் மன்னிக்கப் படலாமா?’ என்று. மனம் மாறியவர் மாரிஸாவைத் தேடி வருகிறார். மூவரும் ஒன்று சேர்கிறார்கள்.
Thursday, July 22, 2021
'இயக்குநரை' நமக்கு அறிமுகப்படுத்தியவர்
அந்த இளைஞன் கொண்டு வந்து கொடுத்த நாடகத்தை படித்துவிட்டு அசந்து போனார் டி. கே. சண்முகம் அவர்கள். ரொம்பச் சின்ன வயசாயிருக்கே, உண்மையிலேயே இவன்தான் அதை எழுதியிருப்பானா? ஒரு ஸீனை அங்கேயே வைத்து எழுதச் சொல்ல, உடனே எழுதி காட்ட... தன் மேல் ‘ரத்த பாசம்’ கொண்ட எழுத்தாளரை தமிழ் சினிமா கண்டுகொண்டது.
Friday, July 9, 2021
ஷோலேயின் ஜ்வாலை...
அவர் மட்டும் தன் பக்கத்தில் கிடக்கிற துப்பாக்கியை எடுத்துப் போட்டிருந்தால் தங்களைத் தாக்க வந்த கப்பர் சிங்கை மடக்கியிருப்பார்கள் தர்மேந்திராவும் அமிதாப்பும். ஆனால் அவர் செய்யவில்லை. ஏனென்று அவர் விளக்குவது படத்தின் ஜீவ நாடியான காட்சி. தன்னை சிறைக்கு அனுப்பிய அவரின் குடும்பத்தினரை கொலை செய்ததோடு நிற்கவில்லை கப்பர்சிங். நிற்க வைத்து அவர் கரங்களையும் அல்லவா துண்டித்து விட்டான்? காற்றில் போர்வை விலக அவரது கையறு நிலை புரிந்து அவர்கள் திகைக்க, இன்டர்வெல் கார்டு வேறெப்போதும் அத்தனை அட்டகாசமாக விழுந்ததில்லை. பத்துக் காட்சிகள் போலத்தான் அவருக்கு என்றாலும் படத்தின் சென்ட்ரல் காரெக்டர் அவர்தான் என்பதை அந்தப் பத்து நிமிட ஃபிளாஷ்பேக்கில் காட்டிவிடுவார்.
சஞ்சீவ் குமார். அவரில்லாமல் ‘ஷோலே’யில் ஜ்வாலை ஏது?
ஃபிலிமாலயா நடிப்புப் பள்ளியில் படித்து முடித்த கையோடு ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார். கண்டுகொள்ளப்படவில்லை. வில்லனாக நடித்தார். எல்லோரும் கை தட்டினர். அமோக பாராட்டு. ஆகிவிட்டார் ஹீரோவாக.
அந்தப் படம் ‘Sunghursh’. இரண்டு வில்லன்களில் ஒருவராக திலீப் குமாருடன் மோதும் காட்சிகளில் எல்லாரையும் தன்னைக் கவனிக்க வைத்தார். காரணம் அந்த அபாரமான நடிப்பும் அழுத்தமான உச்சரிப்பும்.
சஞ்சீவ் குமார்… இன்று பிறந்த நாள்!
மனைவியுடன் கனவுகளுடன் மாநகரில் வந்து இறங்கும் அவன். வீடு தேடி அலைகிறான். முன்கதைச் சுருக்கம் தெரியாமல் அந்த வீட்டில் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள். ஒரு மாதிரியான ஏரியா அது. இதற்கு முன்பு அங்கு தங்கியிருந்த பெண்ணும்! ராத்திரியானால் கதவைத் தட்டுகிறார்கள் கஸ்டமர்கள்! விரட்டித் தாங்கவில்லை. எப்படி இருக்கும் அவனுக்கு! வேறு வீடு தேடி அலைவதும் கிடைக்காமல் குமுறுவதும்.. அகலும் ஒவ்வொரு இரவையும் அகழியாகத் தாண்டுவதும்... அந்தப் பாத்திரத்தின் தவிப்பை வேறு யாராலும் அத்தனை பிரதிபலித்திருக்க முடியுமா? ராஜேந்திர சிங் பேடியின் ‘Dastak’ சஞ்சீவுக்கு நேஷனல் அவார்டு வாங்கித் தந்தது.
தங்களுக்கு பிறந்த குழந்தைக்கும் தங்களைப் போல் காது கேளாமல் இருந்து விடுமோ என்று தவிப்பில் கிலுக்கத்தை அதன் காதருகில் ஆட்டி ஆட்டி அவனிடம் சலனமில்லாததைப் பார்த்து (அப்போது அந்த கண்களில் தெரியும் பதைபதைப்பு!) துடிப்பதும், டாக்டர் வந்து காதருகே சுண்டிப் பார்த்துவிட்டு ஓகே என்ற பிறகும் நம்பாமல் விழிப்பதும், அந்தக் கிலுக்கத்தில் மணிகள் இல்லாததைக் டாக்டர் காட்ட, நிம்மதிக்கு மீள்வதும்.. வசனமற்ற அந்த ரெண்டே நிமிட காட்சியில் கொண்டே சென்றுவிடுகிறார் இதயங்களை. குல்ஜாரின் ‘கோஷிஷ்’! அடுத்த இரண்டாவது வருடமே நேஷனல் அவார்டு வாங்கி தந்த படம்.
சவால் ரோல்கள் அவருக்கு அவல். நவராத்திரி, ராமன் எத்தனை ராமனடி, ஞான ஒளி, சாந்தி... இந்திக்கு போன சிவாஜி படங்களுக்கு வேறு சாய்ஸே இருக்கவில்லை இவர் இருந்ததால்.
சீரியஸ் ரோல் ஆனாலும் சரி 'சிரி'ஸ் ரோல் ஆனாலும் சரி சிறப்பாகச் செய்து விடுவார். ‘Pati, Patni aur Woh’, ‘Seeta aur Geeta’... படங்களில் தன் டைமிங் திறமையால் அசத்துவார்.
Aandhi, Mausam, Arjun Pandit… அடுக்கிக் கொண்டே போகலாம் அடையாளம் பதித்த படங்களை. சிகரமாக சத்யஜித் ரேயின் ‘Shatranj Ke Khilari’
Wednesday, July 7, 2021
கல்கண்டு இசை...
அந்தப்படத்தில் ஐந்து இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தினார் டைரக்டர் வசந்த். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று சொல்ல வைத்தது ஒவ்வொரு பாட்டும். அதில் இதயத்தை "தொட்டுத் தொட்டுச் செல்லும்..." அந்தப் பாட்டை இசையமைத்ததோடு பாடியும் அசத்தி தமிழ் திரைக்கு அறிமுகமானார் அவர்.
இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்... இன்று பிறந்த நாள்!
'அழகிய தீயே' தான் இவரை பிரபலமாக்கியது. பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி பாந்தமாக அமைந்த படம். “சந்தனக் காற்றே…” “விழிகளில் அருகினில்…” ரெண்டுமே கல்கண்டு ரகம்.
“ஜீவன் எங்கே …” ‘யூனிவர்சிடி’ படத்தில் வரும் பாடல். ஜீவனைத் தொட்டுச் செல்லும். இடையிசையில் அமர்க்களப் படுத்தியிருப்பார். 'ஜெர்ரி' படத்தின் ஹிட் "என் சுவாசத்தில் காதலின் வாசம் வீசவைத்ததாரோ.."
இனி அவரின் அந்த அதி உன்னத முயற்சி. ‘ராமானுஜன்.’ 2014 இன் சிறந்த இசையாக ‘டெக்கான் மியூசிக்’ தேர்ந்தெடுத்த படம். க்ளாஸிகல் இசையும் வெஸ்டெர்னும் அந்தக் கதையின் காலத்திற்கேற்ப கலந்து ஓர் பவழ இசையைத் தவழ விட்டிருப்பார்.
“நாராயணா.. நாராயணா..” என்ற அந்தப் பாட்டை நீங்கள் ஒரு முறையாவது கேட்க வேண்டும். அடுத்து எத்தனை முறைகேட்பது என்பதை நீங்களே தீர்மானிப்பீர்கள். சுஹாசினி பாடி முடிந்து சின்ன இராமானுஜன் வந்து பாடும்போது பீட் மெல்லத் தாவி விட்டு இருக்கும் முழு வெஸ்டர்னுக்கு.
உன்னி கிருஷ்ணன் பாடும் திருமழிசை ஆழ்வாரின் 'விண் கடந்த ஜோதியாய்..' பாடலாகட்டும், ("ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்...") ரமேஷே பாடும் நா. முத்துக் குமாரின்கனிவான 'துளி துளியாய்...' பாடலாகட்டும் கேட்க பரவசம்.
அப்புறம் அவரின் அந்த ஆகச் சிறந்த பாடல்... என்ன அதுன்னு கேட்பவருக்கு: “என்ன இது, என்ன இது என்னைக் கொல்வது?..." கமலின் ‘நள தமயந்தி'யில் சின்மயியுடன் இவரே பாடியது. சரணத்தின் கடைசி வரி பல்லவியின் முதல் வரியாக மாறும் அதிசயம்! அந்த பிரில்லியண்ட் அரேஞ்ச்மெண்ட்! நான் ஸ்டாப்பாக ஒலிக்க விட்டு நாம் தூங்கிப் போகலாம் நல்ல கனவுகளை நாடி!
அதே படத்தில்தான் மாதவனும் ஷ்ருதிகாவும் ஆடும் அந்த அட்டகாச ஜாலி பாடலும்! "புக்காம் பொறந்தா மனுஷாளெல்லாம் ஒண்ணா சேருங்கோ… மாப்ளே பொண்ணில் யார்தான் சமர்த்து நன்னாப் பாருங்கோ.."
இவரின் பக்திப் பாடல் ஆல்பங்களில் எஸ். பி. பி. பாடிய "கிருஷ்ணா.. ஜனார்த்தனா..." அப்படியொரு உருக்கம்!
க்ளாஸிகல் மெலடி ஸ்டாப் பண்ண முடியாத அந்த "ஸ்டாப் த பாட்டு..." யுவன் இசையில் (தொட்டி ஜெயா) இவர் பாடியது என்றால் ‘என்னத்தை சொல்ல…” ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்.(‘என்றென்றும் புன்னகை’)
Friday, July 2, 2021
க்ளாஸ் ஜோக்குக்கு ஒரு கோபு...
காஞ்சனா கேட்கிறார் குட்டிப் பெண் மஞ்சுளாவிடம். "Tell me why a man is great?"
Thursday, July 1, 2021
தென்றலாக நுழைந்தவர்...
‘பக்கயிந்தி அம்மாயி’.. 1953 இல் வந்த தெலுங்குப் படம். எதிர் மாடியில் தரிசனம் தரும் அஞ்சலி தேவியோ கானப் பிரியை. காதலிக்கும் ரேலங்கிக்கோ பாட வராது. நண்பர்கள் ஒரு பாடகரை அழைத்து வருகிறார்கள். கட்டிலில் அமர்ந்து ரேலங்கி வாயசைக்க கட்டிலுக்குக் கீழே அமர்ந்து ஆக்சுவலாகப் பாடுவார் அந்த பாடகர். பாடகராக நடித்ததும் பாடியதும்..
நம் ஏ.எம்.ராஜா… இன்று பிறந்த நாள்!
தென்னிந்திய சினிமாவில் தென்றலாக நுழைந்தவர்… தன் இசையால் தென்றலை வீசவும் செய்தவர். இவரது பாடகர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா இசையமைப்பாளர் பகுதியை பற்றி அதிகம் சொல்லவா? மயக்கத்தைத் தவிர்க்க முடியாது. இரண்டிலும் ஏகத்துக்கு சாதித்திருப்பதால்.
கல்யாணப்பரிசு படத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக நின்றது பட்டுக்கோட்டையாரின் எட்டுப் பாடல்களுக்கு ஏ.எம்.ராஜா தந்த இசை.
“காலையும் நீயே.. மாலையும் நீயே..” என்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் இன்றைக்கும் அதன் பாடல்களை. ஆம் இசைக்கென்றே அவதரிக்க படம்.. ‘தேன்நிலவு.’
கர்நாடக இசை, மேற்கத்திய இசை இரண்டும் இரண்டு கைகளில்! ஆடிப்பெருக்கின் இசை சொல்லும். “தனிமையிலே இனிமை காண முடியுமா..” “காவேரி ஓரம் …”
இவருடைய progression ( பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வரும் இசை) கனகச்சிதமாக, மிகச் சரியான வாத்தியங்கள் கொண்டு ஏராளம் வயலின்களுடன் ஒரு முழுமையான orchestration ஆக இருக்கும். “மலரே மலரே தெரியாதோ…” பாடலிலும் சரி, “புரியாது..வாழ்க்கையின் ரகசியம் புரியாது..” பாடலிலும் சரி அதைத் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு சின்ன மாற்றம் கூட செய்வதை விரும்ப மாட்டார் என்பார்கள் என்றால் அந்த அளவு ஒரு பர்ஃபெக் ஷனுடன் அது இருக்கும்.
பிபி ஸ்ரீனிவாஸின் மிக அருமையான பாடல்களில் ஒன்று இவர் இசையில் அமைந்த “பண்ணோடு பிறந்தது தாளம்…” (விடிவெள்ளி) சீர்காழி கோவிந்தராஜனின் முத்துக்களில் ஒன்று “அன்னையின் அருளே வா..” அதுவும் இவர் இசையமைத்ததே. (‘ஆடிப்பெருக்கு').
இசையமைத்த ‘அன்புக்கோர் அண்ணி’ யில்தான் அந்த சூப்பர் ஹிட். “ஒரு நாள்.. இது ஒரு நாள்.. உனக்கும் எனக்கும் இது திருநாள்..”
“ஆடாத மனமும் ஆடுதே..” என்றிவர் பாடினால் ஆடாத மனமும் ஆடும்! “பாட்டு பாட வா..” என்று பாடினால் பாடாத வாயும் பாடும் கூடவே. “அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே..” தென்றல் போல் மிதந்து வரும் பாடல். “வாராயோ வெண்ணிலாவே..” பாடலின் அந்தக் குழைவு! “அதிமதுரா.. அனுராகா..” பாடலின் அதிமதுரம்! (எங்கள் குடும்பம் பெரிசு) “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..” விருந்தானது காதலர்களுக்கு அப்போது. “எல்லாம் உனக்கே தருவேனே.. இனிமேல் உரிமை நீதானே…” பெண்களின் மனதை அள்ளிக் கொண்டது.
வளமான குரல் இருந்ததால் வாய்ப்புக்காக ரொம்ப சிரமப்படத் தேவை இருக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஜெமினி படம், கேவி மகாதேவனின் ‘குமாரி' என்று பாட ஆரம்பித்து ஹெலிகாப்டராக உயர்ந்தார். இங்கிருந்து இந்திக்குப் போன முதல் பாடகரும் இவர்தான்.
பிரிக்க முடியாதது? என்று கேட்டால் துள்ளிக் குதித்துக் கொண்டு வரும் பதில்: ஜெமினியும் இவர் குரலும். பாடகரே நடிகராக இருந்த காலம் மாறி நடிக்க மட்டும் நடிகர்கள் வந்தபோது ஜெமினி கணேசன் குரலின் இனிய பாதியாக இவர் இருந்ததை மறக்க முடியுமா? “கண்களின் வார்த்தைகள் புரியாதோ..” (களத்தூர் கண்ணம்மா) “தங்க நிலவில் கெண்டை இரண்டும்..” (திருமணம்) “வாடிக்கை மறந்ததும் ஏனோ..”
எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, என்டிஆர், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சத்யன், பிரேம் நசீர் என்று நாலு மொழி நாயகர்களின் நாவசைப்புக்கும் பாடிக்கொண்டிருந்தவர். சிவாஜிக்கு “என்ன என்ன இன்பமே..” (அன்பு) “இடை கையிரண்டில் ஆடும்..” (விடிவெள்ளி) “திரைபோட்டு நாமே..” (ராஜா ராணி) “யாழும் குழலும் உன் மொழி தானோ..” (கோடீஸ்வரன்) என்றால் எம்ஜிஆருக்கு “கண்மூடும் வேளையிலே..” (மகாதேவி) “மாசிலா உண்மை காதலே..” “பேசும் யாழே பெண்மானே…” (நாம்) “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” (குலேபகாவலி)
இதுபோன்று ஒரு மதுரமான குரலை ஆண்டவன் தேர்ந்தெடுத்து அவருக்குக் கொடுத்தது, வேறென்ன, நம்மைச் சில வருடங்கள் மகிழ்விக்கத்தான்! எத்தகைய சால மென் குரல் என்பதை எந்த பின் வாத்தியமும் இல்லாமல் வெறும் குரலில் ஆரம்பிக்கும் இவரது சில பாடல்களில் உணர்கின்றோம். “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்..” (மீண்ட சொர்கம்) என்று ஆரம்பிக்கும் போது.. “காலையும் நீயே மாலையும் நீயே..” (தேன் நிலவு) “சிங்காரப் பைங்கிளியே பேசு..” (மனோகரா)
‘இல்லற ஜோதி’யில் “களங்கமில்லா காதலிலே..” பாடலில் “நினைவிலே பேதமில்லை..” என்று இவர் என்ட்ரி ஆகும்போது ஏற்படும் சிலிர்ப்பு இருக்கிறதே அதை உலகில் வெகு சில குரல்கள் தான் கொடுக்க முடியும்! அதேபோல் “இதய வானின் உதய நிலவே..” பாடலில் “இருளகற்றும் ஒளியென்றென்னை எண்ணும் நீயாரோ..” என்றும்! “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..” வில் “பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே..”
ஜாலி பாடல்களிலும் கணீரென்று ஒலிக்கும் குரல்.. “கொடுத்துப் பார் பார் உந்தன் அன்பை..” “ஓஹோ எந்தன் பேபி..”
எம். எல். வசந்தகுமாரியிலிருந்து (“இன்பக் குயில் குரல் இனிமை..” - மனிதனும் மிருகமும்) ஜமுனாராணி வரை (“சந்தோஷமே தான் சங்கீதமாக..” - சந்தானம்) சேர்ந்து பாடியவர். ஜி. ராமநாதன் முதல் சங்கர் கணேஷ் இசையில் வரை… ராஜா ஜிக்கி தாம் ஐம்பதுகளில் பிரபல பின்னணி ஜோடி. “அழகு நிலாவின் பவனியிலே..” இந்தப் பாடலைத் தொடர்ந்துதான் வாழ்விலும் இணைந்தது அந்த ஜோடி.
ஒரிரு வரி பாடினாலும் உள்ளம் கவரும் குரல். “வெண்ணிலா நிலா.. என் கண்ணல்லவா கலா..” என்று இரு வரிதான் பாடுவார் ‘ஆரவல்லி'யில் “சின்னப் பெண்ணான போதிலே..’’ போதாதா? சில பாடல்களை இவர் பாடினால் கேட்போருக்கு ஏற்படும் உணர்வு மிகப் பிரத்தியேகமானது. அதற்கு உதாரணம் “என் நெஞ்சின் பிரேம கீதம்..” (பணம் படுத்தும் பாடு)
எத்தனைக்கெத்தனை காதல் பாட்டுக்கு மன்னனோ அத்தனைக்கத்தனை சோகப்பாட்டுக்கும் அரசன். “மின்னல் போல் ஆகும் இந்த..” “அன்பே நீ அங்கே..” “என் காதல் இன்பம் இதுதானா..” “அன்பே வா..” “உன்னைக் கண்டு நான் வாட…” எல்லாவற்றுக்கும் மேலே அந்த ஒரு பாடல்.. “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..” (மல்லிகா)
Re entry சில ஹிட்கள் தந்தது. ரங்கராட்டினம் படத்தில் வி குமார் இசையில் “முத்தாரமே உன் ஊடல் என்னவோ..” சங்கர் கணேஷ் இசையில் அன்பு ரோஜாவில் “ஏனடா கண்ணா..”
வெகு காலத்துக்குப்பின் இவர் இசையில் வந்த ‘வீட்டு மாப்பிள்ளை’யில் அந்த அசத்தும் பாடல்! “மலரே ஓ மலரே..” என்னவொரு எழுச்சியும் வேகமும் அந்தக் குரலில்!
‘அம்மா என்னு ஸ்திரி’ மலையாள படத்துக்கு இசையமைத்தார். ‘பார்யா’ ‘அடிமைகள்’.. என்று ஜி. தேவராஜன் இசையில் ஏராளம் பாடல்கள் மலையாளத்தில்! “தாழம்பூ மணம் உள்ள தணுப்புள்ள ராத்திரியில்..” அங்கே சூபர்ஹிட்.
சில பாடல்களை இவர் தான் பாட முடியும் அத்தனை மென்மையாக… “பூவில் வண்டு போதை கொண்டு..” (அன்பு எங்கே) “போதும் உந்தன் ஜாலமே..” (கடன் வாங்கி கல்யாணம்) “புதுமை நிலா அங்கே..” கோமதியின் காதலன்
ஒரு பாட்டின் உருக்கத்தை பாடகர் எத்தனை --- செய்ய முடியும்? சி. என். பாண்டுரெங்கன் இசையில் ‘எதிர்பாராதது' படத்தில் இவர் பாடிய “சிற்பி செதுக்காத பொற்சிலையே..” யைக் கேளுங்கள்.
மிகப் பெரும் மியூசிக் டைரக்டராகத் திகழ்ந்திருக்க வேண்டியவர். தன்னுடைய straightforwardness காரணமாக வாய்ப்புகளைத் துறந்ததாக சொல்லுவார்கள். இழந்தது நாம்.
Doctors' Day!
உங்கள் உடல் அவருக்கொரு புத்தகம்.
உங்களுக்காக அவர் அதைப் படிக்கிறார்