Saturday, November 24, 2018

அதுவாகவே... (கவிதைகள்)

அதுவாகத் தோன்றும் ஒரு வரி.
(அதுவரை காத்திரு)
அதைத் தொடர்ந்து போ.
புதிதாகத் தோன்றும் ஒரு எண்ணம்.
பொறுத்திரு.
மெதுவாக வந்து சேரும் வார்த்தைகள்.
செம்மைப் படுத்திட...
சுவையாகத் தெரிந்தாலும்
மெதுவாக நிறுத்தி இனி
படிப்பவரிடம் விடு.
><><><


அமைதியைத் தேடி  
ஆயிரமாயிரம் தூரம் கடந்து
அமைதியுற்றது மனம் 
தன்னைக் கண்டு கொண்டு.

><><><

ஓய்ந்துவிட்டன நினைவுகள்,
அவை எழுப்பிய 
ஓசைகள் அடங்கவில்லை 
இன்னும்...
><><


மனம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறது..
மனம் பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறது..
><><


காற்றில் கலந்திருந்த
காலை மலரின் வாசத்தை
நுகர்ந்து மகிழ்ந்த மனம்
நாளைத் தொடங்குகிறது
நாவில் பாடலுடன்.
><><


தேங்கிக் கிடக்கும் குட்டையின் தெளிந்த நீரில்
ஓங்கித் தெறித்த கதிரொளிச் சிதறல்கள்
ஆங்காங்கே வளர் கரையோர நாணல்களின்
ஆடும் இலைகளில் விழுந்தும் விழாமலும் 
காட்டிடும் ஜாலமோ அவன் தரும் காட்சி!
><><


இன்னும் எத்தனை முறை இப்படி 
சிரிக்க முடியும் வாழ்வில் என்று நினைத்ததும்
சிரிப்பு சிறிதாகிறது...
இன்னும் எத்தனை முறை இப்படி
அழவேண்டும் வாழ்வில் என்றதும்
அழுகை பெரிதாகிறது.
><><

Friday, October 5, 2018

வாழ்க்கை... (கவிதைகள்)

  
1
வாழ்க்கை என்பது
வாழ்ந்து பார்ப்பது;
பார்த்து வாழ்வது.

2.
வாழ்க்கை -
வார்த்தைக்கு வசப்படாதது


3.
நிறையும்போதும் வாழ்க்கைதான்
குறையும்போதும் வாழ்க்கைதான்.


4.
வாழ்க்கை -
ஒரு நிமிடத்துக்கு
ஒரு நிமிடம் மட்டுமே
கிடைக்கும் இடம்.

5.
வாழ்க்கை:
கொட்டிக் கிடக்கிறது
உள்ளேயும் வெளியேயும்.


6.
தோற்பவனுக்கும்
உண்டு வாழ்க்கை.

7.
கற்றுக் கொடுக்கச் சென்றவன்
வாழ்க்கையைக்
கற்றுக் கொண்டு வந்தான்.


8.
வாழ்க்கை -
அதன் முதலிரு எழுத்து.

9.
வாழ்க்கை என்பது
வீதியோர சிறு நடை.

10.
வாழ்க்கை -
முட்களிடையேயும்
முளைத்திடும் புற்கள்.

><><><

Friday, September 28, 2018

ஒன்றமுடியாத ஒன்றிரண்டு... (கவிதைகள்)



ஒன்றமுடியாத ஒன்றிரண்டு...

குடி தண்ணீர் பிடிக்கிற வரிசையில்
நாலாவதாய் நின்ற அக்காவுக்கும்
எட்டாவதாய் நின்ற மாமிக்குமிடையே
ஒன்றரை மணி நேரமாய் ஓயாத
குழாயடிச் சண்டையைப்
பார்த்து அதிர்ந்து படிக்கத் திரும்பிய
சின்னப் பையன் சிவதாணுவுக்கு
இரண்டு ஹைட்ரஜனும் ஓர் ஆக்ஸிஜனும்
சேர்ந்ததுதான் தண்ணீர் என்பதைப்
புரிந்துகொள்ள சிரமமாயிருந்தது.

அவளும்…

பாத்திரத்தை எட்டிப்பார்த்தால்
கொஞ்சம்போல சோறு மிச்சமிருந்தது
பயல் இலையில மிச்சம் வெச்ச
பச்சடி ஒரு மொளறு
எடுத்துப்போட்டு சாப்ட்டதில
ஏழெட்டு மணி மாடாக வேலை செஞ்சதுக்கு
அமுதமாக...
அரை வயித்தை திருப்தியா நெரப்பி
அம்மா வந்து பாத்தபோது
அப்பாவுக்கோ கொழம்பு நல்லா வரல,
பயலுக்கோ தொவரம் உப்பு ஜாஸ்தி.

><><><




Monday, September 24, 2018

மழலை... (கவிதைகள்)


1
காலையில் மெத்தை விரிப்பை
உதற முடியவில்லை மடித்துவைக்க.
இரவில் சொன்ன கதைகள்  
குழந்தைகளிடம் பெற்ற
ஏராளம் ஆச்சரியக் குறிகள்
எங்கும் சிந்திக் கிடந்தமையால்.
><><

2
கதையில் வரும் ராஜகுமாரியாக
தன்னை நினைத்துக் கொள்ளும் குழந்தையிடம்
சொல்ல மனசே வரவில்லை
அவள் படும் கஷ்டங்களை.
><><

3
நான் அவளுடன் பேச
மழலை மொழியொன்றை
வைத்திருக்க,
அவள் பொம்மைகளுடன் பேச
பொம்மை மொழியொன்றை
வைத்திருக்கிறாள்.
><><

4
அத்தனை பொம்மைகளையும்
தாண்டி நீடிக்கிறது
குழந்தையின் அன்புவட்டம்.
><><

Saturday, September 22, 2018

அன்பு ஆறு! (கவிதைகள்)

அன்பு - 1
அதன் அகலத்துக்கு
எல்லையில்லை.

அன்பு - 2.
எப்போது எங்கே
எத்தனை பாயும்
எனத் தெரியாதது.

அன்பு - 3.
பெரு வெள்ளம்.
ஆபத்து இல்லை.

அன்பு - 4.
நில்லாமல் கவனியாமல்
புறப்படுவது.

அன்பு - 5.
விண்ணையும் இணைக்கும்
கண்ணுக்குத் தெரியாத
கயிறு.

அன்பு - 6.
குடைகளால் தடுக்க முடியாத
மழை.
><><

Tuesday, September 18, 2018

அவள்... (கவிதைகள்)

519
நீ என் முன் அமர்ந்திருக்கிறாய்
இந்தக் கணம் என் முன் விரிகிறது
இரு, இதை நான்
சேமித்து வைக்க வேண்டும்.

520
சொல்லத்தெரியாத வார்த்தைகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது
என் காதல்.

521
ஜன்னல் தெரியும் நிலவும்
எதிர்சீட்டில் நீயும்
என்னைக் குழப்புகின்றீர்கள்,
யார் எது என.

522
வெகு காலமாக வசிக்கிறோம் என்
வெளிப்படுத்தத் தெரியாத காதலும் உன்
அடக்கிக் கொள்ள முடியாத அன்பும்
சந்திக்கும் புள்ளியில்.

523
அத்தனை அழகுக்கு
என்னிடம் வார்த்தையில்லை
என்கிறது கவிதை.
(பி.கு.:அழகைக் குறைத்துக் கொள்,
அல்லது கவிதை கேட்காதே.)

524
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை,
சிறு சிறு ஊடல்களும்
சின்னச் சண்டைகளும்
இல்லாத நம் வாழ்க்கையை!

525
அசையாது நீ
அசைகின்ற என் மனம்

526
என்ன முயன்றும் என்னால் முடியாத,
எண்ண வேகத்துக்கு ஈடு கொடுக்க,
எப்போதும் முடிகிறது உன் அழகால் மட்டும்.

527
கற்பனை நின்றதும்
உன் மீதான
கனவுகள் தொடங்கின..

528
விழியாடும் அழகு.
அழகாடும் விழி.

><><

Wednesday, September 12, 2018

அவளுக்கொரு காரணம்... (நிமிடக்கதை)

அன்புடன் ஒரு நிமிடம் - 128

வந்ததும் வராததுமாக கேட்டார் ராகவ். "ஏம்மா கிஷோர் மீது உனக்கு ஏதாச்சும் மனத்தாங்கல்...?"

"ஏன் கேட்கறீங்க? அவர் ஏதாச்சும் சொன்னாரா? " யாழினியின் குரலில் யாதொரு ஆச்சரியமும் இல்லாததைக் கவனித்தார். டீ போட ஆரம்பித்தாள் அவருக்கு.

"ம்..என்னமோ அப்படியொரு எண்ணம் அவனுக்கு. நேரடியா விஷயத்துக்கு வர்றேன்.  போன மாசம் உனக்காக ஒரு வாஷிங் மெஷினும் கூடவே ஒரு டிரையரும் சர்ப்ரைஸா வாங்கிகொண்டு வந்து கொடுத்தானில்லையா?  நீ என்ன பண்ணினே? வாஷிங் மெஷினை மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை உன்னோட அக்காவுக்குக் கொடுத்திட்டே, இப்ப வேண்டாம்னு.   அதில அவனுக்கு வருத்தம். உனக்குக் கஷ்டம் குறையணுமேன்னு அல்லவா அவன் ஆசையோடு... ?”

”அது வந்து..”

”அதை விடு, அதுக்கு முன்னாடி ஒரு முறை உனக்கு ஒரு டிஷ் வாஷர் வாங்கிகொண்டு வந்தப்ப  நீ என்ன பண்ணினே... அது இப்ப வேணாம்னு சொல்லி அவன் தங்கைக்கு ப்ரசண்ட் பண்ணிட்டே.”

”ஆமா, பண்ணினேன்...” டீயை எடுத்து மேஜையில் வைத்தாள்.

”இப்படி அவன் உன் வேலை சௌகரியத்துக்கு என்ன வாங்கிக் கொடுத்தாலும் நீ அதை முழுமையா பயன் படுத்திக்கலைன்னு அவனுக்கு ரொம்பவே கவலை. மனசில உனக்கு அவன் மேலான வருத்தம் ஏதும் இருக்குமோன்னு தோணறதில என்ன ஆச்சரியம்?”

‘டீயை முதல்ல சாப்பிடுங்க,” என்றவள் சிரித்தபடி விளக்கினாள். ”எனக்கு வேலை சிரமமே இருக்கக் கூடாதுன்னு அவர் பார்த்துப் பார்த்து வாங்கித் தர்றாருதான். ஆனா முழுக்க முழுக்க எனக்கு வேலையே இல்லாம போயிட்டா எப்படி...எனக்கும் ஏதாச்சும் உடற்பயிற்சி வேண்டாமா? இல்லேன்னா  நான் சோம்பேறியாகி விடுவேன்... இந்த சின்ன வயசில், என்னால முடிகிற காலத்தில் நான் என்னால் முடிந்த அளவுக்கு வேலைகளை செய்து என்னைப் பழக்கிக் கொண்டால்தானே வயதான காலத்தில் நல்லது? உங்களுக்கே தெரியும், இப்பல்லாம் முன்னே மாதிரி கூட்டுக் குடும்பம் சான்ஸ் இல்லையே... நாளைக்கு நாமேதான் நம்மைப் பார்த்துக்கணும்கிற நிலை வந்தால் உதவுமில்லையா? அவர் வாங்கித்தந்த எல்லாத்தையும் பயன்படுத்தாம இப்படி சுருக்கிகொண்டது எனக்கு கைக்கு தேவையான அளவு வேலை கொடுக்குது. அதனால்தான்...”

அவளுடைய காரணத்தைக் கேட்டதும் அமைதியானார்.  ”நல்ல நோக்கம்தான். அப்ப அதை அவனிடமே சொல்லியிருக்கலாமே?”

”அவருக்கு என் கஷ்டம்தான் பிரதானம். இந்தக் கோணத்தில் அவரால பார்க்கமுடியாது. சம்மதிக்க மாட்டார். அதான் காரணம்லாம் சொல்லிட்டிருக்கலை. எப்படியும் உங்ககிட்டே  சொல்லுவார், கேட்பீங்க, சொல்லலாம், நீங்க அவருக்கு பக்குவமா எடுத்து சொல்வீங்கன்னு...நீங்க சொன்னால் சரின்னு சொல்லிடுவார்னு இருந்தேன்.”

”அவன் கொடுத்த வேலையை செய்ய வந்தால் நீ அதே வேலையைத் திருப்பிக் கொடுத்திட்டியே...” சிரித்தபடி சொன்னார்.
><><
('அமுதம்' செப். 2015 இதழில் வெளியானது)

Monday, September 10, 2018

அவள் - கவிதைகள்

509
நானும் என் கவிதைகளும்
இந்த இரவு முழுதும்
விழித்துக்கொண்டு.

510
அதரங்களின் அழகை
அதிகரிக்கும் கண்களா,
கண்களின் அழகை
அதிகரிக்கும் அதரங்களா?

511
கொண்டுவர முடியவில்லை,
நீ வார்க்கும் தோசையின்
விரியும் ஓசையை
என் கவிதையில்.

512
நாம் சந்தித்தபோதிருந்த
குளம் வற்றிவிட்டது..
மனம் இன்னும் நிரம்பியே.

513
உன் கண்ணின் ஒளியில்
என் முன்னே வழி.


514
குறுஞ்சிரிப்பே அதரங்களில்!
மீதியை கண்களே செய்துவிடுவதால்.

515
இன்னும் முடியவில்லை
சந்தித்த கணம்.

516
அழகான பூ எது
நதி எது, தெரியாது.
ஆனால் உலகிலேயே அழகான
புன்னகை உன்னுடையது.

517
நுணுக்கமாய் ஓர் மூளை அணு அசைய,
ஏதோ வயதில் மனதில் பதிந்த
எதுவோ ஓர் அழகுத் தடம்
இவள்தான் இவள்தான் என்று கூவ,
வேறு மறுத்த மனம்.

518
புன்னகையில் வளைந்து
மேலேறும் இதழ்க் கடையில்
உருவாகும் அதரப் படகு.

><><><